2009-ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.நந்தகோபாலின் தயாரிப்பில், சமுத்திரக்கனியின் இயக்கத்தில் இந்த ‘நாடோடிகள்– 2’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இதில் சசிகுமார், அஞ்சலி இருவரும் நாயகன், நாயகியாக நடித்திருக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், கு.ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ஈ.ராம்தாஸ், கோவிந்தமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனியே நடித்திருக்கிறார்.
இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – ஏகாம்பரம், கலை – ஜாக்கி, படத் தொகுப்பு – ரமேஷ், பாடலாசிரியர் – யுகபாரதி, சண்டை இயக்கம் – திலீப் சுப்புராயன், நடன இயக்கம் – தினேஷ், ஜான், மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, நிகில் முருகன், தயாரிப்பு மேற்பார்வை – சிவச்சந்திரன், தயாரிப்பு – எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் – சமுத்திரக்கனி.
‘நண்பனுக்கு நண்பன்; எனக்கும் நண்பனே’ என்கிற பார்முலாவில் உருவான ‘நாடோடிகள்’ படத்தின் முதல் பாகத்தில் இருந்த காதல் போர்ஷனை மட்டுமே இதில் வைத்துக் கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. மற்றைய இடங்களில் சாதியற்றவர்களின் குரலை எழுப்பியிருக்கிறார்.
ஒரு அலுமினியப் பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார் ‘ஜீவா’ என்னும் சசிகுமார். இயல்பிலேயே பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர். இவருடைய தந்தையின் வழியாக பொதுவுடமை சித்தாந்தத்திலும், சாதி, சமய எதிர்ப்பிலும் ஊறித் திளைத்திருக்கிறார்.
தான் சம்பாதிக்கின்ற பணத்தையே ஊர்க் காரியங்களுக்காகச் செலவிடும் அளவுக்கு தாராள மனம் கொண்டவர். இவ்வளவு நல்லவராக இருப்பதாலேயே இவருக்கு பெண் கொடுக்க அனைவரும் தயங்குகிறார்கள். சொந்தத் தாய் மாமனே மூன்று பெண்களை வைத்திருந்தும் தர மறுத்துவிடுகிறார்.
சாதியற்றவர்களாக தங்களை அறிவித்துக் கொள்பவர்களுக்காக ‘நாமோவோம்’ என்னும் புதிய அமைப்பினைத் துவக்குகிறார் சசிகுமார். இதில் இணைபவர்களுக்காக மிகப் பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார். இவருக்கு இந்த விஷயத்தில் துணை நிற்பவர்கள் ‘செங்கொடி’ என்னும் அஞ்சலி. மற்றும் பரணி.. இன்னொரு பெரியவர்.
இந்த அமைப்பை சிதைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் சாதிப் பிடிப்புள்ளவர்கள். அவர்களில் பெரும் பணக்காரராக இருப்பவரின் தூண்டுதலின் பேரில் அமைதியாக நடந்து கொண்டிருந்த கூட்டம் கலவரத்தில் முடிகிறது.
இந்த நேரத்தில் கடைசி முயற்சியாக பெண் பார்க்கச் செல்லும் திட்டமும் தோல்வியில் முடிய.. சசிகுமாரின் அம்மாவான துளசி மகன் மீது கோபமாகிறார். இதனால் அம்மாவைச் சமாதானப்படுத்த நினைக்கிறார் சசிகுமார்.
இந்த நேரத்தில் பக்கத்து ஊரில் இருந்து பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சசிகுமாருக்கு பெண் தர முன் வருகிறார்கள். சசிகுமாரும் சந்தோஷத்துடன் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அதுல்யா ரவியைத் திருமணம் செய்து கொள்கிறார்.
முதல் இரவிலேயே அதுல்யா ரவி தான் வேற்று சாதியைச் சேர்ந்த ஒருவனைக் காதலிப்பதாகவும், அவனையே மனதில் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லி அழுகிறார்.
காதல் திருமணங்களை ஆதரித்தும், சாதியற்றவர்களை ஊக்குவித்தும்வரும் சசிகுமாருக்கு இப்போது தர்மசங்கடமான சூழல்.. வேறு வழியில்லாமல் தனது மனைவியான அதுல்யாவின் கழுத்தில் தான் கட்டிய தாலியைக் கழட்டியெறிந்துவிட்டு, அவளது காதலனை புதிய தாலியைக் கட்டச் சொல்லி அவர்களைத் தம்பதிகளாக்கி ஊரைவிட்டே அனுப்பி வைக்கிறார்.
