full screen background image

“800′ படத்தில் நடிக்க வேண்டாம்” – விஜய் சேதுபதிக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா கோரிக்கை..!

“800′ படத்தில் நடிக்க வேண்டாம்” – விஜய் சேதுபதிக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா கோரிக்கை..!

பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.

முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய சொந்த நாடான தமிழ் ஈழத்தில்கூட அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதையொட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் தாமரை இது குறித்து விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இது :

அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு,

பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக் கொள்வது..

வணக்கம்.

மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர்.

அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.

நிற்க.

தாங்கள் செய்யவிருக்கும் ‘800’ என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன்.

நம் ஈழத் தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க, முழுக்க ஆதரித்தவர்.

விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்..?

 எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.

அடிபட்ட வலியை நினைவு கூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்..? மறுத்திருக்கலாமே… என கேட்கின்றனர்.

அவர்களின் வேதனையும், வலியும் புரியும். அதேசமயம், அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான்  கோரிக்கை வைக்கிறேன்.

இனத் துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா..?

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல்  படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள்.

தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள்.

பின் குறிப்பு :  ‘800’ திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன்.

‘800’ – திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம்.. இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத் தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை  உலக அரங்கில் வெளிக் காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள்.

துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா…? இல்லை.. உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பாதா…? அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிப் பாருங்கள்.. பாடம் சொல்லும்.

ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம், ஆயிரம் முத்தையா முரளிதரன்கள் வந்தால்கூட ஈடு செய்ய முடியாது.

உண்மையிலேயே நீங்கள்  தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி  தீயாக இன்றும் சுடர்  விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக  தன்னையே உயிராயுதமாக உருக்கி எம் மண்ணோடு , காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில், ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை,  உலகரங்கில் எடுக்க முன் வாருங்கள்… ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம்.

நன்றி

இயக்குநர் பாரதிராஜா

Our Score