இந்திய சினிமா உலகைச் சேர்ந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ‘நட்சத்திர கிரிக்கெட்’ என்ற பெயரில் தொடங்கிய கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதேபோல், இப்போது தமிழ் நடிகர்களை ஒன்று திரட்டி, பேட்மிண்டன் போட்டிகளை நடத்த ‘இந்தியன் பேட்மிண்டன் செலிபிரட்டி லீக்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு உலக அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு பண நெருக்கடி இருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்யும்பொருட்டு, இதில் வசூலாகும் நிதியை தேசிய அளவிலான பேட்மிண்டன் வீரர்களின் வளர்ச்சிக்காக செலவிட இருக்கிறார்களாம்.
இந்த ‘செலிபிரட்டி லீக் பேட்மிண்டன்’ போட்டியில் கலந்து கொள்ள தமிழின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதுவரை 50 நடிகர், நடிகையர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில், ஆர்யா, பரத், ஜெய், ஜெயம் ரவி, சிவா, ஆரி, தமன், சுந்தர்.சி., எஸ்.பி.பி.சரண், நரேன், ஜான் விஜய், விடிவி கணேஷ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஆதி, உதய், ராகுல், கிருஷ்ணா, நடிகைகள் அமலா பால், ஓவியா, லட்சுமி ராய், ரூபா மஞ்சரி, ஜனனி ஐயர் உள்ளிட்டோரும் அடங்குவர். இன்னும் பலர் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்..
இந்த பேட்மிண்டன் போட்டிகளுக்கான பயிற்சி வருகிற அடுத்த மாத முதல் வாரத்தில் தொடங்குகிறது. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இப்போட்டிகளின் தொடக்க விழா ஜுலை 8-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தொடர்ந்து 9, 10 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடக்கவுள்ளன. .
பேட்மிண்டன் விளையாட்டில் பெண் வீராங்கனைகள் ஜூவலா கட்டா, பியூஸ் சாவ்லா மாதிரி குட்டைப் பாவாடை போட்டுத்தான் விளையாடுவார்கள். இதில் எப்படி..? “இரண்டு வகை உடைகளை தர இருக்கிறோம். அதில் குட்டைப் பாவாடையும் இருக்கும். அவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதை அணிந்து விளையாடலாம்…” என்கின்றனர் போட்டி அமைப்பாளர்கள்.
இதுக்காகவே கூட்டம் அள்ளுமே..!