இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இருவரும் இணை தயாரிப்பு செய்துள்ளனர். டி.தியாகராஜன் வழங்கியுள்ளார்.
படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், சிவ்ராஜ்குமார், அதிதி பாலன், ஜெயப்பிரகாஷ், ஜான் கொகைன், ஐஸ்வர்யா, நிவேதிதா சதீஷ், இளங்கோ குமரவேல், விஜி சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், வசனம் – மதன் கார்க்கி, ஒளிப்பதிவு – சித்தார்த்தா நுனி, படத் தொகுப்பு – நாகூரன், கலை இயக்கம் – T.ராமலிங்கம், ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், விளம்பர வடிவமைப்பு – ட்யூனி ஜான் 24 am, பத்திரிக்கை தொடர்பு – டீம் எய்ம், ரியாஸ் கே.அஹமத்.
பெரும் பாராட்டுக்களை குவித்த ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்கள் மூலம் புகழ் பெற்ற இயக்குநரான அருண் மாதேஸ்வரன் தனது மூன்றாவது படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.
இந்தக் ‘கேப்டன் மில்லர்’ படம் 1930-40 காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும்.
அது பிரிட்டிஷ் ஆட்சிக் காலம். ஆனாலும் இந்திய ராஜாக்கள் பெயரளவுக்கு ஆண்டு கொண்டிருந்த காலக்கட்டம். தனுஷ்கோடியை உள்ளடக்கிய இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூர்.
கோரனார் என்ற இராவணனின் மறுபிறவி என்று சொல்லும் தெய்வத்தின் கோவில் அந்த ஊரில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆண்டாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் குடிசை போட்டு வாழ்ந்து வருகிறார்கள். கோவிலை கட்டியது இவர்களது மூதாதையர்கள் என்றாலும், இவர்கள் இப்போதும் கோவிலுக்குள் கால் வைக்க அனுமதியில்லை.
இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் ‘அனலீசன்’ என்ற ‘ஈசா’ என்ற தனுஷ். இவரது அண்ணனான ‘செங்கோலன்’ என்ற சிவ்ராஜ்குமார் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வீட்டைவிட்டுப் போனவர்தான்.. எப்போதாவது வருவார். போவார்.
அந்த ஊர் ராஜாவான ஜெயப்பிரகாஷின் அண்ணன் மகளான ‘வேல்மதி’ என்ற பிரியங்கா மோகனை மனதுக்குள் காதலிக்கிறார் தனுஷ். ஆனால் பிரியங்காவோ சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு இளைஞனைக் காதலித்ததால், அவர்கள் ஊரைவிட்டு ஓட உதவி செய்து காதலர்களை வழியனுப்பி வைக்கிறார் தனுஷ்.
இவர்களது அம்மாவான விஜி சந்திரசேகரின் இறப்புக்குப் பின்பு தனி மரமான தனுஷ் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்கிறார். அங்கே இந்திய சுதந்திர போராட்ட வீரர்களையே சுட்டுத் தள்ள வேண்டிய கட்டாயம் இருந்ததால், தனது அணியின் கேப்டனை படுகொலை செய்துவிட்டு ராணுவத்தில் இருந்து ஓடி வருகிறார் தனுஷ்.
ஊரில் இருந்தால் ராணுவம் தேடி வரும் அபாயம் இருப்பதால் தப்பிப் போக நினைப்பவர் பிரிட்டிஷாரிடம் கொள்ளையடிக்கும் ஒரு கொள்ளைக் கும்பலிடம் சேர்கிறார். குறி பார்த்து சுடுவதில் வல்லவரான தனுஷை, அந்தக் கூட்டம் தக்க வைத்துக் கொள்கிறது.
தனுஷ் ஊரின் தலையாரி கோரனார் கோவிலுக்குள் இருக்கும் கோரனாரின் மரகத சிலை பற்றி பிரிட்டிஷாரிடம் போட்டுக் கொடுக்க அதை அவர்கள் கைப்பற்றுகிறார்கள். அந்த சிலையை மீட்டுக் கொடுத்தால் தனுஷின் ஜாதிக்காரர்களை கோவிலுக்குள் அனுமதிப்போம் என்று ராஜாவும், ராஜாவின் தம்பியும் வாக்குறுதியளிக்க.. களத்தில் இறங்கி அந்த சிலையைக் கைப்பற்றுகிறார் தனுஷ்.
ஆனால் கடைசி நேரத்தில் பல்டியடிக்கும் ராஜாவின் கோஷ்டி, பிரிட்டிஷ் படைகளை வைத்து தனுஷ் தலைமையிலான கொள்ளையர்கள் படையை வீழ்த்த நினைக்கிறது. அது முடிந்ததா..? இல்லையா…? என்பதுதான் இந்த ‘கேப்டன் மில்லர்’ படத்தின் திரைக்கதை.
