full screen background image

டகால்டி – சினிமா விமர்சனம்

டகால்டி – சினிமா விமர்சனம்

‘18 Reels’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த பிரபல மருத்துவரும், திரைப்பட விநியோகஸ்தருமான எஸ்.பி.செளத்ரி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார்.

மேலும், ராதாரவி, ரேகா, சந்தானபாரதி, பிரம்மானந்தம், மனோபாலா, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, இந்தி நடிகர்கள் ஹேமந்த் பாண்டே, தருண் அரோரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகரான விஜய் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்கள் – கார்க்கி, ஒளிப்பதிவு – தீபக்குமார் பாரதி, படத் தொகுப்பு – டி.எஸ்.சுரேஷ், கலை இயக்கம் – ஜாக்கி, சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, மக்கள் தொடர்பு – விஜய்முரளி, கிளாமர் சத்யா, நடனப் பயிற்சி – ஷோபி, தயாரிப்பு மேற்பார்வை – சுவாமிநாதன், இணை தயாரிப்பு – ரமேஷ்குமார், எழுத்து, இயக்கம் –  விஜய் ஆனந்த். இவர் இயக்குநர் ஷங்கரிடம் பல படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இது இவர் இயக்கும் முதல் படமாகும். நேரம் : 2 மணி 01 நிமிடம்.

மும்பையில் வசிக்கும் மிகப் பெரிய பணக்காரரான விஜய் சாம்ராட் ஒரு ஓவியர். கற்பனையில் அவர் வரையும் பெண் போலவே தோற்றத்தில் இருப்பவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்து தன் ஆசையைத் தீர்த்துக் கொள்ளும் ஒருவிதமான குணமுடையவர். மிகப் பெரிய கோடீஸ்வரர் என்பதால் அலட்சியமாக அந்தப் பெண்களுக்கு கோடிகளில் விலை கொடுப்பவர்.

இப்போதும் ஒரு பெண் ஓவியத்தை வரைகிறார். அவளைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கொடுத்தால் 10 கோடி ரூபாய் தருவதாகச் சொல்கிறார். மும்பை லோக்கலில் டானாக இருக்கும் பையா என்னும் ராதாரவிக்கும் இந்த அசைன்மெண்ட் வருகிறது.

இந்த நேரத்தில் இதே ராதாரவியிடம் போதை மருந்து கடத்தல் செய்யும் வேலையில் இருக்கும் சந்தானம் ஒரு முறை பொருளைத் தவறவிடுகிறார். இதற்காக சந்தானத்தைக் கொலை செய்யச் சொல்கிறார் ராதாரவி. சந்தானம் கடைசி நிமிடத்தில் தான் தப்பிப்பதற்காக புகைப்படத்தில் ஓவியமாக இருக்கும் அந்தப் பெண்ணை தனக்குத் தெரியும் என்று கதை விடுகிறார்.

இதனை உண்மை என்று நம்பும் ராதாரவி சந்தானத்தைவிடுவித்து, அந்தப் பெண்ணை அழைத்து வந்து தன்னிடம் ஒப்படைத்தால் 10 லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்கிறார். தப்பித்த புண்ணியத்தில் சந்தானம் வர.. அவருடைய நண்பன் யோகி பாபு வைத்திருக்கும் ஒரு திருட்டுக் கேமிராவில் அந்த ஓவியப் பெண்ணைப் பார்க்கிறார் சந்தானம்.

அந்தப் பெண் நாயகி ரித்திகா சென். தமிழகத்தின் தென் கோடியான திருச்செந்தூரில் மல்லி என்னும் பெயரில் வாழ்கிறார். ஒரு பெரிய சினிமா இயக்குநராக வேண்டும் என்பது அவருடைய வாழ்நாள் லட்சியம். இவ்வளவு பெரிய லட்சியத்துடன் வாழ்பவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவெடுக்கின்றனர்.

இதனால் கோபப்படும் ரித்திகா சென் ஊரைவிட்டு சென்னைக்கு தப்பியோடுகிறார். அதே நேரம் இவரைத் தேடி சந்தானமும் மும்பையில் இருந்து திருச்செந்தூர் வந்து சேர்கிறார். சந்தானமும், ரித்திகா சென்னும் நடு வழியில் புதுக்கோட்டையில் தற்செயலாக சந்தித்துக் கொள்கிறார்கள்.

ரித்திகா சென்னை மும்பைக்கு அழைத்துச் சென்று ஷாரூக்கானிடம் அறிமுகப்படுத்தி வைத்து மிகப் பெரிய இயக்குநராக்குவதாக சந்தானம் வாக்குறுதி அளிக்கிறார். இதை நம்பி சந்தானத்துடன் ரித்திகா மும்பை நோக்கி பயணிக்கிறார்.

இதே நேரம் நாயகியைத் தேடி நாயகியின் குடும்பத்தார் ஒரு பக்கம் தேடுகிறார்கள். மற்றொரு பக்கம் ஓவியப் பெண்ணைத் தேடும் அஸைன்மெண்ட் கிடைக்கப் பெற்ற மற்ற மாநில ரவுடிக் கும்பல்களும் தேடுகிறார்கள்.

