“படம் இயக்கத் தெரியாதவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கிறது…” – இயக்குநர் பேரரசுவின் வருத்தம்..!

“படம் இயக்கத் தெரியாதவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கிறது…” – இயக்குநர் பேரரசுவின் வருத்தம்..!

கடந்த ஆண்டு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற செல்போன் விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் டைப்பில் உருவாகியிருக்கும் படம்தான் ‘புளூ வேல்’.

பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் P.அருமை சந்திரன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

நடிகை பூர்ணா இந்தப் படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடித்திருக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – T.ரங்கநாதன், இசை – P.C.ஷிவன், ஒளிப்பதிவு – K.K., படத் தொகுப்பு – சண்முகம், கலை இயக்கம் –  N.K.ராகுல்.

‘புளூ வேல்’ விளையாட்டு பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. சமீபத்தில் இந்த ‘புளூ வேல்’ என்ற விளையாட்டு காரணமாக உலகம் முழுவதும் பல  இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டது உலகத்தையே உலுக்கியது.

இன்றைக்கு இருக்கின்ற பொருளாதார சூழலில் கணவன் மனைவி இரண்டு பேருமே வேலைக்கு போக வேண்டிய நிர்பந்தம். படித்தால்தான் வாழ முடியும்… ஏன் உயிரோடு இருக்க முடியும் என்ற மனநிலைக்கு மாறிவிட்ட பிள்ளைகளுக்கு பள்ளிகளிலும் நெருக்கடி.

பெற்றோர்களின் அரவணைப்பில் இருக்க வேண்டிய வயதில் பிள்ளைகள் தனிமையில் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் தனிமையைத் தங்களுக்குச் சாதகமாக்கித்தான் ‘புளு வேல்’, ‘மோமோ’, ‘பப்ஜி’ போன்ற ஆன் லைன் கேம்கள் இளைஞர்களைக் கொன்று குவிக்கிறது.

அவர்களை மீட்கவும் “பிள்ளைகள்தான் செல்வம். அவர்களை பாதுகாத்திடுங்கள்…” என்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த ‘புளூ வேல்’ படத்தின் நோக்கம்.

‘புளூ வேல்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

blue wale-audio-stills-3

இந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர். நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் இந்த ‘புளூ வேல்’ விளையாட்டினால் தன் உயிரையே இழந்த மதுரையைச் சேர்ந்த இளைஞன் விக்னேஷின் தாயார் டெய்சிராணியும், விக்னேஷின் சகோதரரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மது பேசும்போது, “இந்த ‘புளூ வேல்’ எனக்கு முதல் படம். முதல் படமே தரமான படமாக வந்திருப்பதில் பெருமையடைகிறேன். நான் டெக்ஸ்டைல்ஸ் துறையில் தொழில் செய்து வந்தாலும் சினிமா எனக்கு விருப்பமான துறையாக உள்ளது. மேலும், இது போல் தரமான படங்களைத் தயாரிக்கவும் எண்ணியுள்ளேன்..” என்றார்.

blue wale-audio-stills-5

தயாரிப்பாளர் அருமை சந்திரன் பேசும்போது, “நல்ல படமாகவே இருந்தாலும் அதிக திரையரங்கம் கிடைக்காத காரணத்தால் ஒரு வாரத்திற்கு மேல் திரையரங்கில் இருப்பதில்லை. ஆனால், இப்படம் வெற்றியடையுமா என்று நினைக்கவில்லை. நல்ல விஷயங்களை இப்படம் மூலம் கூறியிருக்கிறோம் என்பதே எங்களுக்கு திருப்தியளிக்கிறது.

‘புளு வேல்’ இன்று இல்லை. ஆனால் அதைப் போன்ற ‘மோமோ’, ‘பப்ஜி’ விளையாட்டுக்களை யாரும் விளையாடக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் இப்படத்தை எடுத்திருக்கிறோம்.

மேலும், இப்படத்தின் டீஸரை தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு காட்சிப்படுத்தினோம். இதுவரை சுமார் 10000 மாணவர்களை சந்தித்து இது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தியிருக்கிறோம்.

இது மாதிரி விளையாட்டை எத்தனை பேர் விளையாடுகிறார்கள் என்று மாணவர்களிடம் கேட்கும்போது அவர்களில் அதிகமானோர் விளையாடுவதாகக் கூறினார்கள். ‘அந்த விளையாட்டை எதனால் விளையாடுகிறீர்கள்..?’ என்று கேட்டதற்கு ‘நாங்கள் தனியாக இருக்கிறோம், பொழுதுபோக்கிற்காக விளையாடுகிறோம்..’ என்று கூறினார்கள்.

