‘CSK ஸ்ரீனிவாசனிடம் இருந்து கை மாறியது’ என்ற செய்தியை ஒரு பரபரப்பு கிளம்பி பின்பு விசாரித்து உண்மை தெரிந்தவுடன் ‘CSK என்றால் அது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அல்ல’ என்று தெரிந்து அந்தப் பரபரப்பு அடங்கியது.
இருந்தும் ‘CSK’ என்றால் ஒரு தமிழ் திரைப்படத்தின் தலைப்பு என்றும், ‘சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’ என்று மூன்று கதாப்பாத்திரங்களின் பெயரின் முதல் எழுத்துக்களே அவை என்றும் விளங்கியது.
படத்தின் தலைப்பே இப்படி வித்தியாசமாக உள்ளதே. யார் இந்த மூவர்..? இவர்களுக்குள் என்ன ஒற்றுமை..? படத்தின் கதை என்ன..? என்ற நமது கேள்விகளுக்கு பதிலளித்தார் இயக்குனர் சத்தியமூர்த்தி சரவணன்.
CSK பற்றி அவர் கூறியதாவது.
“C என்பது சார்லஸ் என்ற கேரக்டரைக் குறிக்கும். – இவரொரு இளம் கிரிகெட் வீரர். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இடம் பெற துடிக்கும் ஒரு விளையாட்டு வீரராக வருகிறார். வாழ்க்கையில் இந்த நொடியை வாழ்வதும். லட்சியத்திற்காக உழைப்பதும் இன்றியமையாதது என்று நம்புகிறவன். இக்கதாப்பாத்திரத்தை ‘இனிது இனிது’ படத்தில் நடித்த ஷரண் ஏற்று நடித்துள்ளார்.
S என்பது ஷஃபிக் என்கிற கேரக்டரைக் குறிக்கும் – நாம் அன்றாடும் சந்திக்கும் இளைஞர்களின் மாதிரி. எதை தொட்டாலும் தோல்வி என்று துவண்டு போன நேரத்தில் தவறான வழிகாட்டுதல்களில் சிக்கி தவிக்கும் ஒரு இளைஞன். மிஷால் என்ற புதுமுகம் இக்கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
K என்பது கார்த்திகா என்கிற கேரக்டரைக் குறிக்கும் – எதிர்காலத்தை பற்றி எண்ணி நிகழ்காலத்தை வாழ மறக்கும் ஒரு இளம் பெண். ‘ஆரோகணம்’ திரைப்படத்தில் நடித்த ஜெய் குஹைனி இக்கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படி வெவ்வேறு துருவங்களான மூவரின் வாழ்க்கையை மாற்றும் ஒரு நாள் சம்பவங்களின் தொகுப்புதான் இந்த CSK திரைப்படம்.
நம்மில் பலருக்கு ஒரு நாள் நம் வாழ்வையே மாற்றி அமைத்தது பற்றி நினைவில்லாமல் இருக்கலாம். அந்த ஒரு நாளை அனைவரையும் நினைவுகூற வைக்கும் இந்த CSK திரைப்படம்…” என்று உறுதியாகக் கூறுகிறார் புதுமுக இயக்குநர் சத்தியமூர்த்தி.