இதையறியும் அதுல்யாவின் குடும்பமும், உள்ளூரில் இருக்கும் சாதிக்காரர்களும் சசிகுமாரிடம் சண்டைக்கு வருகிறார்கள். காதலர்களைத் தேடிப் பிடித்துக் கொல்ல ஆட்களை அனுப்புகிறார்கள். ‘தன்னை மீறி அவர்களை எதுவும் செய்ய முடியாது’ என்கிறார் சசிகுமார். அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்பதையும் சொல்ல மறுக்கிறார்.
இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்த ‘நாடோடிகள்-2’ படத்தின் திரைக்கதை.
சசிகுமாருக்கு நிச்சயமாக இது பெயர் சொல்லும் திரைப்படம்தான். அத்தனை அழுத்தமாய், இதுவரையிலும் காட்டியிருக்காத நடிப்பையெல்லாம் இதில் காட்டியிருக்கிறார்.
‘கருத்து சொல்லும் கந்தசாமி’யாய் இல்லாமல் உண்மையாய் உணர்ந்து சொல்லும் யதார்த்தவாதியாய் அவரது அறிவுரைகள் திரையில் தெறிக்கின்றன. ‘சிந்தனாவாதி ஜீவா’வாய் திரையில் மிளிரும் சசிகுமார், காதலுக்காய் ஏங்கும் தன்னுடைய இன்னொரு மனதையும் காட்டத் தயங்கவில்லை.
அடிதடி, போலீஸ் தடியடியில் சிக்கி மிதிபட்ட நிலையிலும் அத்தனை வேகத்திலும் பெண் பார்க்க ஓடி வரும் சசிகுமாரின் இயல்பான நடிப்பு ரசிப்புக்குரியது. இதேபோல் அஞ்சலியுடன் கோர்த்துவிடும் அந்தப் பெரியவரின் குதர்க்கமான பேச்சுக்கு சசிகுமார் காட்டும் ரியாக்சனும், அதன் தொடர்ச்சியான காதல் போர்ஷன்களும் ரசிக்க வைத்திருக்கின்றன.
சாதியின் பெயரால் காட்டப்பட்டும் வன்முறையையும், செய்யப்படும் படுகொலைகளையும் எதிர்த்து போர்க்குரல் கொடுக்கும் போராளியின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனியைவிட்டால் வேறு ஆட்களே இல்லை. அந்த அளவுக்கு அந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு பொருத்தமாக அமைந்து படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார் சசிகுமார்.
‘செங்காடி’ என்னும் அஞ்சலி எம்.டி. படித்த மருத்துவர் என்றாலும் தெருவோர பிரச்சாரங்களில்கூட மெனக்கெடும் ஒரு தோழராக சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் காட்சியில் முழக்கமிடும் காட்சிகளில் அத்தனை ஆவேசம்.. கோபத்தைக் காட்டியிருக்கிறார் அஞ்சலி. காதல் காட்சிகளை வழக்கமாக இல்லாமல் காட்டியிருப்பதால் சசிகுமார் மீது அவருக்கு ஈர்ப்பு வந்த காட்சிகளை வரிசைப்படுத்தும்போது அஞ்சலியின் நடிப்பு ஏ ஒன்.
சசிகுமாரின் அம்மாவான துளசி.. அக்மார்க் வழக்கமான அம்மாவாக வாழ்ந்திருக்கிறார். தனது சொந்த அண்ணனே தனது மகனை கீழ்த்தரமாகப் பேசும்போது மறுதலிப்பதும்.. தனது மகனுக்காக எத்தனை படி வேண்டுமானாலும் இறங்கிப் போவேன் என்று இருக்கும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் பாவமானது.
கூட்டமாக வந்து தனது மகனை அடித்து நொறுக்கும் சாதி வெறியர்களைப் பார்த்து மண்ணைத் தூவி அவர் சாபம்விடும் காட்சியில் அத்தனை கோபத்தையும் காட்டுகிறார் துளசி. வெல்டன் மேடம்.