அதில் ஒரு சிறுவன் ‘என் சகோதரன் எனது பெற்றோருக்குத் தெரியாமல் ‘புளூ வேல்’ விளையாடுகிறான். அதிலிருந்து அவன் போன்றவர்களைக் காப்பாற்ற ஏதாவது வழிகளை இப்படத்தில் கூறியிருக்கிறார்களா?’ என்று கேட்டான். அந்த கேள்வி என்னை சிந்திக்க வைத்தது, அடுத்த அரைமணி நேரத்தில் எங்கள் குழுவிடம் ஆலோசித்து, அந்த மாணவனை மீட்டோம்.

இந்த ‘புளூ வேல்’ விளையாட்டு மூலம் உயிரிழந்த மதுரை இளைஞனின் தாயை விளம்பரத்திற்காக நாங்கள் இங்கே அழைத்து வரவில்லை. இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைக்க இயலாது என்ற நிலையில் அந்த தாய் இருந்தபோது… தன் படிப்பை 10-வது வகுப்போடு நிறுத்திவிட்டு என்னைவிட எனது தம்பி நன்றாக படிப்பான் என்று கூறி வேலைக்குச் சென்று படிக்க வைத்திருக்கிறார்.

அந்தத் தம்பி பி.காம். படித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த விளையாட்டின் மூலம் உயிரை இழந்திருக்கிறான் என்றால் அவனின் சகோதரனுக்கும், தாய்க்கும் எந்தளவு பாதிப்பு இருந்திருக்கும். அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. மேலும், சிங்கப்பூரில் இருக்கும் எனது நிறுவனத்தில் அவருக்கு வேலை தர இருக்கிறேன்.

மேலும், இளைஞர்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களைப் பாதிப்பிலிருந்து மீட்டு வருகிறோம். அப்படி ஒரு முறை மருத்துவர் ஃபஜிலா ஆசாத்தைத் தொடர்பு கொண்டபோது, ‘இது மாதிரி சமூக வலைத்தளங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 மணி நேரம் ஸ்கைப் பில் கொடுங்கள், நான் குணப்படுத்துகிறேன்’ என்றார். அதற்காகத்தான் அவர்களை இங்கு அழைத்து வந்திருக்கிறோம்…” என்றார்.

director perarasu

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இன்று தமிழ்ச் சினிமாவில் தரமான படங்கள் வருவதில்லை என்பதற்கு காரணம் இயக்குவதற்கு தெரியாத நபரை நம்பி பல கோடி செலவழிக்கும் தயாரிப்பாளர்களால்தான்.

துணி தைக்க தெரியாதவரிடம் நாம் துணி தைக்கக் கொடுப்பதில்லை. ஆனால், படம் இயக்கத் தெரியாதவர்களிடம் வாய்ப்பு செல்கிறது. ஆகையால்தான் பல படங்கள் தோல்வியடைகின்றது.

சில படங்களை பொறுப்பில்லாமல் எடுப்பார்கள், சில படங்களை பொறுப்புடன் எடுப்பார்கள், ஆனால் ஒரு சில படங்களைத்தான் விழிப்புணர்வுக்காக எடுப்பார்கள். ‘புளூ வேல்’ அதில் ஒரு படம்.

இந்த படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போது டி.ரங்கநாதன் அனுபவமுள்ள விஷயமறிந்த இயக்குநர் என்பது தெரிகிறது. இந்தப் படத்தில் கணேஷின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. ஒளிப்பதிவு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம் அனைவரும் தொழில் தெரிந்தவர்கள் என்பதுதான்.

போலீஸ் உடை எல்லோருக்கும் பொருந்தி விடாது. பூர்ணாவுக்கு பொருந்தியிருக்கிறது. அவரை வைத்து நான் நிச்சயமாகப் படமெடுப்பேன்…” என்றார்.

director r.v.udhayakumar

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இந்த ‘புளூ வேல்’ விளையாட்டு என்பது எந்தளவுக்கு கொடூரமான, ஆபத்தான விளையாட்டு என்பதை ஒரு வருடத்திற்கு முன்பே அறிந்து கொண்டோம். மதுரையில் ஒரு சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் நம் அனைவரையும் உலுக்கியது.

