“எல்லாமே பில்டப்புதான்..” – 18 கோடி செலவை 32 கோடி என்று பொய் சொன்ன செல்வராகவன்

“எல்லாமே பில்டப்புதான்..” – 18 கோடி செலவை 32 கோடி என்று பொய் சொன்ன செல்வராகவன்

தான் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடிதான். ஆனால் 32 கோடி ரூபாய் என்று பொய் சொன்னதாக இயக்குநர் செல்வராகவன் ஒத்துக் கொண்டுள்ளார்.

செல்வராகவனின் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது தனது தம்பியான நடிகர் தனுஷை வைத்து இயக்கப் போவதாக அறிவித்திருந்தார் செல்வராகவன்.

இந்த நிலையில் இன்று காலையில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பட்ஜெட் பற்றி தனது டிவீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் செல்வராகவன்.

அந்த ட்வீட் செய்தியில், “ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடிதான். ஆனால் அதை மெகா பட்ஜெட் படமாக காட்ட 32 கோடி என்று அறிவிக்க முடிவு செய்தோம். என்ன ஒரு முட்டாள்தனம்! உண்மையான பட்ஜெட் தொகையை படம் வசூல் செய்தபோதிலும், அது சராசரியாக கருதப்பட்டது. என்ன முரண்பாடாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்…” என்று எழுதியிருக்கிறார்.

செல்வராகவனின் இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் செய்தவர்கள் பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே சினிமாக்காரர்கள் பில்டப்பில்தான் வாழ்க்கையை ஓட்டி வருவதாக மீடியாக்கள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலைமையில் வலிய வந்து உண்மையை ஒப்புக் கொள்ளும் செல்வராகவனை பாராட்டுவதா அல்லது திட்டுவதா என்று தெரியவில்லை.
Our Score