‘அவன் இவன்’ பட வழக்கில் இருந்து பாலா தப்பித்தார்..!

‘அவன் இவன்’ பட வழக்கில் இருந்து பாலா தப்பித்தார்..!

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா நடிப்பில் ‘அவன் இவன்’ திரைப்படம் வெளியானது.

கடந்த 2011-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும், சிங்கம்பட்டி ஜமீன்தார் பற்றியும் அவதூறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிங்கம்பட்டி ஜமீனின் இளைய ஜமீன்தாரான சங்கராத்மஜன் என்பவர் இயக்குநர் பாலா மற்றும் படக் குழுவினர் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் ஏற்கனவே நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா இருவரும் ஆஜராகி உள்ளனர். 

கடந்த மார்ச் மாதம் நடிகர் ஆர்யா தரப்பில் படத்தில் இடம் பெற்ற காட்சிகளுக்கு வருத்தம் தெரிவித்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், இயக்குர் பாலா மீதான விசாரணை தொடர்ந்து அம்பை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

சிங்கம்பட்டி ஜமீன்தாரும் சென்ற ஆண்டு திடீரென காலமானார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மீதான குற்றத்தை முறையாக நிரூபணம் செய்யாததால், இயக்குநர் பாலா வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 
Our Score