மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கடாவர்’.
இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, ‘நிழல்கள்’ ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெயராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்தப் படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.
இந்தக் ‘கடாவர்’ முதுகுத் தண்டை சில்லிடச் செய்து, ரத்தத்தை உறையச் செய்யும் அளவுக்கான க்ரைம் திரில்லர் படமாகும்.
இந்தப் படத்தில் தடயவியல் துறை நிபுணராக ‘பத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடித்திருக்கிறார்.
நகரில் மர்மமான முறையில் சில கொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான ‘பத்ரா’ கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார். கொலையாளி யார்.. எதற்கான அந்தக் கொலைகள் என்பதுதான் இந்தப் படத்தின் சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதை..!
இந்தக் ‘கடாவர்’ திரில்லர் திரைப்படம், டிஸ்னி + ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது.