இளைய தளபதி விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றிய சர்ச்சைகள், அதைத் தயாரிக்கும் நிறுவனம் சிங்கள ஆதரவு நிறுவனம் என்கிற செய்திகள் பற்றியெல்லாம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியளித்திருக்கிறார். அது இங்கே :
“விஜய்யும், நானும் இணைந்து பணியாற்றிய ‘துப்பாக்கி’ படத்துக்கு பிறகு இந்த படத்தில் இணைவதால் மட்டுமே படத்திற்கு ‘கத்தி’ என்று பெயர் வைக்கவில்லை. படத்தின் டைட்டிலான கத்திக்கும் படத்திற்கும் பெரிய தொடர்பு இருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த முதல் ஆயுதம் கத்திதான். அது பற்றி படத்தில் பேசியிருக்கிறேன்.
படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அது அப்பா, மகன் என்பது பற்றி வந்த செய்திகள் தவறு. கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு வெவ்வேறு கேரக்டர்கள். பல்வேறு மாநிலங்கள் தொடர்புடைய தாதா கதையும் இல்லை. துப்பாக்கியின் தொடர்ச்சியும் இல்லை. இது சென்னையிலேயே தொடங்கி சென்னையிலேயே முடிகிற கதை.
சமந்தாவின் கேரக்டர் பெயர் அங்கீதா. சமந்தா எப்படி தேர்வானார் தெரியுமா…? நான் மொழி தெரியாத இடத்தில் வேலை செய்துவிடுவேன். ஆனா மொழி தெரியாதவங்ககூட வேலை பார்க்குறது கஷ்டம். சமந்தா, தமிழ் மொழி தெரிஞ்ச நம்ம ஊர் பொண்ணு… சிரிச்ச முகம் எப்போதும் எனர்ஜின்னு துருதுருன்னு இருப்பாங்க. அதுனாலதான் சமந்தா.
இசை அனிருத். கதை சொல்றதுக்கு முன்னாடியே தீம் மயூசிக்கோடு வந்து நின்னார். ‘கதையே தெரியாம எப்படிங்க தீம் மியூசிக்கு?’ன்னு கேட்டா. ‘ஹீரோவுக்கு ஒரு தீம் மியூசிக் வேணும்தானே…?’ என்றார். அவ்ளோ பாஸ்ட். ஒளிப்பதிவாளர் ஜார்ஜ். அவர் நிறங்களை கையாளும் விதமே தனி. தேசிய விருது வாங்கின இளையராஜா ஆர்ட் டைரக்டர். இப்படி பல சாதனையாளர்கள் இந்தக் ‘கத்தி’ படத்துக்கு தூண் மாதிரி இருக்காங்க.
சமீபத்தில் இந்த படத்தை சிங்களர்கள் தயாரிக்கிறாங்கன்னு புரளியைக் கிளப்பி விட்டுட்டாங்க. நான் படம் தயாரிக்கிறது ஐங்கரன் நிறுவனத்துக்கு, அவுங்க லைகா புரொடக்சனோட கை கோர்த்தாங்க. அதைத்தான் சிங்கள நிறுவனம்னு சொன்னாங்க. அது ஈழத் தமிழர்களின் நிறுவனம்.தமிழனுக்கு எதிரானவங்க எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் எங்க உழைப்புலேருந்து 5 காசு அவுங்களுக்கு போகாது. தமிழர்களுக்கு எதிரானவங்ககூட நானோ, விஜய் சாரோ கைகோர்க்கவே மாட்டோம். தமிழனுக்கு யார் எதிரிகளோ அவர்கள் எங்களுக்கும் எதிரிகளே…” என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்..!