இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் மறைந்த கேமிரா கவிஞர் பாலு மகேந்திராவின் பெயரிலான நூலகத்தின் துவக்க விழா நடைபெற்றது.
நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் வெற்றி மாறன், ராம், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன் நடிகை ரோகிணி, எழுத்தாளர் பாமரன் ஆகியோர் இணைந்து இந்த நூலகத்தைத் துவக்கி வைத்தனர்.
உதவி இயக்குநர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் சென்னை சாலிக்கிராமம் எண்-1, திலகர் தெருவில் இயக்குநரும், எழுத்தாளருமான அஜயன் பாலா இந்த பாலு மகேந்திரா நூலகத்தை துவக்கியிருக்கிறார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் “கடலோரக் கவிதைகள்’ படத்தை பார்த்து விட்டு சிவாஜி ‘என்னை அடுத்த பத்து வருடங்களுக்கு உன்னை யாரும் அசைக்க முடியாது’ என்றார். ‘வேதம் புதிது’ பார்த்துவிட்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என் கையைப் பிடித்து முத்தம் கொடுத்தார். ‘ஓன்பது ரூபாய் நோட்டு’ படத்தைப் பார்த்துவிட்டு பாலு மகேந்திரா என்னைக் கட்டிப் பிடித்து கண்கலங்கி பாராட்டினார்.
ஒரு சமயத்தில் எனக்கு சுத்தமா படமே இல்லை. வெட்டியா உக்காந்திருந்தேன். அப்போ கோயம்புத்தூர் பக்கத்துல இருக்குற என்னோட சொந்த ஊர்ல போயி 2 மாசம் தங்கியிருந்தேன். அப்போ அப்பா, வில்லன் கேரக்டர்லெல்லாம் நடிக்க அழைப்பு வந்தது. எனக்கு அதில் விருப்பமில்லை. இத்தனை படத்துல ஹீரோவா நடிச்சிட்டோம். நிறையவும் சம்பாதிச்சிட்டோம். இனிமேல் எதுக்கு அப்பா, வில்லன் கேரக்டரெல்லாம் செய்யணும்னு நினைச்சு அமைதியாயிட்டேன்.
அப்போ தெலுங்கு படத்துலெல்லாம் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு தமிழைத் தவிர வேற எந்த மொழியும் முழுமையா தெரியாது. பி.எஸ்.ஸி பாட்டனி படிச்சிருக்கேன். ஆனால் ஆங்கிலமே சரியா பேச வராது. இதுல தெலுங்குல டயலாக் பேசணும்ன்னா எப்படின்னு யோசிச்சேன்..?
தெலுங்கு படத்துல பிராம்ட்டர்ல பேசச் சொன்னாங்க. அதுவரைக்கும் எனக்கு பிராம்ப்ட்டர்லாம் ஒத்தே வராது. தோழர் மணிவண்ணன் படத்துல எல்லாம் அந்த நேரத்துல தோணுகின்ற வசனங்களையெல்லாம் பேசி நடிப்போம். முன்கூட்டியே திட்டமிட்டு வசனத்தையெல்லாம் எழுதி வைக்கிறதெல்லாம் அவர் யூனிட்ல கிடையாது. இப்படி எழுதி வைச்சும், மனப்பாடம் செஞ்சும், தோணறதை பேசியும் பழகிட்டோமா.. இந்த பிராம்ட்டர் நமக்கு ஒத்து வருமான்னு யோசிச்சேன்.
அப்போதுதான் நண்பர் அஜயன் பாலா எழுதிய மார்லன் பிராண்டோவின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்தைப் படித்தேன். அதில் மார்லன் பிராண்டோ கடைசிவரையிலும் பிராம்ப்ட்டர் மூலமாகத்தான் வசனம் பேசி நடித்ததாக எழுதியிருந்தது. இதைப் படிச்சப்போ எனக்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது. அதில் பிராண்டாவோ சொல்லியிருக்கிறார் நடிகன் என்பவன் வசனத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பன் அல்ல என்று.
இதுக்கப்புறம்தான் நான் யோசித்தேன். சிவாஜியைவிட சிறந்த நடிகர்ன்னு மார்லன் பிராண்டோவை சொல்வாங்க. அவரே பிராம்ட்டரை பயன்படுத்தியிருக்காருன்னா நம்ம பயன்படுத்துறதுக்கு என்னன்னு நினைச்சு தெலுங்கு படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். நிறைய நடிச்சு நிறையவே சம்பாதித்தேன்.
அதுக்கு காரணமாயிருந்த நண்பர் எழுத்தாளர் அஜயன் பாலா இப்போது உருவாக்கியிருக்கும் இந்த நூலகத்துக்கு நானும் என்னால் ஆன உதவிகளை செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். கூடிய விரைவில் அதை அவருடன் பேசி அறிவிப்பேன்…” என்றார்.
இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது, “நூலகம் என்பது வெறும் படிப்பு என்பதோடு இல்லை. அதுவொரு அறிவுப் பகிரல். பலரும் தாங்கள் படித்த நல்ல விஷயங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும்போது அது ஆரோக்கியமான சமூகத்தை வளர்க்கிறது. இன்றைக்கு அது தமிழ்நாட்டுக்கு மிகவும் அவசியமான ஒன்று…” என்றார்.
இயக்குநர் ராம் பேசும்போது, “நன்றாக படித்தால்தான் நாம் மத தீவிரவாதியாகாமல் பாலியல் வன்முறையில் ஈடுபடாமல் இருக்க முடியும். பால் தாக்கரேவை தலைவனாகக் கொண்ட ஆன்மீக அரசியலிலும் ஈடூபடாமல் இருக்க முடியும்…” என நடப்பு அரசியலை பொடி வைத்து பேச அரங்கில் கை தட்டல் அதிர்ந்தது.
தொடர்ந்து பேசிய எழுத்தாளர் பாமரன் தன் வழக்கமான நகைச்சுவை உணர்வுடன், “நானும் ஆரம்பத்தில் ஒரு நூலகத்தைத் துவக்கினேன். ஓருவரும் வரவில்லை. பிற்பாடு அந்த நூலக இடம் டாஸ்மாக்காக மாறியபோது கூட்டம் முண்டியடித்தது. இந்த நிலைமை பாலு மகேந்திரா நூலகத்துக்கு வர விடாமல் பாதுகாக்க வேண்டியது உங்கள் ஓவ்வொருவரின் கடமை…” என்றார்.
தொடர்ந்து இயக்குநர் ஏ.எல்.விஜய், நடிகை ரோகிணி, இயக்குநர் மீரா கதிரவன், நாச்சி முத்து ஆகியோர் பேச… முடிவில் எழுத்தாளர் அஜயன் பாலா அனைவருக்கும் நன்றி கூறினார்.
இறுதியில் அண்மையில் காஷ்மீரில் வன்புணர்வுக்கு ஆளான எட்டு வயது சிறுமி ஆசிபாவுக்கு ஓரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.