அதுல்யா ரவி இரண்டாவது நாயகியாக.. உடுமலைப்பேட்டை சங்கர்-கவுசல்யாவின் கதையில் நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். காதலனை மணந்த பின்பு அம்மா, அப்பாவை நினைக்கும் சராசரி மனுஷியாய் தனது பரிதவிப்பை கணவரிடம் காட்டும்போதும், தனது அம்மா, அப்பா நல்லதே செய்வார்கள் என்று உறுதியாய் நம்பும் அந்த வயதுக்குரிய நடிப்பையும் காட்டியிருக்கிறார் அதுல்யா.
இவரது காதலராக நடித்திருக்கும் இசக்கி பரத்துக்கு இது முதல் படமாம். நல்லது. பாராட்டுக்கள். ‘அவ என்னுடையவள் ஸார்.. நான் நிச்சயம் அவகூட வாழ்வேன் ஸார்’ என்று அத்தனை அடிபட்ட பின்பும் உறுதியாய் சொல்லும் நடிப்பே, அவரது காதல் வாழ்க்கையை நியாயப்படுத்துகிறது.
முதல் பாகத்தில் இருந்த பரணி இந்தப் பாகத்திலும் சசிகுமாருக்கு துணை நிற்கிறார். இவர் மட்டுமில்லாமல் யாருடனும் ஒத்துப் போகாமல் தனி ஆவர்த்தனம் செய்யும் கோவிந்தமூர்த்தியும் நம்மை அதிகம் கவர்கிறார்.
சாதி வெறியை மனதுக்குள் வைத்துக் கொண்டு வெளியில் அன்பாகப் பேசும் ஈ.ராம்தாஸ் அந்த வில்லத்தனத்தை கச்சிதமாகக் காட்டியிருக்கிறார். அதுல்யாவின் அம்மா லிஸி ஆண்டனி, அத்தையாக நடித்தவர், அப்பா, மாமா பவன் என்று அனைவருமே அவரவர் பாத்திரத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார். அதிலும் ‘ரத்தக் கலப்பு செய்றதுக்கு முன்பாக அவர்களை கொலை செய்துவிடுங்கள்’ என்று அலட்சியமாகச் சொல்லும் அத்தை போன்றவர்கள்தான் இந்தச் சமூகத்தில் மிகப் பெரிய வைரஸ்கள்.
“இது போன்ற பிரச்சினைகளுக்கு ஒரே மாற்று வழி ‘சாதியற்றவர்கள்’ என்னும் புதிய தலைமுறையை நாம் உருவாக்குவதுதான்…” என்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. இதற்காக அவர் சொல்லும் ‘நாமாவோம்’ என்னும் திட்டம் சரியானதுதான்.
“நாளைக்கே மாற்றம் வரணும்னு அவசியம் இல்லை, அடுத்த தலைமுறையாவது மாறட்டும்” என்று யதார்த்தமாய் வசனத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
“பிடிக்காத பெண்கூட வாழுறது பொணத்துகூட இருக்குறதுக்கு சமம்…” என்று அஞ்சலி பேசும் வசனம் இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
படத்தின் துவக்கத்தில் முதல் அரை மணி நேரம் மட்டுமே ரசிகர்களை கவராமல் ஒதுங்கியே நிற்கிறது. ஆனால் அடுத்தடுத்து காட்சிகளில் திரைக்கதை நெருங்கத் துவங்க.. படம் ரசிகர்களுக்கு மிக அருகாமையில் வந்துவிடுகிறது.
முதல் பாதியைவிடவும் இரண்டாம் பாதிதான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக அமைந்திருக்கிறது. முதல் பாதியில் திரும்பும் இடமெல்லாம் பிரச்சாரமாக இருக்க.. இரண்டாம் பாதியில்தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றும்விதமாய் சாதி வெறியோடு நின்றிருக்கிறது கதை.
இறுதிக் காட்சிகளில் சமுத்திரக்கனியும் ஒரு பேருந்தை ஓட்டிக் கொண்டு வர.. அப்போது ஒலிக்கும் ‘சம்போ சிவ சம்போ’ பாடலும், பின்னணி இசையும் ஒரு சிலிர்ப்பைக் கொடுத்தது நிஜம்தான். ஆனால் சமுத்திரக்கனி எங்கிருந்து வந்தார் என்கிற கேள்வியும் எழுகிறது.