மும்பைக்குச் செல்லும் வழியில் ஆந்திர, கடப்பாவில் நாயகி ஸ்டண்ட் சில்வா கோஷ்டியினரால் கடத்தப்படுகிறார். அப்போதும் சந்தானம் சண்டையிட்டு நாயகியை மீட்டு மும்பைக்கு அழைத்து வந்து சாம்ராட்டின் ஆட்களிடம் நாயகியை ஒப்படைத்துவிட்டு 10 கோடி ரூபாயை பெற்றுக் கொள்கிறார்..

இதற்குப் பின்பு சந்தானத்துக்குத் தான் செய்வது தவறாகப் படுகிறது. தன்னால் ஒப்படைக்கப்பட்ட நாயகியை மீட்க நினைக்கிறார். இதற்காக மறுபடியும் போராடுகிறார். இது முடிந்ததா.. இல்லையா.. என்பதுதான் மிச்சம் மீதிக் கதை.

சந்தானம் இந்தப் படத்தில் சற்று மெலிந்திருக்கிறார். சண்டை காட்சிகளில் புத்துணர்ச்சியுடன் போராடியிருக்கிறார். நடிக்க வேண்டிய காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆனால் சிரிப்புதான் வரவில்லை.

யோகிபாபுவும் அவரும் சேர்ந்திருக்கும் காட்சிகளில் அனாயசமாக காமெடி தெறித்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. இருந்திருந்தால் படத்தின் லெவலே வேறு மாதிரியிருந்திருக்கும்.

தான் செய்தது தவறு என்று அவர் பீல் செய்யும் காட்சியில்கூட எதுவுமே அவர் செய்யாததால் அந்தக் காட்சி தேவையா என்று சொல்லத் தோன்றுகிறது.

யோகிபாபு கிளைமாக்ஸ் காட்சிகளில்தான் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொஞ்சம் ஆர்வத்தை உண்டு பண்ணியிருக்கிறார். பிரம்மானந்தம் சில காட்சிகளே என்றாலும் ரசிக்க வைத்திருக்கிறார். ராதாரவி வில்லத்தனத்தில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார்.

நாயகி கடைசிவரையிலும் சோனியா அகர்வாலுக்கு தங்கச்சி போலவே முகத்தை உம்மென்று வைத்திருந்து நடையைக் கட்டியிருக்கிறார். முகத்தில் ஈர்ப்பும் இல்லை. அழகும் இல்லை. எப்படி தேர்வானார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

சமீப படங்களில் பாவாடை தாவணியில் இத்தனை காட்சிகளில் நடித்திருக்கும் ஹீரோயின் இவராகத்தான் இருப்பார். லூஸுப் பெண் கேரக்டரில் அப்படியே அச்சு, அசலாகப் பொருத்தமாக இருக்கிறார். அதற்காக மட்டுமே ஒரு சபாஷ்..!

விஜய் சாம்ராட்டின் மேனேஜராக நடித்த ஹேமந்த் பாண்டேவுக்கு ஒரு சபாஷ். அவருடைய அப்பாவித்தனமும், பரிதாப உணர்வும் கொஞ்சம் நகைச்சுவையைக் கூட்டிக் கொடுத்திருக்கிறது.

ஏனைய நட்சத்திரங்கள் அனைவரும் அவரவர் வேலையை செய்திருக்கிறார்கள். ஆனால் எதிலும் கவன ஈர்ப்பில்லை. கடப்பாவில் நடைபெறும் சண்டை காட்சிகளை மட்டும் உயிர்ப்புடன் படமாக்கியிருக்கிறார்கள். பாராட்டுக்கள். ஆனால், இதையெல்லாம் செய்வது சந்தானமா என்கிற சந்தேகமும் எழுகிறது. ஓவர் ஹீரோயிஸம்..!

பெயர் சொல்லும்படியான ஒளிப்பதிவை பாடல் காட்சிகளிலும், கடப்பாவில் நடக்கும் காட்சிகளிலும் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல்கள் ரொம்பவே சுமார் ரகம். காமெடி படம் என்பதால் பாடல்கள் தேவையில்லை என்று நினைத்துவிட்டார்களோ..?

சென்ற வருடம் ‘தில்லுக்கு துட்டு-2’, ‘ஏ-1’ ஆகிய இரண்டு படங்களின் வெற்றியினால் திளைத்திருந்த சந்தானத்திற்கு இந்த வருடத் துவக்கமே சறுக்கலாகியிருக்கிறது.

இது போன்ற லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கதைகளைத் தேர்வு செய்தால் அவரது ரசிகர்களே கேள்வி கேட்க மாட்டார்களா..?

மாஸான ஹீரோவாக சந்தானத்தை வார்ப்பெடுக்க நினைத்தது சரிதான். ஆனால் அதற்கான கதையும், திரைக்கதையும் இல்லையே.. திரைக்கதையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவமும் இல்லை. இப்படி சில போதாமையினால்தான் சந்தானத்தின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இடைவேளைக்குப் பின்பு சிரிப்புக்கு நிறைய ஸ்கோப் இருக்கும் திரைக்கதை இருந்தும் அதற்கேற்ற இயக்கம் இல்லாததால் சிரிக்க முடியவில்லை. ஆனால் கடைசிவரையிலும் ஒருவித சிரிப்புத் தன்மையுடனேயே படத்தைப் பார்க்க முடிந்திருக்கிறது. அந்த மட்டுக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

அடுத்தப் படத்தில் ஜெயிக்கட்டும்..! வாழ்த்துகிறோம்..!

Our Score