full screen background image

கடாவர் – சினிமா விமர்சனம்

கடாவர் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை Amala Paul Productions சார்பில் நடிகை அமலா பால் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் அமலா பால் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன், ரித்விகா, ஆதித் அருண், முனிஷ்காந்த் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

ரஞ்சின் ராஜ் இசையமைப்பாளராகவும், அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராகவும், ஷான் லோகேஷ் படத் தொகுப்பாளராகவும், அபிலாஷ் பிள்ளை வசனகர்த்தாவாகவும், ராகுல் கலை இயக்குநராகவும், தினேஷ் கண்ணன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இந்தக் ‘கடாவர்’ படத்தினை இயக்குநர் அனூப் S.பணிக்கர் இயக்கியுள்ளார்.

அபிலாஷ் பிள்ளையின் திரைக்கதையில் ஏற்கெனவே பத்தாம் வளவு’, ‘நைட் ட்ரைவ்’ ஆகிய மலையாளப் படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்தக் கடாவர்’ படமே அவரது கதையில் உருவான முதல் படம்.

நேரடி ஓடிடி ரிலீசான இந்தப் படம், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

இப்படம் இந்தியாவில் முதல் முறையாக, ஒரு தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் (ஃபோரன்ஸிக் சர்ஜன்) விசாரணை அதிகாரியாக அழைத்து வரப்படும் கதையினை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

மெடிக்கல் க்ரைமை மையப்படுத்தி நடக்கும் கொலைகளும், குற்றங்களும்தான் இந்தக் ‘கடாவர்’ படத்தின் திரைக்கதை.

கடாவர் (Cadaver) என்றால் மருத்துவத் துறையின் பயன்பாட்டின்படி உயிரற்ற உடல்’ என்று அர்த்தம். பயிற்சி மருத்துவர்கள் போஸ்ட் மார்ட்டம் பற்றிய படிப்பின்போது அவர்கள் பயன்படுத்தும் மனித உடல்களை கடாவர்’ என்றுதான் அழைப்பார்களாம்.

பிரபலமான மருத்துவரான சலீம் ரஹ்மான் மர்மமான முறையில் காருடன் சேர்த்து எரித்துக் கொல்லப்படுகிறார். உடலே அடையாளம் தெரியாத அளவுக்கு இருப்பதால் அந்த உடலின் அடையாளத்தைக் கண்டறிய தடயவியல் சிகிச்சை நிபுணரான டாக்டர் பத்ரா தங்கவேல் என்ற அமலா பால் இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் டீமுக்குள் சேர்க்கப்படுகிறார்.

இந்தக் கொலைக்கும் ஒரு கொலை வழக்கில் சிக்கி தற்போது சிறையில் இருக்கும் வெற்றிக்கும் தொடர்பு இருப்பது தொடர்ந்த போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது.

ஆனால், சிறையில் இருக்கும் வெற்றியால் எப்படி வெளியில் இப்படியொரு கொலையை செய்ய முடியும் என்ற கேள்வியும் எழவே, இது தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்துகிறது போலீஸ்.

ஆனால் போலீஸ் காட்டும் தீவிரத்தைவிடவும் தொடர்ச்சியாக இது தொடர்பான கொலைகள் அடுத்தடுத்து நடந்து கொண்டேயிருக்க பதட்டம் கூடுகிறது.

இறுதியில் போலீஸார் என்னதான் செய்தார்கள்.. குற்றவாளிகளை கண்டறிந்தார்களா.. குற்றங்களுக்கு என்ன காரணம் என்பதை சஸ்பென்ஸ், திரில்லர் கூட்டணியில் சொல்லியிருக்கிறது இந்தக் கடாவர்’ படம்.

இந்தப் படத்தில் நடித்ததும் மட்டுமல்லாமல், படத்தைத் தானே முன் வந்து தயாரித்தும் இருக்கிறார் நடிகை அமலா பால். வித்தியாசமான இந்த வேடத்தில் நடிப்பதற்காக, ஒரு வார காலம் பல மருத்துவமனைகளுக்குச் சென்று, அத்துறை சார்ந்த, தேர்ந்த மருத்துவர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார் அமலா பால். இப்படி தன்னை முழுதுமாக தயார் செய்து கொண்ட பின்புதான், ஒரு அசலான ஃபோரன்ஸிக் சர்ஜனாக இந்தப் படத்தில் நடித்துள்ளாராம் அமலா பால்.

கிராஃப் கட்டிங், நெற்றியில் விபூதி என்ற அழகுடன் பிணவறையில் சாப்பிட்டுக் கொண்டே அறிமுகமாகும் அமலா பாலின் கேரக்டர்தான், படத்தை கடைசிவரையிலும் நகர்த்திச் செல்கிறது.

தன் கம்பீரமான அழகால் படம் நெடுகிலும் நம்மை ரசிக்க வைக்கிறார் அமலாபால். தோற்றத்தில் மட்டுமல்லாமல், நடிப்பிலும் பல்வேறுவிதங்களைக் காட்டியுள்ளார் அமலா பால். சில இடங்களில் அவரது நடிப்பு, மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

அதுல்யாவின் கணவராக நடித்திருக்கும் ஆதித் அருண் செய்யாத குற்றத்திற்காக சிறையில் மாட்டிக் கொண்ட நிலையில் பல சந்தேகங்களை தன் மீது விழும்படி செய்யும் அந்தப் பைத்தியக்கார நடிப்பை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

ஹரிஷ் உத்தமன் போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஆனால், இந்தக் கதையில் அனைத்து நடவடிக்கைளையும் அமலா பாலே செய்வதால் இவருக்கு அதிகமான வேலை இல்லாமல் போய்விட்டது.

