‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ்-படப்பிடிப்பு நிறுத்தம்

‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ்-படப்பிடிப்பு நிறுத்தம்

ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக ஹைதராபாத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு இதுவரையிலும் 60 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. மீதமிருக்கும் காட்சிகளைப் படமாக்க கடந்த வாரம்தான் படப்பிடிப்பு துவங்கியது.

ரஜினி இந்த மாதக் கடைசியில் புதிதாக கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளதால், அடு்த்த மாதம் பொங்கலுக்குள்ளாக படப்பிடிப்பை முடித்துவிட சொல்லியிருந்தார். இதையடுத்து ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மும்முரமாக ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் திடீரென்று இன்றைய படப்பிடிப்பின்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த சில தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

உடனேயே ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகளுக்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரஜினிக்கு ‘நெகட்டிவ்’ என்று வந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ரஜினி ஹைதராபாத் ஹோட்டலிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தப் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக கலந்து கொள்ளும் அனைத்துக் கலைஞர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் மூன்று முறை டெஸ்ட் எடுத்த பின்புதான் அனைவரும் ஹைதராபாத்துக்கே கிளம்பினார்கள். வைரஸ் நெகட்டிவ் என்று சான்றிதழைக் காட்டியவர்களுக்கு மட்டுமே பிளைட் டிக்கெட் போடப்பட்டது.

இவ்வளவு முன்னெச்சரிக்கையாக நடந்தும் இந்த வைரஸ் எப்படி பரவியது என்பது மில்லியன் டாலர் கேள்விதான். ஹைதராபாத்தில் லோக்கலில் வெளியே போய்விட்டு வந்தவர்களால் இது பரவியிருக்கும் என்றுதான் படக் குழுவினர் சந்தேகப்படுகிறார்கள்.

இதன் காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

Our Score