‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் படத்தில் ஒரு கேரக்டர் கிடைத்துவிடாதா.. 2 சீன் என்றாலும் நடிக்க வாய்ப்பு வராதா என்று ஏங்கித் தவிப்பவர்கள் தமிழ்த் திரையுலகத்தில் நிறைய பேர்.
ஆனால், கமல்ஹாசனின் கனவுப் படைப்பான ‘மருதநாயகம்’ படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் நடிகர் நெப்போலியன்.
இதற்கான காரணத்தை இப்போது ‘சாய் வித் சித்ரா’ பேட்டியில் சொல்லியிருக்கிறார் நடிகர் நெப்போலியன்.
அவர் இது பற்றிப் பேசும்போது, “1993-ம் வருடம் ரஜினி ஸார் நடித்த ‘உழைப்பாளி’ படத்தில் ஒரு பிரச்சினை. இந்தப் படத்துக்கு விநியோகஸ்தர்கள் ரெட் கார்டு போட்டதால் அது பற்றிப் பேசுவதற்காக நடிகர்களெல்லாம் கூடி ஆலோசனை செஞ்சோம். இந்த ஆலோசனை கூட்டம் ரஜினி ஸாரின் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது.
அந்தக் கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். நிகழ்ச்சி முடிந்த பின்னாடி கமல் ஸார் என் பக்கத்துல வந்து என் கையைப் பிடிச்சுக் குலுக்கி, “சீவலப்பேரி பாண்டி’ படம் பார்த்தேன். பிரமாதமா நடிச்சிருந்தீங்க. சத்தியமா நான்கூட அந்த அளவுக்கு நடிச்சிருக்க முடியாது. அவ்வளவு அற்புதமா நடிச்சிருக்கீங்க.
முதல்ல அந்தப் படம் என் கைக்குத்தான் வந்துச்சு. அந்தக் கதை ‘ஜூனியர் விகடன்’ல தொடர் கதையா வந்தப்பவே நான் ஆர்வமா படிச்சேன். நான்தான் இதுல நடிக்கணும்ன்னு இருந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க.. ஆனால், என்னைவிட நீங்கதான் அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமா இருக்கீங்க..” என்று சொல்லிப் பாராட்டினார்.
அப்போது அவரிடம் நான், “ஸார்.. உங்க படத்துல ஒரு கேரக்டர்ல நடிச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கும். நாலு சீன் வந்தால்கூட போதும் ஸார்..” என்றேன். “சொல்றேன்.. சொல்றேன்..” என்று சொல்லிவிட்டுப் போனார்.
இது நடந்து முடிந்து 3 வருஷம் கழிச்சு ஒரு நாள் என்னை அழைத்தார். நானும் சென்றேன். என்னிடம் ‘மருதநாயகம்’ படத்தின் கதையைச் சொல்லி அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கச் சொன்னார்.
அந்தக் கதை அற்புதமாக இருந்தது. கதையைக் கேட்டவுடன் சிலை போல் அமர்ந்திருந்தேன். ஆனால், வில்லன் வேடம் என்றவுடன் எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
“ஸார்.. நான் இப்பத்தான் 4, 5 படங்கள்ல ஹீரோவா நடிச்சுக்கிட்டிருக்கேன். இப்போ போய் நான் வில்லனா நடிச்சா.. அந்தப் படங்களுக்கு பாதிப்பு வரும். அந்தத் தயாரிப்பாளர்களும் பாவம் ஸார்..” என்றேன்.
“இல்ல.. இந்தக் கேரக்டர் உங்களுக்கேத்தாப்புல இருக்கும். நீங்க நடிச்சாத்தான் பொருத்தமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்..” என்றார். நான் மறுபடியும் என் தரப்பு வாதத்தை வைத்தவுடன், “சரி ஓகே.. அடுத்தப் படத்துல பார்ப்போம்..” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
இதுக்கப்புறம் மிக நீண்ட வருடங்கள் கமல் ஸார் என்னைக் கூப்பிடவேயில்லை. பல இடங்கள்ல பார்த்தோம். பேசினோம். ஆனால் நடிக்க மட்டும் கூப்பிடலை.
ரொம்ப வருஷம் கழிச்சு ‘விருமாண்டி’ படத்துக்குக் கூப்பிட்டு என்னை ஒரு நல்ல கேரக்டர்ல நடிக்க வைச்சாரு. அதுக்கப்புறம் கொஞ்ச சீன்களே இரு்தாலும் ‘தசாவாதாரத்துல’ நடிக்க வைச்சாரு. ‘தசாவாதாரத்துல’ நடிக்கும்போது “நான் எதுக்கு ஸார் இந்த நாலு சீனுக்கு…?” என்று கேட்டேன். “இல்ல.. இல்ல.. இந்தக் கேரக்டருக்கு உங்களைவிட்டால் எனக்கு வேற ஆளே தோணலை.. நீங்கதான் நடிக்கணும்..” என்று சொல்லி நடிக்க வைத்தார்.
ரஜினி ஸாருக்கு வில்லனா நடிச்சிருந்தாலும், கமல் ஸாருக்கு வில்லனா நடிக்காமல் கேரக்டர் ரோல் செஞ்சதில் எனக்கு பரம திருப்திதான்..” என்கிறார் நடிகர் நெப்போலியன்.