இந்தப் படத்தில் ரஜினி, எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, சூரஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா, மாஸ்டர் ரித்விக், ஜதின் சர்மா, நமோ நாராயணா, விஜய் யேசுதாஸ், அண்ண ராஜன், பி.எல். தேனப்பன், ஜாபர் சாதிக், பதம் குமார், ஷீலா ராஜ்குமார், அபிஷப் போர்வால், தமிழ் சரவணவேல், பகவதி பெருமாள், கோட்டை நசீர், சுனில் சுகதா, சுஜித் சங்கர், ஹக்கீம் ஷாஜகான், விநீத் தட்டில் டேவிட், பிரம்மச்சந்திரன் துரைராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், பூர்ணா, ராஜேஷ் மாதவன், நோரா பதேஹி.. இவர்களுடன் கிரித்திக் ரோஷன். இவருடைய கதாபாத்திரத்தை கடைசிவரையிலும் ரொம்பவும் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். கடைசி நேரத்தில் விஜய் சேதுபதியும் வந்து எண்ட்ரி கொடுத்துள்ளார்.
- இசை: அனிருத்
- ஒலிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்
- படத்தொகுப்பு: ஆர். நிர்மல்
- கலை இயக்கம்: டி.ஆர்.கே. கிரண்
- சண்டை பயிற்சி: சேத்தன் டி சோசோ, ஆடை வடிவமைப்பு பல்லவி சிங், முதில் கபீஸ்
- எழுத்து, இயக்கம்: நெல்சன்
‘ஜெயிலர்-1’ எப்படி இருந்ததோ, அதே போன்ற அதே பார்மட்டில் இந்தப் படத்தையும் கொண்டு வந்துள்ளார் நெல்சன். ஜெயிலர்-1 ஜெயித்ததுக்கு காரணம், அந்தப் படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரை கூடவே வந்து கொண்டிருந்த, இழையோடிக் கொண்டிருந்த நகைச்சுவை. சிச்சுவேஷன் காமெடி. அப்பப்போது எழுந்த சின்ன சின்ன வசனங்கள் மூலமாக மேலும் ஒரு காமெடி. இந்த இலக்கணங்களெல்லாம் இந்தப் படத்தில் அப்படியே அமைந்துள்ளது.
முதல் பாகத்தில் விநாயகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தாங்களோ, அதே மாதிரியான முக்கியத்துவத்தை இந்த இரண்டாம் பாகத்தில் இரண்டு பேருக்கு கொடுத்திருக்கிறார் நெல்சன். சூரஜ் வெஞ்சாரமூடு, எஸ்.ஜே.சூர்யா. ரெண்டு பேருக்குமே மிகச் சரியான அளவில் வில்லத்தனத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைக் கொடுத்து அவர்கள் நடிப்பதற்கும் நிறையவே ஸ்கோப் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
இவர்கள் சிறப்பாக பேசப்பட்டதால் ரஜினியும் பேசப்பட்டுள்ளார், அதுதான் உண்மை. எப்போது வில்லன் சரியான நபராக இருக்கிறாரோ அந்தப் படத்தில் ஹீரோவும் மிகப் பெரிய அளவுக்கு பேசப்படுவார்கள். இது வெற்றி பெற்ற கமர்ஷியல் சினிமாக்களில் காணப்படும் சூத்திரம். அந்த வரிசையில் இந்தப் படமும் வில்லன்களால் பேசப்படுகிறது.
ஜெயிலர்‘ முதல் பாகத்தில் கலைப் பொருட்கள் இருந்த மூன்று டிரக்குகளை ரஜினி கடத்திச் செல்வார். இந்த பாகத்தில் அந்த டிரெக்குகளையும், விநாயகனை கொலை செய்த ரஜினியையும் வில்லன் கோஷ்டி கண்டுபிடிப்பதுதான் கதை.
சிலை கடத்தல் தொழிலில் இந்தியாவிலேயே மிகப் பெரிய எஸ்.ஜே.சூர்யா. அவருடைய தங்கச்சி வித்யா பாலன். அவங்க அப்பா மிதுன் சக்கரவர்த்தி. இந்த மூணு பேர் டீம்தான் இந்தியா முழுக்க இந்தக் கடத்தல் தொழிலை கனகச்சிதமாகச் செய்கிறார்கள்.
