தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத காவியங்களை படைத்த நிறுவனம் ‘மின் பிம்பங்கள்’.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியான ‘கையளவு மனசு’, ‘ஜன்னல்’, ‘ரயில் சிநேகம்’, மற்றும் பிரமிக்க வைத்த தொலைக்காட்சி உலகின் முதல் மர்மத் தொடரான ‘மர்ம தேசம்’, நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த ‘ரமணி Vs.ரமணி’, ‘வீட்டுக்கு வீடு லூட்டி’ போன்ற தொடர்களை இந்த நிறுவனம்தான் தயாரித்திருந்தது.
இப்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படைப்புலகத்தில் கால் வைத்திருக்கிறது ‘மின் பிம்பங்கள்’. இந்த முறை தொலைக்காட்சித் தொடராக இல்லாமல் மேடை நாடகத்தைத் தயாரித்திருக்கிறது.
இயக்குநர் சிகரத்திற்கு மிகவும் பிடித்தமான படைப்பு உலகமான மேடை நாடக உலகத்தை மின் பிம்பங்களும் தொட்டிருப்பது பெருமைக்குரியது.
இந்த முதல் நாடகத்தை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மருமகளும், மின் பிம்பங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான கீதா கைலாசம் எழுதி, இயக்கியிருக்கிறார். கீதா கைலாசம் எழுதி, இயக்கும் முதல் நாடகம் இதுவாகும்.
கே.பி.யின் நாடகமாகட்டும், சினிமாவாகட்டும்.. அந்தப் படைப்பின் தலைப்பே மிக, மிக வித்தியாசமாக இருக்கும். அந்த வரிசையில் இந்த நாடகமும் மிக வித்தியாசமான ஒரு தலைப்பை கொண்டிருக்கிறது.
‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ – இதுதான் இந்த நாடகத்தின் தலைப்பு.
இந்த நாடகத்தில் மேகா ராஜன், கணேஷ், ஹரிநாத், பத்மா, வெற்றி, அக்னிதா, நாகராஜன், கீதா, விஷ்ணு பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
முழு நீள நகைச்சுவையுடன், நிறைய சிந்திக்கவும் வைக்கக் கூடிய வகையில் இந்த ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ நாடகம் உருவாகியிருக்கிறது.
நாடகத்தின் நாயகியான லதாவால் தன் மனதில் தோன்றும், பயம், பரிதாபம், வருத்தம், கோபம் போன்ற உணர்வுகளை நினைத்த மாத்திரத்தில் நினைப்பவரிடம் சொல்ல முடிவதில்லை. இந்தச் சூழலில் திடீரென ‘ஒரு சில; பல நிமிடங்கள்’ அது அவளுக்குச் சாத்தியமானால்… லதாவிற்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்…? அந்த மகிழ்ச்சியைப் பற்றியதுதான் இந்த நாடகம்.
இந்த நாடகத்தின் அரங்கேற்றம் வரும் ஏப்ரல் 20-ம் தேதியன்று மாலை 6.45 மணிக்கு ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடைபெற இருக்கிறது.