படத்தில் ஒளிப்பதிவாளரின் பணி சிறப்பாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது. படத் தொகுப்பாளர் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். பின்னணி இசை ஒவ்வொரு காட்சியையும் திக்.. திக்கென்று மிகப் பெரிய சஸ்பென்ஸை உருவாக்கியிருக்கிறது. நடிகை பூர்ணா உடலளவில் ஆணாகவும், உள்ளத்தில் பெண்ணாகவும் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் டிரையிலரை பார்க்கும்போது ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல், இப்படம் எப்படி இருக்கும் என்பது புரிகிறது…” என்றார்.

t.shiva-1

தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது “சிறிய திரைப்படங்கள் பார்வையாளர்களைக் கவர்வது கடினமான விஷயம். முன்பெல்லாம் தொலைக்காட்சியில் ஒரு படம் ஒளிப்பரப்புவதற்கு ஒரு வருடம் காலம் ஆக வேண்டும் என்று இருந்தததை அமேசான் வந்த பிறகு 30 நாட்கள் ஆனால் போதும் என்ற நிலை வந்தவுடன் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் வருகை குறைந்து விட்டது. இந்த படம் மூலமாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும்போது பாதிப்படைந்தேன். அந்த சிறுவனுக்கு என்னாகுமோ என்ற பதற வைக்கிறது.

blue wale-audio-stills-1

செல்போன் என்கிற விஞ்ஞான கண்டுபிடிப்பு பல நன்மைகளை வழங்கினாலும், அதே அளவு ஆபத்தானதாகவும் இருக்கிறது. செல்போன் என்பது பெற்றோரையும் பிள்ளைகளையும் பிரிக்கும் கருவியாக மாறியுள்ளது. பெற்றோருக்கும் தெரியாமல் தனியாக சென்று பேசுவது அதிகரித்திருக்கிறது. செக்ஸ் வீடியோக்கள் வெளிப்படையாக வியாபாரம் செய்யப்படுகிறது என்று நீதிபதி புகழேந்தி கூறினார்.

மேலும், 16 வயதிலேயே மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அதில் 40 சதவீதம் பேர் அழிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் குடும்பங்கள் பாதிப்படைந்து வருகிறது.

மேலும், யூடியூப் பற்றி சென்சார் போர்டை கேட்கிறேன், அதில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது. வன்முறை காட்சிகள் வெட்டப்படமால் ஒளிப்பரப்பாகிறது.

20 வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் சக்தி மான் என்ற தொடரால் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள். அந்த தொடரைத் தடை செய்யக் கோரி மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி வருகிறேன். அதன் மூலம் போராட்டம் நடத்தி நிறுத்த வைத்தேன்.

ஒரு படத்தையும், தயாரிப்பாளரையும், நடிகர்களையும் வாழ வைப்பதும் இயக்குநர்கள்தான், கெடுப்பதும் இயக்குநர்கள்தான். ஒரு இயக்குநர் நினைத்தால் சாதாரண மனிதரையும் சூப்பர் ஸ்டாராக்க முடியும், சூப்பர் ஸ்டாரையும் சாதாரண மனிதராக்க முடியும். அதேபோல், சிலர் உங்கள் படம் நன்றாக ஓடுகிறது. நீங்கள் வரும் காட்சியில் ரசிகர்கள் ஆரவாரம் செய்கிறார்கள் என்று உசுப்பேத்திவிடுகிறார்கள். அதை நம்பி நாயகர்களும், நாயகிகளும் தங்களது சம்பளத்தை உயர்த்துகிறார்கள்.

தற்போது வந்திருக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை திட்டத்தால் தயாரிப்பாளர்களுக்கு வெளிப்படையான கணக்குத் தெரியும். அதன் மூலம் அனைத்துத் தயாரிப்பாளர்களும் பயனடைவார்கள்.

வியாபார நோக்கத்தோடு தரமற்ற படங்கள் வெளியாகும் சூழலில் ‘புளூ வேல்’ விளையாட்டைப் பற்றியும், அதை விளையாடுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சமூக அக்கறையோடு இப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுக்கள். இப்படம் மூலம் இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டுக்களை அடியோடு ஒழிக்க வேண்டும்” என்றார்.

srikanth

நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, “ஆந்திராவிலும், கேரளாவிலும் சினிமாத் துறை நன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சரியில்லை என்று எல்லோரும் சினிமாவை குறை கூறுகிறார்கள். நடிகர் சங்கத்தில் ஒற்றுமையில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமையில்லை. முதலில் நம் வீட்டில் ஒற்றுமை இருக்க வேண்டும். எப்போது நமக்குள் ஒற்றுமை இல்லையோ, அடுத்தவர்கள் வேடிக்கைப் பார்க்கத்தான் செய்வார்கள். அடுத்தவர்களைக் குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

கதாநாயகனை நம்பி படம் எடுக்காதீர்கள்.. கதையை நம்பி படமெடுங்கள். அதேபோல், நல்ல இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் அது அதிர்ஷ்டமாக கருதி அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து மற்றவர்களைக் குறை கூறக்கூடாது.