இவர்களுக்குக் கீழே கேரளாவின் தளபதியாக இருப்பது சூரஜ் வெஞ்சாரமூடு. இவருக்கு கீழே நிறைய சின்ன சின்ன புள்ளிகள் எல்லாம் இருக்காங்க. அவர்கள் சிலை கடத்தியவர்களிடமிருந்து இதை வாங்கி சூரஜிடம் கொடுக்கிறார்கள். மற்றபடி இவர்களுக்கு மேலிடம் யார் என்று தெரியவே தெரியாது. இந்த நேரத்தில் வர்மனை யார் கொலை செய்தது என்று சொல்லி ஒரு டீமை போட்டு அலசி வருகிறார் சூரஜ்.
ரஜினி என்ற முத்துவேல் பாண்டியன் முதல் பாகத்தில் செய்த அந்தப் படுகொலைகளோட விட்டுவிட்டு, இப்போது கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கும் தடாகம் என்ற ஊரில் அமைதியா தனது குடும்பத்தினருடன் வாழ்கிறார்.
பக்கத்தில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்ல சூப்பர்வைசரா வேலை பார்த்து வருகிறார். அதே ஊரில் இருக்கும் தாதா மாதிரியான ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தி என்ற நமோ நாராயணன். கொஞ்சம் அலட்டல் பார்ட்டி. ஆனால், அடிதடிக்கு அஞ்சாதவர்..
அந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேலை பார்க்கிற பகவதி பெருமாளோட ரஜினிக்கும் சின்ன சண்டை ஆகிறது. அதை வச்சு ரஜினி பகவதி பெருமாளை அடித்துவிட, பகவதி பெருமாளுக்காக மூர்த்தி ரஜினியை கார்னர் செய்கிறார்.
ரஜினியை கூப்பிட்டு, “நீ இனிமே எனக்கு கார் டிரைவரா இரு..” என்கிறார் மூர்த்தி. ஒரு முறை ரஜினி மூர்த்தியுடன் காரில் போகும்போது, லோக்கல் ஊரின் கோவிலிருந்து யோகிபாபு ஒரு சாமி சிலையைக் கடத்திக் கொண்டு ஓடி வருகிறார்.
ரஜினி யோகிபாபுவை மூர்த்தியிடம் கோர்த்துவிடுகிறார். “இந்த சிலையை அழகா கடத்திட்டு போய் வெறும் பத்து லட்சத்தை கொடுத்து, ஒண்ணே கால் கோடி ரூபாய்க்கு விக்கிறாங்க” என்கிறார் ரஜினி.
பணத்தாசை பிடித்த மூர்த்திக்கும் ஆசை வருகிறது. “நானே அந்த தொழிலை பண்றனே” என்று சொல்லிவிட்டு யோகிபாபுவைகூட வைத்துக் கொண்டு மூர்த்தியும் சிலை கடத்தல் தொழிலை ஆரம்பிக்கிறார்.
சிலையை நேராக சூரஜிடமேபோய் பேரம் பேசி விற்கத் துவங்குகிறார். இது வொர்க் அவுட்டாகத் துவங்கிய பிறகு இன்னும் சில சிலைகளை கடத்திகளை கடத்திக் கொண்டு போய் கொடுக்க ஆரம்பிக்கிறார் மூர்த்தி. ஆனால் ரஜினியோ இவர்களைத் தொட்டுத் தடவுப் போய் கடைசியாக இவருடைய மூல ஆதாரம் யார்? முதல் புள்ளி யார்? அவனை முதல்ல பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
சூரஜூம் வர்மனை கொலை செய்த ஆளை வலைவீசி தேடுகிறார். கடைசியில் ஒரு கட்டத்தில் மூர்த்தியின் டிரைவரான முத்துவேல்தான் தான் தேடும் ஆள் என்பது சூரஜூக்குத் தெரிய வருகிறது.