இலங்கையில் ஈழத்தின் விடுதலைக்காகப் போராடி வந்த விடுதலை புலிகள் அமைப்பின் முதல் தற்கொலைப் படை போராளி வல்லிபுரம் வசந்தன் என்கிற ‘கேப்டன் மில்லர்’. தமிழ் ஈழ வரலாற்றில் இன்றைக்கும் பெருமிதமாக பார்க்கக் கூடிய, பேசக் கூடிய அந்தப் பெயரைத்தான் இந்தப் படத்திற்குப் பொருத்தமான தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர்.
நடிப்பில் நிபுணத்துவம் கலந்த ஆளுமையாக தமிழ்த் திரையுலகத்தில் தனித்தலையும் ஆவியாய் இருக்கும் தனுஷுக்கு, இந்தப் படமும் பெருந்தீனியைப் போட்டிருக்கிறது.
20 வயது வாலிபனாகவும், நடுத்தர வயது வாலிபனாகவும் முகத்தோற்றத்தில் மட்டுமல்ல.. உடலிலும் பெரும் மாற்றத்தைக் காண்பித்து நடித்திருக்கிறார் தனுஷ். அண்ணன் செங்கோலனிடம் அம்மாவின் பாசத்தைக் குத்திக் காட்டி பேசுவதில் துவங்கி, இறுதியில் பிரிட்டிஷ் படைகளிடம் சரணடைய ஆர்வம் கொண்டவராக கையைத் தூக்கியபடியே வரும் தனுஷ், கடைசி வரையிலும் ஒவ்வொரு பிரேமிலும் தனது வித்தியாசமான நடிப்பினைக் காண்பித்திருக்கிறார்.
கோவிலுக்குள் விட மறுக்கும் சொந்த ஊர்க்காரனைவிடவும், பிரிட்டிஷ்காரன் பரவாயில்லையே என்று அண்ணனிடம் கிண்டல் செய்யும் அதே தனுஷ்தான் சுதந்திரப் போராட்ட வீரர்களை சுட்டுக் கொல்ல மனசில்லாமல் தவியாய் தவித்து படுகொலைகளை செய்யத் துவங்குகிறார். அந்தக் காட்சியில் துவங்குகிறது தனுஷூக்குள் இருக்கும் இராவண ஆட்டம்..! கடைசிவரையிலும் அந்தக் கோரனாரை கோவிலுக்குள் வைப்பதுவரையிலும் தனது நடிப்பினாலேயே படம் முழுவதையும் தூக்கிப் பிடித்திருக்கிறார் தனுஷ். பாராட்டுக்கள். வாழ்த்துகள்..!
அண்ணன் செங்கோலனாக சில காட்சிகளே என்றாலும் சிவ்ராஜ்குமாரின் ஸ்கிரீன் பிரஸன்ஸ் அசர வைக்கிறது. அதிலும் கடைசி சண்டை காட்சியில் அவர் உட்புகும் போது எழும் கை தட்டல் ரசிகர்களின் ஏகோபித்த ரசனைக்கு சான்று..! கோவில் திருவிழாவில் அவர் ஆடும் ஆட்டமும் களையானது.
சின்னக் குழந்தையின் கையில் துப்பாக்கியைக் கொடுத்தது போலத்தான் பிரியங்கா மோகனின் கைகளில் துப்பாக்கியைத் தூக்கிக் கொடுத்துவிட்டார்கள் போலும். என்னதான் சோகத்தை அப்பிக் கொண்டு அவர் வலம் வந்தாலும் துப்பாக்கியால் சுடும்போது குழந்தையாகவே அவர் நம் கண்களுக்குத் தெரிவதால் இந்தப் படத்திலேயே ஒட்டாத ஒரு கேரக்டராகவே தெரிகிறார்.
ஒரு காட்சியென்றாலும் தனது ஆளுமையைக் காட்டிவிடும் விஜி சந்திரசேகர், சில காட்சிகளே என்றாலும் ஒரு அம்மாவாக நம்மைக் கவர்ந்திழுக்கிறார். அவருடைய இறுதிக் கட்ட நடிப்பு, அந்த வெயிலில் அவரைச் சுட்டதுபோல நம்மையும் சுடுகிறது.
ராஜாவாக ஜெயப்பிரகாஷ். இவரது தம்பியாக ஜான் கோகைன், ஜெயப்பிரகாஷின் மனைவியாக அதிதி பாலன் மற்றும் கொள்ளைக் கூட்டத்தில் இருக்கும் இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ். தலையாரி காளி வெங்கட், சந்தீப் கிஷன், ஐஸ்வர்யா என்று பெரும் நட்சத்திரக் கூட்டமே ஆளுக்கொரு பக்கமாக சிறந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.
இதில் பெயர் தெரியாத ஒரு கதாப்பாத்திரமாக கண்களுக்கு கூலிங் கிளாஸ் போட்டிருந்தபடியே நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பிரிட்டிஷ் படைகளுக்குத் தண்ணி காட்டும் அந்த இளைஞன் யாரென்று தெரியவில்லை. ஆனால் அசத்தலாய் நடித்திருக்கிறான். ஒரு வார்த்தை வசனம்கூட இல்லை. ஆனால் போர்க்களத்தில் இருக்கும் போர் வீரனுக்குரிய நடிப்பைக் கொடுத்து நம்மைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறான். பாராட்டுக்கள் தம்பி.