வெற்றியின் மனைவியான அதுல்யா ரவி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களைக் கவரும் வகையில் தன் அழகைக் காண்பித்ததோடு இல்லாமல் நடிப்பையும் காண்பித்திருக்கிறார். பிணமாகக் கிடக்கும் காட்சியில் எப்படித்தான் அவ்வளவு நேரம் அமைதியாய் படுத்திருந்தாரோ தெரியவில்லை. பிண ஒப்பனையும் சிறப்பு என்பதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும்.

நர்ஸ் பிரியாவாக, கதைக்கு உதவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரித்விகா. மருத்துவமனை ரெக்கார்டுகளைத் திருடும் காட்சியில் அவர் காட்டும் பயந்த நடிப்பு நமக்கும் லப் டப்பை ஏற்றிவிடுகிறது. 

இரண்டு இளம்பெண்களுக்குத் தந்தையாக மாறுபட்ட கேரக்டரில் ராட்சசன்’ வினோத் நடித்துள்ளார். காவல்துறை அதிகாரி மைக்கேலாக முனிஷ்காந்த் நடித்துள்ளார். காமெடியனாக அல்லாமல் குணச்சித்திர நடிப்பைக் காண்பித்துள்ளார்.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. சுடுகாடு மற்றும் பிணவறை காட்சிகளின் சூழலை பயமுறுத்துவதுபோல படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். மேலும் அமலா பாலின் அழகையும் இன்னும் அழகாக்கியிருக்கிறார்.

கலை இயக்குநரையும் வெகுவாகப் பாராட்டியே ஆக வேண்டும். பிணவறை, அதன் வடிவமைப்பு, சடலங்கள், சுடுகாடு என்று தத்ரூபமான செட்டுகளை அமைத்து நம்மை உண்மையாகவே அந்தந்த இடங்களுக்கு அழைத்துச்  சென்றிருக்கிறார். அந்த வகையில் இந்தப் படத்திற்கு தூணாக நிற்பது கலை இயக்கம்தான்.

இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜூக்குத் தமிழில் இதுதான் முதல் படம். மலையாளத்தில் அவரது முதல் படம் ஜோசஃப்’. இந்த இரண்டு படங்களுக்குமான ஒற்றுமை என்னவென்றால், இரண்டு படங்களின் கதைக் கருவும் ஏறக்குறைய ஒன்றுதான். படத்தின் சஸ்பென்ஸைத் தக்க வைக்க ரஞ்சின் ராஜினுடைய பின்னணி இசை பக்க பலமாக அமைந்துள்ளது.

கதாசிரியர் அபிலாஷ் பிள்ளையின் எழுத்துக்கு, இயக்குநர் அனூப் பணிக்கர் தன்னாலான காட்சி வடிவத்தைத் தப்பில்லாமல் கொடுத்திருக்கிறார்.

எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் அடுத்தடுத்து ட்விஸ்ட்டுகளை வைத்து படத்தை முடிந்த அளவுக்கு விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.

திகிலூட்டும் கதையில் இறந்த உடல்களை தோண்டியெடுப்பது, பல சடலங்கள் கிடக்கும் சவக் கிடங்கு, அவ்வப்போது நடக்கும் கொடூரக் கொலைகள் என்று ஒரு கிரிமினல் தியரியை நம் கண் முன்னே காட்டியிருக்கிறார் இயக்குநர்.

முதல் பாதியில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளுக்கான காரணம் புரியாமல் திணறுவதை மிகவும் அழகாக வடிவமைத்திருக்கிறார் கதாசிரியர். 

ஆனாலும் குற்றப் புலனாய்வுக் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யப்படுத்தியிருக்க வேண்டும். அனைத்தையும் அமலா பாலே முன்னின்று சொல்வதற்குப் பதிலாக போலீஸாரே களத்தில் குதித்து விசாரிப்பது போல வைத்திருக்க வேண்டும்.

வெற்றியின் வாழ்க்கையில் நடத்த சோகத்தையும், இந்தத் தொடர் கொலைகளுக்கான காரணத்தையும் கிளைமாக்ஸில் சொல்லும்விதம் ஏற்புடையதே.

மெடிக்கல் க்ரைம்தான் படத்தின் களம் என்று சொல்லிவிட்டு கடைசியில் அதைப் பற்றிப் பேசாமல் கொலைக்கான காரணத்தையும், கொலையுண்டவர்களின் தொடர்புகளைப் பற்றியும் திரைக்கதை விரிந்ததில் ஏமாற்றம்தான்.

ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லருக்கான அனைத்து வகையான விஷயங்களும்  கதையில் இருந்தும் இதன் திரைக்கதையமைப்பில் விறுவிறுப்பு கொஞ்சம் குறைவாகவே தெரிகிறது. அதுவும் படத்தின் பின்பாதியில் இது சோர்வையும் தருகிறது. 

படத்தின் சில ட்விஸ்ட்டுகள் கவனிக்க வைக்கின்றன. அதேபோல சில காட்சிகள் ஆச்சரியப்படுத்தினாலும், இன்னும் சில காட்சிகள் அமெச்சூர்தனமாகவும் படமாக்கப்பட்டுள்ளன.

இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகளுடன், திரைக்கதையை அமைத்திருந்தால்  இந்தக் ‘கடாவர்’ நிச்சயமாக விறுவிறுப்பான த்ரில்லர் படமாகியிருக்கும்.

RATING :  3.5 / 5

Our Score