சூரஜ் ரஜினியை கொலை செய்ய முயற்சிக்க.. ரஜினியோ தனது மறைமுகமான ஆட்கள் மூலமாக சூரஜை நிராயுதபாணியாக்கி அவருக்கு மேலேயிருக்கும் ஆட்களைக் காலி செய்தால் அவரை விட்டுவிடுவதாகச் சொல்கிறார்.
ரஜினியின் திட்டப்படி சூரஜ் தனது பாஸான எஸ்.ஜே.சூர்யாவை வரவழைத்து அவரைக் கொலை செய்யத் துணிகிறார். அந்தக் கொலை சம்பவத்தில் சூர்யா முந்திக் கொள்ள சூரஜ் அநியாயமாக உயிரை விடுகிறார்.
முத்துவேல் பாண்டியன்தான் வர்மனை கொலை செய்த்து.. கூடுதலாக அவரிடம்தான் கன்டெயினர்தான் இருக்கிறது என்பதை அறியும் எஸ்.ஜே.சூர்யா ரஜினிக்கு இந்த பிராஜெக்ட்டில் உதவி செய்த சிவ்ராஜ்குமாரின் மனைவி, மகனை கடத்திச் செல்கிறார்.
வேறு வழியில்லாமல் ரஜினி அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் போக.. இதற்கு மேல் என்ன நடந்தது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
பொதுவாக ரஜினி மாதிரியான பெரிய ஹீரோக்களுக்கு கதை பண்ணும்போது, அவருக்கு மிகப் பெரிய ஹிப் கொடுப்பாங்க.. அதே மாதிரி அவருக்கு நிறைய உடல் உழைப்பையெல்லாம் கொடுப்பாங்க. ஆனால் ரஜினிக்கு இப்போது நடையிலேயே தளர்ச்சி தெரியுது, எழுபத்தி நாலு வயசாச்சு. அதனால் அவருக்கு அதிகமா உடல் உழைப்பு தராமல், வெறுமனே மூளை உழைப்புடன் அவர் செயல்படுறார் என்பது மாதிரியான ஸ்கிரீன் பிளேயை அமைத்து இந்தப் படத்தின் துவக்கத்திலிருந்து கடைசி வரைக்கும் ரஜினியை ஒரு நடமாடும் மூளை திலகமாக நடிக்க வைத்து, அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைத்து, அதனால் எதிராளிகளை அவர் சமாளித்து, எதிரிகளை கடைசியாக வதம் செய்கிறார் என்று படத்தைக் கொண்டுபோய் முடித்துள்ளார் இயக்குநர் நெல்சன்.
ரஜினி ஜெயிலர் 1-ல் எப்படி இருந்தாரோ அதே முத்துவேல் பாண்டியனாகத்தான் இதிலும் இருக்கிறார். ஒரு சில இடங்களில் ஸ்டைலா ஒரு பார்வை பார்ப்பதும், வாயை கொஞ்சம் கோணலாக வைத்துக் கொண்டு பேசுவதுமாக நடித்திருக்கிறார்.
சிற்சில ஸ்டைல்களையும் காட்டியிருக்கிறார். அதுலயும் ‘பாட்சா’ பட ஸ்டைலில் கோவா மாநில உள்துறை மந்திரியை பார்க்க வருவது தியேட்டரில் அப்ளாஸ்களை அள்ளுகிறது.
ரஜினி தன்னால முடிந்த அளவுக்கு, தன்னுடைய சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு என்ன செய்ய முடியுமோ.. என்ன கொடுக்க முடியுமோ.. அதைக் கொடுத்துப் படத்தைக் காப்பாற்றியிருக்கிறார்.
அதற்கு அடுத்து சூரஜ் வெஞ்சாரமூடுதான்.. பின்னி எடுத்திருக்கான் மனுஷன். அவ்வளவு அழகான நடிப்பு. வில்லத்தனத்துல அப்படி ஒரு வில்லத்தனத்தைக் காட்டியிருக்காரு அந்த ஆளு. அதுலேயும் ‘நமோ நாராயணன் வந்து செஸ்போர்ட்ல காயினை நகர்த்தி வச்சிட்டு போகும்போது, “இவன் எடுத்து வச்சது யானையில்லை. அடிச்சதும் ராஜா இல்லை.. என்று சொல்லும்போது கை தட்டலில் தியேட்டரே அதிர்கிறது. இவரும், நமோ நாராயணனும் இணைந்து தோன்றும் காட்சிகளில் இயல்பான நகைச்சுவை தெறிக்கிறது.
நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா இடைவேளைக்கு பிறகுதான் வருகிறார் என்றாலும் கிளைமாக்ஸ்வரையிலும் அத்தனையும் அதகளம்தான்.
இடையிடையே விரக்தியாக பேசும்போதும், கோபமாகக் கத்தும்போதும், ரஜினியின் பதில் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பேசும்போதும் விரக்தியைக் காட்டிலும் நமக்கு சிரிப்பையே தந்திருக்கிறார்.
கொஞ்சம் சென்டிமென்ட்டோடு பேசி ரஜினியை மடக்க நினைத்து ரஜினி வீட்டுக்குள்ளேயே வந்து அவர் மகனை யார் கொலை செய்தது என்று ரீவைண்டிங் செய்து கொண்பிக்கும் அந்த பத்து நிமிடக் காட்சியில் அவ்வளவு அழகாக நடித்துள்ளார்.
வித்யா பாலன் எஸ்.ஜே.சூர்யாவின் அக்காவோ, தங்கையாவோ நடித்துள்ளார். எந்நேரமும் சீக்ரெட்டை ஊதிக் கொண்டு, அப்பாவுக்குப் பிடித்த மகளாகவும் வில்லியாக நடித்துள்ளார்.
ரஜினியிடம் காபியை குடிக்கச் சொல்ல.. அவர் மறுக்க.. “இங்க.. நாங்க என்ன சொல்றோமோ அதை செய்யாமல் யாரும் வெளியே போக முடியாது” என்று அசல் வில்லியாக பேசும் காட்சியில் கை தட்ட வைத்திருக்கிறார். கிளைமாக்ஸில் “குட்மார்னிங்கிற்கு ரிப்ளையே வரலையே?” என்று ரஜினி கேட்கும்போது காட்டும் ரியாக்ஷனில் அசத்தியிருக்கிறார்.
மிதுன் சக்கரவர்த்திக்கு ரொம்ப பெரிய கேரக்டர் இல்லை. உட்கார்ந்து கொண்டே பேசும் மாதிரியான கதாபாத்திரம்தான். அவரும் சிறப்பா செஞ்சிருக்காரு.
இவர்களுக்கு இடையில நமோ நாராயணன் தன்னுடைய சிறப்பான நடிப்பால் அத்தனை பேரையும் கவர்ந்திழுக்கிறார். மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் ரஜினியை முழுசா நம்பி, அவர் என்ன சொல்றாரோ அதையெல்லாம் கேட்டு, கடைசியில அடி வாங்குன பின்னடி இதைப் பத்தி யோசிக்கும்போது பயங்கர காமெடியைக் கொடுத்திருக்கிறார்.
நமோ நாராயணனுக்கு இந்த அளவுக்கு வேறு எந்தப் படத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. இவ்வளவு அழகான நடிப்பை இவரிடமிருந்து வாங்கியிருக்கும் இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு!
இதேபோல் இதுவரைக்கும் யோகி பாபுவை இப்படி யாரும் நடிக்க வைத்ததில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தொடர்ந்து சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இதுக்கு யோகி பாபுவும் நிறைய உதவிகளை தன் நடிப்பில் செய்து கொடுத்திருக்கிறார்.
அவருடைய டயலாக் டெலிவரி அழகோ அழகு. ஓவராக கத்தவும் இல்லாமல், யாரையும் பாடி ஷேமிங் செய்யவும் இல்லாமல் தன்னைத்தானே பகடி செய்து கொண்டு படம் நெடுகிலும் வலம் வந்திருக்கிறார் யோகிபாபு.
மெதுவாக, மென்மையாக முணுமுணுக்கிற மாதிரியான பேச்சு, ஆனால் அவருடைய ஒவ்வொரு பேச்சும் கவனிக்கத்தக்கது. கொஞ்சம் மைனூட்டாக சிரிக்க வைத்துக் கொண்டேயிருந்தார். யதார்த்தமாக சொல்கிற பதில், அவருடைய பாடி லாங்குவேஜ் அதையும் ரொம்ப காமெடியா கொண்டு வந்திருக்காங்க.