தொழில் நுட்பத்தில் முதல் வீரர் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி. படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் தானும் ஒரு கேரக்டர் என்பது போலவே கேமிராவும் பயணித்துள்ளது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் துப்பாக்கி சூடு, வெடிகுண்டு தாக்குதல் என்று போர்க்களமாய் இருக்க.. அந்தப் போர்க்களத்தை போராகவே காட்டியிருக்கிறார். கோரனார் சிலையை கைப்பற்ற நடக்கும் துப்பாக்கி சண்டைதான் கிளைமாக்ஸ் சண்டையைவிடவும் சிறப்பாக பதிவாகியுள்ளது.
திலீப் சுப்பராயனின் சண்டை வடிவமைப்புதான் படத்தை வேற லெவலுக்குக் கொண்டு போயுள்ளது. துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு கேப் வெடி வெடிக்காமல், நிஜமான துப்பாக்கி சண்டை போல படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தின் பட்ஜெட் இந்த சண்டைக்கே போதுமானதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறோம்.
இறுதிக் கட்ட காட்சியில் பகலில் துவங்கி, இரவு வரை நீளும் அந்த நீண்ட, நெடிய சண்டை காட்சிகளை துல்லியமாக தொடர்ச்சி கெடாமல் உணர்வும் குறையாமல் இருக்கும் வகையில் செய்திருக்கிறார் சண்டை இயக்குநர். இதற்கு மிகப் பெரிய பக்க பலமாக இருந்து ஒரு சிறிய அசைவைக்கூட மிஸ் செய்யாமல் ஒழுங்கு படுத்தியிருக்கிறார் படத் தொகுப்பாளரான நாகூரான். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
கோவில் செட்டப், குடிசை வீடுகள், துப்பாக்கிகள், கனரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் என்று பிரிட்டிஷ் காலத்து பொருட்களையும், வீடுகளையும், இடங்களையும் கச்சிதமாகத் தேர்வு செய்து அமைத்துக் கொடுத்திருக்கும் கலை இயக்குநர் ராமலிங்கத்திற்கும் ஒரு பாராட்டு..!
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். தனுஷின் ஆக்சன் காட்சிகள் பலவற்றிற்கும் பின்னணி இசைதான் நெய்யாகவும், எண்ணெய்யாகவும் அமைந்திருக்கிறது. அட்டகாசம் என்றே சொல்லலாம்.
தலித் மக்களை பிரிட்டிஷார் அல்ல.. நம் மக்களே அடிமையாகத்தான் வைத்திருந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்த ஒரு கதையைத் தேடி, அதற்கு சுற்றுச் சுவராக சுதந்திரப் போராட்டம்.. போர்க்களம்.. துப்பாக்கி மோதல் என்று பலவற்றையும் இணைத்து ஒரு கமர்ஷியல் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
ஆனாலும் அருணின் முந்தைய படங்களைவிடவும் இந்தப் படத்தில் இரத்தக் கவுச்சி காட்சிகளும், உடல் உறுப்புகள் தெறிக்கும் வன்முறை காட்சிகளும் குறைவு என்பதால் இந்தவரைக்கும் போதுமடா சாமி என்று இயக்குநர் அருணுக்கு நன்றி சொல்லிக் கொள்வோம்.
தெளிவில்லாத காலக்கட்டம், குறிப்பிட்டு சொல்ல முடியாத கதைக் களம் நடக்குமிடம், ரொம்பவும் காட்டப்படாத உள்ளூர் ராஜாக்களின் வாழ்க்கை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இத்தனை ஆயுதங்கள் புழக்கத்தில் இருந்ததா..? எங்கேயிருந்து வந்தது..? எப்படி தமிழ் ஆயுதக் குழுக்களிடம் கிடைத்தது..? கிடைத்திருக்கும்..? என்று பாமரனுக்கும் எழும் சந்தேகம்.. கொள்ளைக் கூட்டத்தினரின் உண்மை நோக்கம் என்ன.. என்று விடை தெரியாத பல கேள்விகள் இந்தப் படத்தில் எழுந்திருக்கிறது.
இருந்தாலும் மற்றைய கமர்ஷியல் திரைப்படங்களை போலவே மெய்மறக்கச் செய்யும் போர்க்கள காட்சிகளை பிரதானப்படுத்தி இரண்டாம் பாதியை நகர்த்தியிருப்பதால் படம் மிக விறுவிறுப்பாக இரண்டாவது பாகத்தை நோக்கி சென்ற நிலையில் முடிந்திருக்கிறது.
“இரண்டாவது பாகம் நிச்சயம் வரும்” என்று இயக்குநரும் உறுதியளித்திருப்பதால் கேப்டன் மில்லர் என்ற தலைப்பிற்கு அடுத்தப் பாகத்தில் நியாயம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!
கேப்டன் மில்லர் – போர்க்கள காட்சிகளுக்காகவே பார்க்கலாம்..!
RATING : 3.5 / 5









