full screen background image

சல்லியர்கள் – சினிமா விமர்சனம்

சல்லியர்கள் – சினிமா விமர்சனம்

இந்தியன் சினிவே சார்பில் எஸ்.கருணாஸ் பி.கரிகாலன் தயாரித்திருக்கும் இந்த சல்லியர்கள் படத்தை வி ஹவுஸ்; புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் காமட்சி வெளியிட.. எழுதி இயக்கியிருக்கிறார் டி.கிட்டு.

இதில் சத்யாதேவி, எஸ்.கருணாஸ், திருமுருகன், ஜானகி, மகேந்திரன், நாகராஜ், பிரியா, ஆனந்த் சௌந்தரராஜன், மோகன், சந்தோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இணை தயாரிப்பு: சாத்தனூர்  சிவாநேசமணி ராஜேந்திரன் ராவணன் குமார், பாடல்கள்கவிஞர் வைரமுத்து, டி.கிட்டு, எடிட்டர்: சி.எம்.இளங்கோவன், ஒளிப்பதிவுசிபி சதாசிவம், இசைகென் மற்றும் ஈஸ்வர்கலை : முஜிபுர் ரஹ்மான், மேக் அப் : அப்துல்காஸ்ட்யூம் : பூங்குழலி கிட்டு, டிஐ : விநாயகம் விஎஃப்எக்ஸ் : விக்னேஷ்ஸ்டண்ட் : சரவெடி சரவணன், பிரபாகரன் வீரராஜ், ஒலி கலவைஎஸ்டிபி சாமி, பத்திரிக்கை தொடர்பு ஜான்.

ஈழத்தில் தமிழர்களின் சுதந்திரத்திற்காக போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு, உலக அளவில் மிகச் சிறந்த ராணுவமாக இன்றுவரையிலும் சொல்லப்பட்டு வருகிறது.

அதற்கான ஒரு காரணம் எதிரிகளாக இருந்தாலும் தங்களுடன் மோதலில் ஈடுபட்டு காயம்பட்ட சிங்கள ராணுவ வீரர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவர்கள் தேறியவுடன் மீண்டும் அவர்களை சிங்கள ராணுவத்திடமே ஒப்படைத்த பல காட்சிகள் இன்றும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது.

பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்ற நம்முடைய தமிழ் மூத்தோர்களின் சொல்லுக்கேற்ப விடுதலைப்புலிகள் அமைப்பு செய்து வந்த அந்த மிகப் பெரிய தியாகத்தை முதன்முறையாக இந்தப் படத்தில் காட்டி இருக்கிறார் இயக்குநர் தி கிட்டு.

நார்வே நாட்டின் உதவியால் விடுதலைப்புலிகளும் சிங்கள அரசும் ஒரு சமாதான உடன்படிக்கையை செய்திருந்தன. அதன்படி அவர்கள் இப்போது இருக்கின்ற இடங்களிலேயே அப்படியே இருக்க வேண்டும். சிங்கள ராணுவம் முன்னேறக் கூடாது. அதே சமயம் விடுதலைப் புலிகளும் முன்னேறக்கூடாது என்ற ஒரு சுய கட்டுப்பாட்டுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருந்தது. அந்த நேரத்தில்தான் இந்த படத்தில் சொல்லப்படும் கதை நடக்கிறது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தாலும் அது தங்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது என்பது போல போர் முனையில் இருக்கும் சிங்கள வீரர்கள் அவ்வப்பொழுது தங்களுடைய இடத்திலிருந்து முன்னேறிக் கொண்டே வருகிறார்கள். அவர்களை மீண்டும், மீண்டும் துரத்தி அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் புலிகள்.

முன் களத்தில் இருக்கும் டுதலைப் புலி அமைப்பின் போராளிகள் சண்டையில் வீரர்கள் இறந்தால் உடனேயே அந்த இடத்தில் பதிலி  வீரர்கள் ஓடோடி வந்து நிற்பதைப் பார்த்த சிங்கள ராணுவம் அது பற்றி விசாரணை நடத்துகிறது. அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு பல இடங்களில் மருத்துவ பங்கர்களை அமைத்து இருப்பது உளவுத்துறை மூலமாக சிங்கள ராணுவத்திற்கு தெரிகிறது.

