full screen background image

சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ‘பெட்டிக் கடை இன்று விடுமுறை’

சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ‘பெட்டிக் கடை இன்று விடுமுறை’

வெற்றி பட இயக்குநரான சமுத்திரக்கனி இப்போது நடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அவர் அடுத்து நடிக்கப் போகம் படத்தின் தலைப்பு பெட்டிக்கடை இன்று விடுமுறை. இது நெல்லை மண்ணைச் சேர்ந்த யதார்த்தமான மனிதர்களின் வாழ்க்கைக் கதை!

இன்று வாங்க நினைக்கிற பொருளை இருந்த இடத்திலிருந்து விரல் நுனி அசைவில் ஆன்லைனில் வாங்க முடிகிறது.  ஒரு காலத்தில் கடைகளைப் பார்ப்பதே அரிது. அந்தக் காலத்தில் இருபது ஊருக்கு ஒரு இடத்தில்தான் ஒரு பெட்டிக் கடையே இருக்கும். அது அன்று பிரபலமானதாக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். அப்படி ஒரு பெட்டிக் கடையை மையப்படுத்தி சுழலும் படம்தான் இந்த ‘பெட்டிக் கடை இன்று விடுமுறை’.

இப்படத்தில் காதல், கலகலப்பு நகைச்சுவை எல்லாம் இருக்கும். நெல்லை வட்டாரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை இது. புதுமுக இயக்குநர் இ.கார்வண்ணன். இப்படத்தை இயக்குகிறார். லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார். 

நாயகனாக ‘மொசக்குட்டி’ வீரா நடிக்க,  நாயகி உள்பட பலரும் புதுமுகங்களே. முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்க,  ஆர்.சுந்தர்ராஜன், செந்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு அருள். இசை – மரிய மனோகர். பிரபல எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

படம் பற்றி கூறிய இயக்குநர் கார்வண்ணன், “இது இன்றைய இளைஞர்களின் அப்பாக்களின் காதல் கதை என்று கூறலாம். அக்கால கட்டத்தின் அசல் தன்மையுடன்  மண்ணின் மணம் மாறாத யதார்த்த பதிவாக இது இருக்கும். படத்தில் வரும் கில்லி விளையாட்டு இரண்டு ஊர்ப் பகை வருமளவுக்கு கதையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது…” என்றார்.

ஜனவரி 19-ம் தேதி இதன் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. நெல்லை பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை நடத்தி முடிக்கவுள்ளார்கள்.

Our Score