இதற்குப் பதிலாக சமுத்திரக்கனியையே ஒரு கதாபாத்திரத்தில் அதிலும் குறிப்பாக ‘தமிழரசனாக’ நடித்தவரின் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். தமிழரசன் கேரக்டரில் நடித்த அஞ்சலியின் அப்பா பொருத்தமான நேரத்தில் வந்து சசிகுமார் அண்ட் கோ-வை காப்பாற்றுகிறார். அந்தக் காட்சியின் சண்டை அமைப்புகள் சூப்பர். சண்டை இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு சண்டை காட்சிகளையும், வெளிப்புறக் காட்சிகளையும் அழகுற படம் பிடித்திருக்கிறது. இதேபோல் படத்தின் தொகுப்பாளரையும் பாராட்ட வேண்டும். அவருடைய கச்சிதமான நறுக்குதல், சேர்த்தலில் படத்தின் ஆக்சன் காட்சிகளும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் மனதைக் கவர்கின்றன.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களில் வார்த்தைகள் காதுகளில் தேனாகப் பாய்கின்றன. இந்த அளவுக்கு வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையை அடக்கி வாசித்திருக்கிறார். ஆனால் பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார். அந்தப் பரபரப்புக்கேற்ற இசையைக் கொடுத்து டெம்போவை ஏற்றிவிட்டு.. கடைசிவரையிலும் ஒரு பரபர உணர்விலேயே நம்மை வைத்திருக்கிறது ஜஸ்டினின் இசை.
ஒரே படத்தில் எத்தனை, எத்தனை விஷயங்களைத்தான் தொடுவது என்று எண்ணிப் பார்க்க வேண்டிய நிலைமை. அப்படி தமிழகத்தின் இன்றைய சமூகச் சீர்கேடுகள் அனைத்தையும் இந்த ஒரு படத்திலேயே கொத்து புரோட்டா போட்டிருக்கிறார் எழுத்தாளரும், இயக்குநருமான சமுத்திரக்கனி.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக சேர்ந்த திருநங்கையின் கதை, ஜல்லிக்கட்டு போராட்டம், அதன் முடிவில் வெளிப்பட்ட வன்முறை.. பெண்களைத் தாக்கும் போலீஸார்.. உடுமலைப்பேட்டை சங்கர்-கவுசல்யாவுக்கு நிகழ்ந்த கொடூரத் தாக்குதல்.. சாதியற்றவர்களாக மாறிய தமிழர்கள்.. மாணவர்களைப் பாதிக்கும் புதிய கல்விக் கொள்கை.. இப்படி தமிழகத்தின் தினம், தினம் நாம் சந்தித்த பிரச்சினைகளைப் படத்தில் பட்டியல் இட்டிருக்கிறார் இயக்குநர்.
இதையெல்லாம் ஒரு கருவேப்பிலை மாதிரி பயன்படுத்தியிருந்தாலும் மெயின் கதைக்குத் தேவையில்லாமல் இவைகளும் உள்ளே இருப்பது கொஞ்சம் அயர்ச்சியைத் தந்திருக்கிறது. அறிவுரைகள் கொஞ்சம் ஓவர் டோஸாகி நமது சிந்தனையையும் டயர்டாக்கியிருப்பது என்னவோ உண்மைதான்.
சசிகுமார் தாலியைக் கழட்டிப் போட்டுவிட்டாலும் சட்டப்படி அவர்தான் அதுல்யாவின் கணவர். நீதிமன்றத்தில் முறையாக விவகாரத்து பெறாமல் அதுல்யா வேறொருவருடன் வாழவதும்.. அவருக்காக குழந்தை பெற்றுக் கொள்வதும்கூட தவறானது என்பதை இயக்குநர் ஏன் மறந்துவிட்டார் என்று தெரியவில்லை.
சட்டப்படி தவறாக சொல்லப்பட்டிருக்கும் இந்த விஷயத்தை மிக எளிதாக கணவர் என்கிற முறையில் சசிகுமார் தானே முன்னின்று அவர்களது திருமணத்தை நடத்தி வைப்பதாக திரைக்கதையை மாற்றி அமைத்திருந்தால் நிச்சயமாக ஒரு புதுமையான படமாகவும் இது திகழ்ந்திருக்கும்.
எப்படியிருந்தாலும் இந்த ‘நாடோடிகள்-2’ ஏமாற்றம் அளிக்கவில்லை. புதிய புரிதலைக் கொடுத்திருக்கிறது..!