பொதுவாக சினிமாவில் கதைகள் கதாநாயகனை மையப்படுத்தியே சுழல்கின்றன. நாயகன்தான் பிரதானம். அவனைச் சுற்றும் துணைக் கோள்கள் போலவே பிற பாத்திரங்கள் அமைக்கப்படும். இதுவே சினிமா மரபாகி இருக்கிறது.
ஆனால், ‘தேவதாஸ் பிரதர்ஸ்’ என்கிற இந்தப் புதிய படத்தில் அப்படிப்பட்ட ஹீரோவும் இல்லை, ஹீரோயிசமும் இல்லை. மிக வித்தியாசமான கதையில் படம் உருவாகி வருகிறது.
படத்தின் கதையை ‘திலகர்’ துருவா, பால சரவணன், அஜய் பிரசாத், ‘மெட்ராஸ்’ ஜானி ஆகிய நால்வரும் சம பங்கு போட்டு நடித்து வருகிறார்கள். நாயகிகளில் சஞ்சிதா ஷெட்டி முக்கிய இடம் வகிக்கிறார்.
படத்துக்கு ஒளிப்பதிவு ‘சலீம்’ ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா. இசை ‘போடா போடி’ படத்துக்கு இசையமைத்த தரண். படத் தொகுப்பு ‘வேலையில்லா பட்டதாரி’யில் பணியாற்றிய எம்.வி. ராஜேஷ் குமார். எக்ஸட்ரா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் V. மதியழகன், ஆர்.ரம்யா தயாரிக்கிறார்கள்.
இப்படத்தை இயக்குபவர் கே.ஜானகிராமன். இவர் இயக்குநர்கள் ஐஷ்வர்யா தனுஷ், சற்குணம், வேல்ராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக சினிமா கற்றவர். ‘3,’ ‘நையாண்டி’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களில் பணியாற்றியவர்.
இது முழுக்க முழுக்க சென்னையிலேயே நடக்கும் கதை. சென்னையில் அடையாறு, ஆழ்வார்பேட்டை, கே.கே நகர், வியாசர்பாடி என நான்கு வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் நான்கு இளைஞர்கள் அவர்கள். சம்பந்தமில்லாத இந்த நான்கு பேரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே அவரவர் வாழ்க்கையில் சம்பந்தப்படுகிறார்கள். அது தெரிந்த பிறகு அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதுதான் கதை. அவர்கள் யார்.. எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே திரைக்கதையின் போக்கு.
‘திலகர்’ படத்தில் திடுதிப்பென வந்து மிரட்டிய துருவா, காமெடியில் வளர்ந்து வருகிற பால சரவணன், ‘ராஜதந்திர’த்தில்’ கவனம் பெற்ற அஜய் பிரசாத், ‘மெட்ராஸ்’ படத்தில் கவனம் ஈர்த்த ஜானி என இந்த நால்வருக்கும் மேலேறும் அடுத்த சில படிகளாக இப்படம் அமையும் என்று அவர்களும் நம்புகிறார்கள். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.