கிரித்திக் ரோஷன் மிகப் பெரிய துப்பாக்கி சுடும் வீரனாக வந்து ரஜினிக்கு உதவி செய்கிறார். சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என்று கேரளா, கன்னடம், இந்தி ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பிரபலத்தை நடிக்க வைத்து இந்தப் படத்தை ஒரு பான் இந்திய படமாக ஆக்கியிருக்கிறார் இயக்குநர் நெல்சன்.
அனிருத்தின் இசையில் பாடல்களின் எண்ணிக்கை அதிகம். காதில் விழுந்த்து முதல் வரிகள் மட்டும்தான். மற்றவையெபல்லாம் ஒலியின் இரைச்சலில் காதில் விழுகவே இல்லை.
‘ஆல போலே’, ‘ஒன் சன், ஒன் மூன்’, ‘நேற்று போனவை’, ‘வேற மாதிரி’ ஆகிய பாடல்கள் கொஞ்சம் காதில் விழுந்தன. ‘ஜெயிலர் தீம்’ பாடலும் ஓகேதான். ‘புடப்பு சாங்’ பாடலில் ஆடியவரையே பார்க்க வேண்டியிருந்த்தால் பாடல் புரியவில்லை. தனியாக்க் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.
ஆனால் பின்னணி இசை சிறப்புதான். நெல்சன் ஒரு சிறந்த இயக்குநர் என்பதால் இதை மட்டும் கரெக்டா கேட்டு வாங்கியிருக்கிறார்.
எடிட்டர் ஆர்.நிர்மல் ரொம்பவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடிட் பண்ணிருப்பார். அவ்வளவு அழகான சீக்குவன்ஸ். நிறைய கொலைக் காட்சிகள். ரத்தம் தெறிக்கிறது. ரத்தம் சிந்தாத காட்சியே கிடையாதுன்ற மாதிரி எல்லாரும் சும்மா கொசுவை வசுற மாதிரி சுட்டு தள்ளிட்டே போறாங்க. அதுவும் தேனப்பனை காப்பாத்தும் இடத்தில் இயந்திரத் துப்பாக்கியால் ரஜினி 20 ரவுண்டு வெறி கொண்டு சுட்டுத் தள்ளுகிறார். ரத்தம் எத்தனை மில்லி லிட்டர் செலவானது என்றே தெரியவில்லை. படத் தொகுப்பாளருக்கு நமது பாராட்டுக்கள்.
சண்டை இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள். சூரஜ் வெஞ்சாரமூடு ஆட்களோடு ரஜினி போடும் சண்டையும், கிளைமாக்ஸ் சண்டையில் பெண் வீராங்கனைகள் சூர்யாவின் ஆட்களோடு போடும் சண்டையும் அபாரம். அவ்வளவு அழகா எடிட்டிங்கும் பண்ணிருக்காங்க.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் இந்தப் படம் மூளையை கழட்டி வச்சுட்டு பார்க்க வேண்டிய திரைப்படம். இதில் லாஜிக்கெல்லாம் பார்த்தீங்கன்னா, ஆகவே ஆகாது.
ஏன்னா இந்தப் படத்தில் லாஜிக்கே இல்லை இல்லவே இல்லை. போலீஸ் அப்படிங்கிற விஷயத்தை கண்ணுலகூட காட்டல இயக்குநர் நெல்சன். கோவாவிலாவது கோவா போலீஸையும், உள்துறை அமைச்சரையும், இன்ஸ்பெக்டரையும் காட்டுறாங்க, ஆனா தமிழ்நாட்டில் அதைக்கூட காட்டல.
ஆனாலும், இந்தக் கதை இந்த 2026-ல் நடக்குதுன்னு காட்டிட்டு, இந்தியாவில் மோடி ஆட்சியில் இப்படி எல்லாம் நாட்டில் அநியாயம் நடக்குதுன்னு காட்டுறதைத்தான் நம்மால் ஜீரணிக்கவேதான் முடியல. கொஞ்சம் கஷ்டமா இருக்கு மிஸ்டர் நெல்சன்.
