full screen background image

“கிடைக்கும் மரியாதையை சுரேஷ்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்”-இயக்குநர் பாலாவின் அட்வைஸ்

“கிடைக்கும் மரியாதையை சுரேஷ்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்”-இயக்குநர் பாலாவின் அட்வைஸ்

இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் R.K.சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’.

மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறு உருவாக்கம்தான் இந்த ‘விசித்திரன்’ திரைப்படம்.

மலையாளப் படத்தை இயக்கிய இயக்குநரான M.பத்மகுமார் இந்தத் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக் குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னை, சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

நாயகி மது ஷாலினி பேசும்போது, “இந்தக் கதாப்பாத்திரத்தை எனக்குத் தந்ததற்காக, பத்மகுமார் சாருக்கு முதல் நன்றி. R.K.சுரேஷ் சார் இந்தப் படத்தில் பல தோற்றங்களில் வந்திருக்கிறார், ஒரே படத்தில் வேறு, வேறு தோற்றங்களில் தோன்றுவது கடினம் ஆனால், அவர் இந்தப் படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். ஜீவியின் இசை அருமையாக இருக்கிறது. என்னை ஞாபகம் வைத்திருந்து அழைத்து இந்தப் படத்தில் வாய்ப்பு தந்ததற்கு பாலா ஸாருக்கு நன்றி..” என்றார்.

இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “R.K.சுரேஷின் அப்பாவிடம் படம் எடுப்பதற்காக கதை சொல்லியுள்ளேன். ஆனால் அவர் சாமி படம்தான் எடுக்க போறேன். இந்தக் கதையை எடுக்க முடியாது என்று சொல்லி எனக்கு 500 ரூபாய் பணம் தந்து அனுப்பினார். ஆனால் அதன் பிறகுதான் அவர் வள்ளல் என்று எனக்குத் தெரிய வந்தது.

பின் அவர் மகன் நான் இயக்கிய படமான தர்மதுரை’ படத்தை எடுத்து, என்னை புகழ் பெற செய்தார். தந்தை இல்லாத மகனுக்கு தமையனே தந்தையாக இருப்பதுபோல சுரேஷை கவனமாகப் பார்த்துக் கொள்கிறார் அண்ணன் பாலா.

உங்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதம் எல்லாம் உங்கள் தந்தையின் புண்ணியம்தான். ஒரு வில்லனை நாயகனாக ஆக்குவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் இந்தப் படத்தை பார்க்கும் போது சுரேஷின் கண்களில் ஒரு அன்பு தெரிகிறது. அவருக்கு நடிப்பு சிறப்பாக வருகிறது. அவர் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இயக்குநரும் படத்தை நன்றாக இயக்கியிருக்கிறார்.

ஜீ.வி.பிரகாஷின் இசையும் கேட்க அற்புதமாக இருக்கிறது. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என நான் நம்புகிறேன்…” என்றார். 

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “மலையாள ‘ஜோசப்’ படத்தோட ரீமேக் என மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இது அப்படியில்லை. அதை அப்படியே ரீமேக் மாதிரி செய்யாமல், நிறைய காட்சிகளை இதில் சேர்த்து ஒரு புதுப்படம் போல அருமையான நடிகர்களோடு கொண்டு நடிக்க வைத்துள்ளார்கள்.

முதலில் இந்தப் படத்தைப் பாத்தவுடனேயே நானும் ரீமெக் பண்ண ஆசைப்பட்டேன். ஆனால், சுரேஷ் “நான் பண்றேன் அண்ணா…” என்றார். வில்லனாக நடிக்கும் அவர் எப்படி இந்த கதாப்பாத்திரத்தை செய்வார் என நினைத்தேன். ஆனால், அவர் அந்தக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். பாலா அண்ணன் இந்த நல்ல படத்தை தமிழுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள்…” என்றார்.

நடிகை பூர்ணா பேசும்போது, “ஒரு இடைவேளைக்கு பிறகு ஒரு நல்ல படத்தில் நடித்திருப்பதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பாலா சார் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி. ஆனால், அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும். பாலா சார் வாய்ப்பு தாருங்கள்.

ஜோசப்’ மலையாளத்தில் ஒரு மைல் கல் படம். பத்மகுமார் அட்டகாசமாக இயக்கியிருந்தார். அவர் எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. சுரேஷ் இந்தப் படத்தில் கடுமையாக உழைத்துள்ளார், அவர் நடிப்பால் நானும் நன்றாக நடித்திருக்கிறேன். ஜீ.வி. இசையில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. இந்தப் படத்தில் இரண்டு பாடலில் நடித்துள்ளேன்..” என்றார்.

இயக்குநர் பத்மகுமார் பேசும்போது, “என் வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாள் இது. சென்னையில் உதவி இயக்குநர் வாய்ப்புக்காக அலைந்த நாளில், என் படத்திற்காக மேடை ஏறுவேன் என நான் நினைக்கவில்லை. அதற்கு இரண்டு பேருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். பாலா சார் மற்றும் நடிகர் சுரேஷ். இவர்கள் இருவருக்கும் பெரிய நன்றி. இந்தப் படம் இரண்டு வருட பயணம். என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

நடிகர், தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “என் தந்தை, என் அம்மா, என் தந்தைக்கு அடுத்து என்னை கை தூக்கி அழைத்து செல்லும் பாலா அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றி. 13 வருசமா நான் திரைத்துறையில் இருக்கிறேன். பத்திரிக்கைகள் எனக்கு நிறைய ஆதரவு தந்துள்ளார்கள்.

இப்போது திரையரங்குகள் முழுக்க திறந்த பின் என் பட விழா நடப்பது மகிழ்ச்சி. கொஞ்சம், கொஞ்சமாக உங்கள் முன்னால் நான் நடிகனாக மாறி வந்துள்ளேன். ஜோசப்’ படம் பார்த்துவிட்டு, அது என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது, பாலா அண்ணனிடம் போய் சொன்னேன். “இது நல்ல படம். ஆனால் இந்தப் படத்திற்கு நிறைய முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றார்.

இந்தப் படத்திற்காக உடல் எடையை ஏற்றினேன். நிறைய உழைத்தேன். உழைத்தால்தான் சினிமா அங்கீகாரம் தரும். பாலா அண்ணன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார்களை இயக்கிய பத்மகுமார் சார் இயக்கத்தில் நடிப்பது வரம். என் பட குழுவினருக்கு நன்றி. நான் ஜீவியின் ரசிகன். அவரது இசைக்கு நன்றி…” என்றார். 

தயாரிப்பாளர்-இயக்குநர் பாலா பேசும்போது, “இங்கே எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தை ரீமேக் பண்ணலாம் என்றபோது சுரேஷ் ”நான் பண்றேன் அண்ணா…” என்றான். அப்போ அதே டைரக்டரை அழைப்போம் என அவரை கூப்பிட்டு, “நீங்கள் மலையாளத்தில் செய்ய முடியாததை, பணம் பற்றி கவலை இல்லாமல் தமிழில் பண்ணுங்கள்” என்றேன். அவரும் மலையாள படத்தைவிட இந்தப் படத்தை அழகாக எடுத்துள்ளார். இந்தப் படம் மூலம் சுரேஷுக்கு நல்ல மரியாதை கிடைக்கும். அதை அவன் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். படம் நன்றாக வந்துள்ளது…”  என்றார்.

Our Score