முதலில் அந்த பங்கர்கள் அனைத்தையும் நாம் அழித்து விட்டால் அதற்குப் பிறகு போர்க்களத்தில் நாம் முன்னேறுவதற்கு புலிகளிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் வராது என்று நினைத்த சிங்கள ராணுவ தளபதி, அந்த மருத்துவ பங்கர்களை அழிக்கும்படி சிங்கள விமானப் படைக்கு உத்தரவிடுகிறார்.

அதேசமயம் முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தை விடுதலைப்புலிகள் சுட்டு தள்ளியதால் ஒரு சிங்கள ராணுவ வீரர் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவர் சிங்கள வீரர் என்று நினைத்து அப்படியே போட்டுவிடாமல் அவரையும் தூக்கிக் கொண்டு வந்து மெடிக்கல் பங்கரில் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள் புலிகளின் மருத்துவ அணியினர்.

இந்த நேரத்தில் ஒரு விடியற்காலை பொழுதில் சிங்கள ராணுவம் மருத்துவ பங்கர்களை அழிக்கும் திட்டத்தை ரகசியமாக ஏற்பாடு செய்கிறது. விடுதலைப் புலி வீரர்களும் இதை எதிர்பார்த்து தயாராய் காத்திருக்கிறார்கள்.

கடைசியில் என்னவானது..? மருத்துவ பங்கர்களை அவர்கள் அழித்தார்களா..? சிங்கள ராணுவத்தினர் என்ன ஆனார்கள்? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

மருத்துவர் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் சத்யா தேவி நிஜமாகவே ஒரு ஈழத்துப் பெண் போலவே தெரிகிறார். அவர் பேசுகின்ற  பேச்சுக்கள்.. மருத்துவம் சம்பந்தமாக அவர் சொல்கின்ற கருத்துக்கள், குண்டடிப்பட்டு வரும் வீரர்களை அவர் கவனிக்கின்ற பங்கு, சாதாரண ஹவாய் செப்பல் உரசல் சத்தம் கேட்டு நம்மாளுகதான் வராங்க என்று குறிப்பறிந்து செயல்படும்விதம், மிகப் பெரிய போர் தொடங்கினால் உடனடியாக ரத்தத்தை பாதுகாத்து வைக்க வேண்டும் என்கின்ற அந்த உணர்வு.. போர்க்களத்தில் ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணமாக இந்த சத்யா தேவியை காட்டி இருக்கிறார் இயக்குநர்.

மிகப் பெரிய அளவுக்கு காயப்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி அதற்காக உடனுக்குடன் தலைமை மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை வரவழைத்து பார்க்க வைக்கும் வேகம் தனக்காக வைத்திருந்த உணவைக்கூட அந்த மருத்துவருக்குக் கொடுத்துவிட்டு பசி, பட்டினியோடு உயிரை காப்பாற்றும் வேலையில் இறங்கும் சத்யாதேவியின் நடிப்பு மிக மிக அழகு. அற்புதமாக நடித்திருக்கிறார் பாராட்டுக்கள்.

மருத்துவர் செம்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன் மிக இயல்பாக எந்தவிதமான சினிமாத்தனமும் இல்லாமல் வசனங்களை பேசி நடித்திருக்கிறார்.

சத்யாதேவியின் பிளாஷ்பேக் கதையில் வரும் அவருடைய அப்பா கருணாஸ், விடுதலை போராளிகளுக்கு உதவி செய்யும் பொருட்டு அவர் செய்கின்ற செயல்கள் அவருடைய பேச்சு.. அவர் நடித்த நடிப்பு.. அனைத்துமே அவர் மீது ஒரு கரிசன பார்வையை, ஒரு பரிதாபத்தை நம்மிடம் இருந்து பெற்று தந்திருக்கிறது.

