“ஜாம்பி’ படத்தின் கதை என்னுடையது…” – எழுத்தாளர் ஆர்னிகா நாசரின் குமுறல்..!

“ஜாம்பி’ படத்தின் கதை என்னுடையது…” – எழுத்தாளர் ஆர்னிகா நாசரின் குமுறல்..!

தமிழ்ச் சினிமாவின் அடுத்தக் கதைத் திருட்டு புகார் வெளியாகியுள்ளது.

இந்த முறை அபாயக் குரலை எழுப்பியிருப்பவர் பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர்.

அவர் குறிப்பிட்டிருக்கும் திரைப்படம் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘ஜாம்பி’ என்னும் திரைப்படம். இயக்குநர் ஆர்.புவன் நல்லான் என்பவர் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் கதை தான் எழுதிய ஒரு நாவலில் இருந்து எடுத்தாளப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் எழுத்தாளர் ஆர்னிகா நாசர்.

இது குறித்து நம்மிடம் எழுத்தாளர் ஆர்னிகா நாசர் பேசும்போது, “நான் கடந்த 35 ஆண்டுகளாக ஒரு விஞ்ஞான தமிழ் எழுத்தாளனாக பல சிறுகதைகள், நாவல்களை எழுதி வருகிறேன்.

arnika naasar-1

15 வருடங்களுக்கு முன்பாக ‘கிழக்குக் கடற்கரைச் சாலை’ என்ற நாவலை எழுதினேன். இந்த நாவலின் கதை என்னவெனில் ஒரு ரிசார்ட்டில் சிலர் வந்து தங்குகிறார்கள். அங்கே கெமிக்கல் பொருட்கள் கலக்கப்பட்ட சிக்கன் உணவு அவர்களுக்குத் தரப்படுகிறது. இதைச் சாப்பிட்ட அனைவரும் ‘ஜாம்பி’களாக உருமாறுகிறார்கள்.

இந்த ரிசார்ட்டில் மட்டும் இப்படி நடக்கிறதே..? எப்படி இது நடந்தது..? என்பதைக் கண்டறிய இரண்டு துப்பறியும் அதிகாரிகள், அந்த ரிசார்ட்டுக்கு வந்து துப்புத் துலக்குகிறார்கள்.

அப்போது அங்கு வழங்கப்படும் கெமிக்கல் கலக்கப்பட்ட சிக்கன் உணவுகள்தான் அங்கே தங்கும் மனிதர்கள் ‘ஜாம்பி’யாக மாறுவதற்குக் காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள். இதுதான் எனது ‘கிழக்குக் கடற்கரைச் சாலை’ என்கிற நாவலின் அடிப்படைக் கதை.

இதைத்தான் இந்த ‘ஜாம்பி’ திரைப்படத்திலும் அடிப்படைக் கதைக் கருவாகக் கையாண்டிருக்கிறார்கள்.

படத்தின் துவக்கத்திலேயே செத்துப் போன கோழிகளை குப்பைக் கிடங்கில் வந்து போடுகிறார்கள். அதை ஒருவன் எடுத்துக் கழுவி சுத்தம் செய்து நல்ல கோழியாக கொண்டு வந்து விற்பனை செய்ய.. அதை ஒரு ரிசார்ட்காரர்கள் வாங்கி தங்களது ரிசார்ட்டுகளில் தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு பரிமாற.. அந்தச் சிக்கனால்தான் அனைவரும் ‘ஜாம்பி’யாக உருமாறுகிறார்கள்.

ஆக. எனது நாவலின் கதையும், இந்த ‘ஜாம்பி’ படத்தின் அடிப்படைக் கதையும் ஒன்றுதான். 15 வருடங்களுக்கு முன்பாக நான் எழுதிய  கதையை, இப்போது அப்பட்டமாக காப்பி செய்து, படமாக்கியிருக்கிறார்கள்.

என்னிடம் கேட்டிருந்தால், குறைவான தொகையாக இருந்திருந்தாலும்கூட அந்தக் கதையைக் கொடுக்க நான் சம்மதித்திருப்பேன். இப்படி ஒரு எழுத்தாளனின் அறிவைத் திருடலாமா..?

ஊருக்கே அறிவுரை சொல்வதுபோல திரைப்படம் எடுக்கும் இயக்குநர்கள் ஏன் இப்படி அடுத்தவர்களின் கதையை, அறிவைத் திருடி… தங்களை அறிவாற்றல் உள்ளவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்..?

இந்த சினிமாக்காரர்களுடன் மல்லுக்கட்டியே நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன். ஏற்கெனவே ‘எந்திரன்’ படம் விஷயமாக இயக்குநர் ஷங்கர் மீது நான் போட்டிருக்கும் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அது என்றைக்கு முடியும் என்று தெரியவில்லை. ஆனால் அதே ஷங்கர் ’எந்திரன்-2’ படத்திலும் என்னுடைய இன்னொரு கதையில் இருந்த முக்கியக் கதாபாத்திரத்தை அப்படியே ‘சுட்டு’ வைத்திருக்கிறார். இதை நான் எங்கே போய் சொல்வது..?

மேலும் சென்ற 2017-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் எழுதி, இயக்கிய ‘வை ராஜா வை’ படத்தின் கதை நான் ஆனந்தவிகடனில் எழுதிய ‘பில்லியனில் ஒருவன்’ என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது. இதற்கும் என்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை. உரிமையும் பெறவில்லை.

நான் தமிழ் மொழியில் விஞ்ஞான சிறுகதைகள் எழுதும் மிகச் சில எழுத்தாளர்களில் ஒருவன். ஒரு படைப்பை உருவாக்க ஆறு அல்லது எட்டு மாதங்கள் எடுத்துக் கொண்டு தீவிர ஆராய்ச்சி செய்து.. படித்துவிட்டுத்தான் கதையை எழுதுகிறேன். ஒவ்வொரு கதையிலும் என்னுடைய நீண்ட நாள் உழைப்பும், எனது அறிவுத் திறனும் இருக்கிறது.

ஆனால் அதற்குச் சிறிதும் மதிப்பளிக்காமல் தொடர்ந்து என் போன்ற அறிவார்ந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை திருடுவதையே நோக்கமாகக் கொண்டு சில இயக்குநர்கள் தமிழ்ச் சினிமாவில் செயல்பட்டு வருவது வெட்கங்கெட்ட செயல்.

இந்த ‘ஜாம்பி’ படத்தில் நடந்திருக்கும் கதைத் திருட்டுக்கு நியாயம் கேட்டு நிச்சயமாக நான் நீதிமன்றத்திற்குச் செல்வேன்..” என்று நீளமாகச் சொல்லி முடித்தார்.

மிக, மிக வருத்தமாக இருக்கிறது. இவர் சொல்கிறபடி பார்த்தால் இரண்டுமே ஒரே அடிப்படைக் கருதான்.

இயக்குநர் தெரிந்து செய்தாரா.. அல்லது தெரியாமல் செய்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் எழுத்தாளர் ஆர்னிகா நாசருக்கு கதைக்கான இழப்பீடு கண்டிப்பாக தர வேண்டும். இதுதான் நியாயமும்கூட..!

Our Score