முதலில் தயாரிப்பாளர் சங்கத்தை சரி செய்ய வேண்டும். ஒரு சங்கத்தில் பதவியில் இருப்பவர்கள் சுயநலமில்லாதவர்களாக இருக்க வேண்டும். பதவிக்கு வருகிறவர்கள் சுயநலத்தோடு இருந்தால் சங்கத்தை எவ்வாறு சரி செய்ய முடியும். ஆந்திராவில் சினிமாதான் பொழுதுபோக்கே… ஆகையால் சினிமாவைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பொழுது போக்கிற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. சினிமாவை சரி செய்தால்தான் மக்கள் ஆர்வத்தோடு வருவார்கள். மக்களை கட்டாயப்படுத்த முடியாது. பிடித்திருந்தால் அவர்களே வந்து பார்ப்பார்கள்.

ஒரு மாதத்தில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகிறது, திரையரங்க உரிமையாளர்கள் என்ன செய்வார்கள்? ஒரு படத்தைத் தூக்கிவிட்டு இன்னொரு படத்தை போடத்தான் செய்வார்கள். அதற்கு அவர்களைக் குறைகூறுவது சரியல்ல. நம்முடைய துரதிர்ஷ்டம்.

மேலும், நாங்கள் சிறுவயதாக இருக்கும்பொழுது தெருவில் சென்று விளையாடுவோம். இப்பொழுது டிஜிட்டல் வந்தபிறகு குழந்தைகள் தெருவில் விளையாட வேண்டும் என்ற முயற்சிகூட செய்றதில்லை. வெயிலில் கருத்து விடுவார்கள், அடிபட்டுவிடும் என்று நினைக்காமல் அதை பெற்றோர்கள் கவனித்து சரி செய்ய வேண்டும்.

குழந்தைகளின் நலனுக்காக அவர்கள் எதில் ஆர்வம் செலுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் வீட்டில் குழந்தைகள் இந்த அளவு தான் டிஜிட்டல் உபயோகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வைத்திருக்கிறோம். அதேபோல் எல்லோரும் பின்பற்ற வேண்டும்.

சமூக நலனிற்காக ஒரு தயாரிப்பாளர் இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டு இப்படம் எடுத்ததற்கு படக் குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள். அருமை சந்திரன் மிகவும் நல்ல மனிதர். சிங்கப்பூரில் இருந்து வந்து ஒரு நல்ல படம் தயாரித்து வெற்றியடைய வேண்டும் என்ற ஆர்வத்தோடு இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

அவர் வெற்றியடைந்தால் இன்னும் 10 பேர் இதுபோன்ற படங்கள் தயாரிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் வெற்றியடைய வேண்டும். மொத்த படக் குழுவினர்களுக்கும் பாராட்டுக்கள்…” என்றார்.

blue wale-audio-stills-8

கவிஞர் சினேகன் பேசும்போது, “எந்த விஞ்ஞானம் நம் பிள்ளைகளின் வாழ்வை கேள்விக்குறியாக்குகிறதோ அதே விஞ்ஞானம்தான் நம் நாட்டை உயர்த்தியிருக்கிறது என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்றைக்கு நிரூபித்திருக்கிறார்கள்.

பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் தவறான வழியில் சென்றால் சமூகத்தின் மீது பழி கூறுகிறார்களே தவிர, தங்களிடம் இருக்கும் தவறை உணர்ந்து சரி செய்ய முயல்வதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

மக்களுக்கான அரசாங்கம் என்று அமைகிறதோ அன்றுதான் நம் நாட்டிற்கு நன்மை கிடைக்கும். ஆன்லைனில் டிக்கெட் பதிவில் 25 சதவீதம் யாருக்குச் செல்கிறது என்பதை வெளியிட்டால் நன்றாக இருக்கும்..” என்றார்.

