“சினிமா பற்றி தெரியாதவர்கள்தான் சென்சார் போர்டில் இருக்கிறார்கள்..” – பாதிக்கப்பட்ட இயக்குநரின் கோபக்குரல்..!

“சினிமா பற்றி தெரியாதவர்கள்தான் சென்சார் போர்டில் இருக்கிறார்கள்..” – பாதிக்கப்பட்ட இயக்குநரின் கோபக்குரல்..!

சென்சார் போர்டு நல்ல படங்களுக்கு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்து படத்தின் தன்மையை மாற்றுகிறது என்றும் சென்சார் போர்டின் இந்த முட்டாள்தனமான நடவடிக்கையால் இயக்குநர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் பொங்கித் தீர்த்திருக்கிறார் ‘திலகர்’ படத்தின் இயக்குநர் பெருமாள் பிள்ளை.

இது தொடர்பாக இயக்குநர் பெருமாள் பிள்ளை பேசியது இது :

Thilagar (6)

“சென்சாரில் நாங்கள் பட்ட கஷ்டம் மறக்க முடியாதவை. எனது திலகர் படத்தில் ஒரு ஆபாசக் காட்சியும் இல்லை. தொப்புள் தெரியும் காட்சி இல்லை. ஆபாச வசனமும் இல்லை. ஆனால் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். கேட்டால் ‘படத்தில் வன்முறை அதிகம்’ என்கிறார்கள்.

இதில் அப்படி ஒன்றும் வன்முறைக் காட்சி இல்லை. பல படங்களில் வருவதைப்போல ரத்தம் சொட்ட சொட்ட   வன்முறைக் காட்சி எதுவும் இல்லை. இவர்கள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிற படங்களை ஒப்பிட்டால் இதில் ஒன்றுமே இல்லை. வன்முறை கூடாது என்று பேசுகிற படம் இது.

வன்முறை, குழுவாக கற்பழித்த கொடூரக் காட்சிகள் கொண்ட ‘பருத்திவீரன்’ படத்துக்கே அனுமதி கொடுத்திருக்கிறார்கள். நிறைய படங்களில்  ஆபாசம், வன்முறை, அருவருப்பு.. கொலை செய்து கழுத்தை அறுத்து ரத்தம் வருவதைப் பார்த்து ஆனந்தம் அடைவது போல் காட்சிகளெல்லாம் இருந்தன..  அதற்கெல்லாம்  ‘யூ’ சான்றிதழ்  கிடைக்கிறது. நாலைந்து தலைகளை துண்டாக்கிப் போடுகிற படங்களுக்குக்கூட ‘ஏ’ இல்லை. எங்களுக்கு மட்டும் ‘ஏ’ சான்றிதழ்தான் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.

தெருவெங்கும். சிக்கன்  கடைகள், மட்டன்  கடைகள் இருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான கோழிகள், ஆடுகள் வெட்டிக் கொல்லப்படுகின்றன. ஆனால் படங்களில் ஆடு, கோழிகளைக் காட்டக் கூடாது. காட்டினால் துன்புறுத்தப்படுகிறதாம்.

ஏன்..? சென்சார் போர்டில் படம் பார்க்க வரும்போதே அதன் உறுப்பினர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுவிட்டுத்தான் வந்து உட்கார்கிறார்கள். வந்து உட்கார்ந்ததும் ஆடு கோழி, காட்சி இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். சாப்பிடுவது அவைகளைத்தான். ஆனால் படங்களில் மட்டும் அவைகளைக் காட்டக் கூடாதாம். வந்தால் விலங்குகள் துன்புறுத்தப்படுகிறதாம். ஏனிந்த முரண்பாடு..?

நம் சென்சார் போர்டில் நிறைய சிக்கல்கள், பாகுபாடுகள் முரண்பாடுகள் உள்ளன. நம் தணிக்கை துறை இந்திய அரசின் தணிக்கை துறைதான். மத்திய அரசின் தணிக்கை துறைதான். ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு அளவுகோல் உள்ளது. வெவ்வேறு பார்வை உள்ளது.

இது தமிழ்நாட்டுக்கு மட்டும் உள்ள தணிக்கைத் துறை அல்ல. கேரளாவில், ஆந்திரவில், கர்நாடகத்தில் அனுமதிப்பதை இங்கு விடுவதில்லை. இங்கேகூட ஒருவர் எடுக்கும் படத்தில் உள்ளதை  விடுவார்கள். மற்றொருவர் படத்தில் வெட்டுவார்கள்.

நான் இவர்களுடன் பல மாதங்களாகப் போராடி, போராடி களைத்துப்போய்விட்டேன். இங்கு படம் பார்ப்பவர்களுக்கு தமிழகத்தின் வட்டார மொழி தெரிவதில்லை. நல்ல வார்த்தைகள் எவை என்று  தெரிவதில்லை. கெட்ட வார்த்தைகள் எவை என்று  புரிவதில்லை. அவர்களுக்கு சினிமாவும் தெரியவில்லை. மக்கள் வாழ்க்கையும் தெரியவில்லை. யதார்த்தமும்  தெரிவதில்லை. படாதபாடுபடுத்துகிறார்கள். ஒரு படைப்பாளி இவர்களிடம் படும்பாடு பெரிய போராட்டம்.

ஒரு படத்துக்கு ‘யூ’ சான்றிதழ் என்பது வரி விலக்கிற்கு உதவி செய்கிறது. எங்கள் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். போராடி பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் வாங்கிவிட்டோம்.

பொதுவாக ‘ ஏ’ சான்றிதழ்  பெற்றுவிட்டால் ஆபாசப் படம் என்று மக்கள் கருத இடம் இருக்கிறது. துளியும் ஆபாசமில்லாத ஒரு படத்துக்கு இப்படி  ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதை ஊடகங்களிடம் சொல்கிறோம். மக்களுக்கு அவர்கள்தான் இதனை எடுத்துச் சொல்ல வெண்டும்.

சென்சாரில் உள்ள தவறான அணுகுமுறையால் சிக்கி சின்னாபின்னமாகும் படங்கள் எத்தனை…? படைப்பாளிகள் எத்தனை பேர்..? சென்சார் போர்டில் உள்ள நிறைய சிக்கல்கள் பற்றி பலருக்கும் வெளியே சொல்ல பயம். ஆனால்  பலரும் இப்படி பாதிக்கப்பட்டுள்ளார்கள். நான் பட்ட கஷ்டங்கள் வேறு யாரும் படக்கூடாது என்றுதான் இதை வெளியே சொல்கிறேன். பலரும் சொல்லாமல் உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்…” என்று குமுறித் தீர்த்திருக்கிறார் இயக்குநர் பெருமாள் பிள்ளை.

Our Score