ஒரு கமர்சியல் திரைப்படம். இதுல ஒன்னும் லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க. வந்தோமா, மூளையை கழட்டி வச்சுட்டு பார்த்தோமா, சிரிச்சோமான்னு கிளம்பி போங்கன்னு நெல்சன் நமக்கு மறைமுகமா சொல்லியிருக்காரு.
அவங்களுக்கு தேவை பணம். இது வியாபாரம். இது அவார்டு படம் அல்ல. முதலீடா போட்ட காசுக்கு மேல காசு வரணும்னுதான் தயாரிப்பாளர் நினைப்பாங்க. ஜெயிலர் முதல் பாகம் 687 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்தப் படம் அதைவிட வசூல் பண்ணனும் அப்படிங்கிறதுக்காக, அதே மாதிரியான பார்மெட்டில் கொண்டு வந்து எடுத்து இருக்காங்க.
ஆனாலும் இந்த ஜெயிலர் கதை இத்தோட முடியுமா அப்படின்னு தெரியல. ஏன்னா கடைசியில விஜய் சேதுபதி வந்து “கிளம்பலாமா?”ன்னு கேட்கும்போது வித்யா பாலன் செல்போனில் “குட்மார்னிங்” சொல்றாங்க..
ஆக மொத்தம், ரஜினி ஜெயிலுக்குப் போனாலும், தன்னுடைய அப்பா, சகோதரனின் கொலைகளுக்குப் பலி வாங்குவதற்காக ’காந்தா’ என்ற வித்யா பாலன் காத்துட்டு இருக்காங்க அப்படின்னு சொல்லி முடிச்சிருக்காங்க.
ஒருவேளை இந்த ‘காந்தா’வின் பலி வாங்கும் படம், ஜெயிலர் 3-வது மூன்றாவது பாகமாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. வந்தாலும் அதுவும் நிச்சயமாக ஓடும்.
ஏனெனில், இந்தப் படம் நெல்சன் என்கிற மிகச் சிறந்த கமர்ஷியல் இயக்குநரின் இயக்கத்தில் உருவான படம். ஒரு சிறந்த இயக்குநர் எப்படி ஒரு கமர்சியல் படத்தை எடுத்துக் கொடுப்பாரோ அப்படித்தான் தனது இயக்கத்தை செய்துள்ளார் நெல்சன். வேறு எந்த இயக்குநருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது.
ரஜினி என்ற மிகப் பெரிய ஒரு கமர்சியல் பம்பர் ஹீரோவின் படம் என்பதால்தான் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மிதுன் சக்கரவர்த்தி, கிரித்திக் ரோஷன், வித்யா பாலன் என்று மிகப் பெரிய சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகளை உள்ளே திணித்தி, இவ்வளவு பட்ஜெட் செலவில் இந்தப் படத்தினை எடுக்க முடிந்துள்ளது.
ஆனால் இப்படியே இது மாதிரியே கமர்சியல் படங்கள் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வெளியானால் தமிழ் சினிமா என்னவாகும் என்பதை, ரஜினிகாந்தும் யோசிக்க வேண்டும். சன் பிக்சர்ஸும் யோசிக்க வேண்டும். நீங்களும் யோசிக்க வேண்டும்.
தியேட்டருக்கு வரக் கூடிய இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்கும்விதமாக இப்படியே படம் எடுத்துக் கொடுத்தீங்கன்னா, அவங்க என்னத்துக்கு ஆவாங்க? என்டர்டைன்மென்ட் தேவைதான். ஆனால், இந்த அளவுக்கு எல்லாம் என்டர்டைன்மென்ட் தேவையா?
வளரக் கூடிய இளைஞர்களை மனதில் வைத்து, கொலை, கொள்ளை, கத்தி குத்து, ரத்தம் சிந்துதல் இதையெல்லாம் கொஞ்சம் மட்டுப்படுத்தி படம் எடுத்தால், தமிழ் சினிமாவுக்கும், திரைப்பட துறைக்கும், தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும், நமது அடுத்தத் தலைமுறையினருக்கும் நல்லது!
RATING : 3.5 / 5