blue wale-audio-stills-6

மாஸ்டர் கபிஷ் கன்னா பேசும்போது, “இது எனக்கு முதல் படம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் வாய்ப்புக் கொடுத்த எனது தந்தைக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கு நன்றி என்றார். இக்கதை எனக்கு கூறும்போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பூர்ணா மேடத்தை படிப்பிடிப்பில் பார்த்து தான் பயமாக இருந்தது…” என்றார்.

actress poorna

நடிகை பூர்ணா பேசும்போது, “எனக்கு புளூ வேல் பற்றித் தெரியாது. எனது சகோதரிதான் அது பற்றி எனக்கு எடுத்துச் சொன்னார். முதல் நாள் படப்பிடிப்பில் நான் சிறிது மனச் சோர்வடைந்தேன். ஏனென்றால் இந்தப் படத்தில் பெரிய நடிகர்கள் இல்லை. ஆகையால், இரண்டாவது நாள் படப்பிடிப்பிற்குச் செல்ல தயங்கினேன்.

குறைவான படங்களில் நடித்திருப்பதால் தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டேனோ என்ற சந்தேகமும் எனக்குள் இருந்தது. ஆனால், ஒரு உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து மிகச் சிறிய பட்ஜெட்டில் தரமான படமாக இதனை எடுத்திருக்கிறார்கள். இது மாதிரி உண்மைச் சம்பவத்தை கூறியிருக்கும் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

குழந்தைகளுக்கு பெரியவர்கள்தான் எல்லா விஷங்களையும் பழக்குகிறார்கள். அவர்கள் ஆசைப்படுவதை நன்மை தீமை பற்றி யோசிக்காமல் செய்யும் பொறுப்பற்ற பெரியவர்களால்தான் குழந்தைகள் தவறாகப் பாதைக்குச் செல்கிறார்கள்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கபிஷ், நன்றாக நடித்திருக்கிறான். அவன் 11-வது மாடியில் நின்று நடிக்கும்போது எனக்கே பயமாக இருந்தது. ஆனால், அவன் தைரியமாக நடித்திருந்தான். அவனுடைய அப்பாவித்தனம்தான் படத்திற்கு மிக பெரிய பலம்…” என்றார்.

blue wale-movie-poster-1

மனநல மருத்துவர் ஃபஜிலா ஆசாத் பேசும்போது, “சமூக நலன் கருதி பல படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் இப்படத்தைதான் சிறந்த படமாக கருதுகிறேன். பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், எந்த விஷயங்களில் கவனத்தை வைக்க வேண்டும் என்பதில்தான் குழப்பமடைகிறார்கள். எல்லா விளையாட்டுக்களும் தவறானது இல்லை.

இந்த விளையாட்டின் பாதிப்புக்கு முக்கிய காரணம் சவுண்ட் சிஸ்டம்தான். ஒரு குறிப்பிட்ட இசையைக் கேட்க, கேட்க அது நம் மூளை நரம்பைப் பாதித்து அந்த இசையை மீண்டும் கேட்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. அதன் காரணமாகவே ‘புளூ வேல்’ மாதிரி ஆபத்தான விளையாட்டை மீண்டும், மீண்டும் விளையாடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல், உணவு முறைகளும் இதற்கு துணை புரிகிறது.

வீடியோ கேம் மூலம் அடிமையாகி பாதிக்கப்பட்டு என்னிடம் வரும் குழந்தைகளையும், இளைஞர்களை நான் மீட்டு வருகிறேன். மூளை நரம்புகளுக்கு புத்துணர்ச்சித் தரும் நேர்மறையான எண்ணங்களைத் தரும் இசைகளைக் கேட்க வைப்பதன் மூலம் அவர்களை அந்த பாதிப்பிலிருந்து நிச்சயம் வெளியே கொண்டு வரமுடியும்.

இப்படத்தைப் பார்க்கும்போது 13 வயது சிறுவனால் திறமையாக நடிக்கும்போது, இந்த விளையாட்டு மூலம் அதே திறமையால் அவன் வாழ்க்கையையே கேள்வி குறியாக்கியிருக்கிறார்கள் இந்த விளையாட்டை உருவாக்கியவர்கள். அக்குழந்தைகளை சரியான முறையில் கவனித்து சரி செய்து மீட்பது பெற்றோர்களின் தலையாய கடமை…” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மன நல மருத்துவர் ஃபஜிலா ஆசாத் படத்தின் இசை தகட்டை வெளியிட்ட, இந்த விளையாட்டினால் உயிரிழந்த மதுரை விக்னேஷின் தாயார் டெய்சி ராணி அதனை பெற்றுக் கொண்டார்.

Our Score