விடுதலைப் புலிகளாக நடித்தவர்கள் மட்டுமல்லாமல் சிங்கள ராணுவ வீரர்களாக, தளபதியாக நடித்தவர்கள்கூட மிக இயல்பான அளவான வசனங்களைப் பேசி அழகாக நடித்திருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் அந்த ஊரிலேயே வசிக்கும் நாகராஜ் அவர் காதலிக்கும் பிரியாலயா, இவர்களது காதல் கதையும் நம்முடைய மனதை  நெகிழ வைத்திருக்கிறது.

இந்தப் படத்தின் பாடல்களை கென் மற்றும் ஈஸ்வரர் இருவரும் தங்களுடைய இசையமைப்பில் கொடுத்திருக்கிறார்கள். பாடல்களை வைரமுத்துவும், இயக்குநர் கிட்டுவும் எழுதியிருக்க.. பாடல் வரிகள் அவ்வளவு அழகாக நம் காதுகளில் நுழைந்து, இதயத்தை தொடுகின்றன.

சின்ன பட்ஜெட் என்பதால் அதிகமான கூட்டம் சேர்க்க முடியாத சூழலிலும் கொடுத்த வசதிகளை வைத்து மிக அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒழிப்பதிவாளர் சிபி சதாசிவம். போர்க்களக் காட்சிகளை தன்னால் முடிந்த அளவுக்கு பதைபதைக்கும் அளவுக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

படப்பிடிப்பு எங்கு நடந்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அந்த மருத்துவ பங்கர்களை வடிவமைத்தவிதமும் விடுதலை புலிகளின் ராணுவ அமைப்பு எப்படிப்பட்டது என்பதைக் காட்டும்விதமாகவும் கலை இயக்குநர் விஜிபுர் ரஹ்மான் தன்னால் முடிந்த அளவுக்கு ஒரு சிறந்த வேலையை செய்திருக்கிறார்.

அடிபட்டவர்களை தூக்கிக் கொண்டு மற்றைய வீரர்கள் பங்கர்களுக்கு ஓடி வரும் அந்தக் காட்சியில் பின்னணி இசை அபாரம் என்றே சொல்லலாம். நாமும் சேர்ந்து ஓடுவதைப் போல இருந்தது அத்தருணம்.

15 ஆண்டுகளுக்கு முந்தைய கதை என்பதால், ஈழத்தில் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கொண்டு அது போலவே இரு தரப்பு வீரர்கள் மற்றும் பெண்களுக்கான, ஒப்பனையையும், உடைகளையும் மிக எளிமையாக செய்து கொடுத்திருக்கிறார்கள் ஒப்பனை கலைஞர் அப்துல்லாவும், ஆடை வடிவமைப்பாளருமான பூங்குழலி கிட்டுவும்.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் தி.கிட்டு ஏற்கனவே இதே பாணியில் ஈழத்தை பற்றி இரண்டு திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இது இவரது மூன்றாவது திரைப்படம்.

புத்தகங்களில் மட்டுமே நாம் அறிந்து வைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள், அந்த அமைப்பின் கட்டுப்பாடான போராளிகளின் வாழ்க்கை.. இதையெல்லாம் இந்தப் படத்திலும் அழகாக எடுத்துச் சொல்லி புலிகள் மீதான விமர்சனத்தை எல்லாம் தூள்தூளாக்கி போகும் அளவுக்கு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் தி கிட்டு.

சாவதற்கு துணிந்தவன் மட்டும்தான் போராளியாக இருக்க முடியும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப இந்தப் படத்தில் காட்டப்படும் அத்தனை போராளிகளும் மரணத்தை வா வா என்று அழைத்தபடியே தன்னுடைய தாய் நாட்டுக்காக போராடி மடிந்து இருக்கிறார்கள்.

அந்த ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக மிக அழகான ஒரு திரைப்படமாக இந்தப் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் கிட்டுவுக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

நம் நம் உயிரை இறுதியாக இங்கே விதைக்கிறோம். நிச்சயமாக அது ஒரு நாள் வெடித்து சுதந்திரமாக நிற்கும் என்ற சத்யதேவியின் பேச்சு, எப்பொழுதும் நமக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டுகிறது.

என்றேனும் ஒரு நாள் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்!

RATING : 4 / 5

 

Our Score