ப்ளசிங் என்டர்டெயினர்ஸ் சார்பில் பிரபாதீஷ் சாமுவேல், கபிலன் சிவபாதம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம் ‘புத்தன் இயேசு காந்தி.’
இந்தப் படத்தில் கிஷோர், வசுந்தரா, அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘அழகு குட்டி செல்லம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான விஜய் ஆம்ஸ்ட்ராங்தான் இந்தப் படத்தின் ஒளிப்பதிவையும் செய்கிறார். வேத்சங்கர் இசையமைத்திருக்கிறார். ‘ஆள்’ மற்றும் ‘மெட்ரோ’ படங்களின் படத் தொகுப்பாளர் ரமேஷ்பாரதி இந்தப் படத்தை தொகுப்பு செய்திருக்கிறார். அறிமுக இயக்குநரான வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கியிருக்கிறார்.
“கிஷோர் இந்தப் படத்தில் ஒரு தூக்குத் தண்டனை கைதியாக நடித்திருக்கிறார். வசுந்தராவும், அசோக்கும் பத்திரிகையாளர்களாக நடித்திருக்கிறார்கள். மதுமிதா சமூக அவலங்களுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலராக நடித்திருக்கிறார்.
இந்த கேரக்டருக்காக, புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயை ரோல் மாடலாக ஏற்று அவரின் நடை, உடைபாவனைகளை உள்வாங்கி நடித்திருக்கிறார் மதுமிதா. இதற்காக அருந்ததி ராய் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வீடியோக்களை பார்த்து அந்தக் கேரக்டருக்குத் தன்னை தயார்படுத்தி கொண்டார் மதுமிதா.
அண்மையில் ஒரு பிரபலமான தொலைக்காட்சி சேனலில் நடக்கும் விவாத நிகழ்ச்சியில் மதுமிதா மற்றும் கிஷோர் பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மக்கள் பிரச்சனைகளை பற்றிப் பேசி நடித்த மதுமிதா, க்ளிசரின் போடாமல் உண்மையாகவே அழுது நடித்தார். அவர் அழுது கொண்டே வசனம் பேசியது, அங்கிருந்த படப்பிடிப்புக்குக் குழுவினரை உருக வைத்து விட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் எல்லோரும் கை தட்டி மதுமிதாவை பாராட்டினார்கள்…” என்கிறார் படத்தின் இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர்.