full screen background image

அவதார்-2 – சினிமா விமர்சனம்

அவதார்-2 – சினிமா விமர்சனம்

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதம் பிடிக்கும்.. எனக்குத் தாமதம் பிடிக்கும்” என்பது கவியரசர் கண்ணதாசனின் புகழ் பெற்ற வாசகம்.

ஒவ்வொரு தாமதத்திற்கும் ஒரு அற்புதமான காரணமிருக்கும் என்பார்கள். நிஜ வாழ்வில் அது எப்படியோ.. ஆனால் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் திரை வாழ்வில் அது நிஜம். அவர் ஒவ்வொரு படத்திற்குமிடையே எடுத்துக்கொள்ளும் காலம் மிகவும் அதிகம்தான். ஆனால் அதிக காலம் எடுத்தாலும் எக்காலமும் ரசிகர்களால் மறக்கவியலாத படத்தைக் கொடுப்பதில் அவர் அதிசயர் எனலாம்.

அவர் இயக்கத்தில் ‘அவதார்’ முதல் பாகம் 2009-ஆம் ஆண்டு வெளியானது. 13 வருட காத்திருப்பிற்கு பின் தற்போது ‘அவதார்-2’ வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது.?

13 வருடம் ஆகிவிட்டதால் ‘அவதாரின்’ முதல் பாகத்தின் கதையை கொஞ்சம் மேலோட்டமாகப் பார்க்கலாம்.

ஏலியன்கள் வாழும் உலகை சிதைப்பதற்காக மனிதப் படை ஒன்று ஏலியன்ஸ் காட்டிற்கு வருகிறது. அந்த மனிதப் படையில் ஒருவன் ஜேக்சல்லி. அவனே நாயகன். அவன் அந்த ஏலியன் இன மக்களின் பால் ஈர்ப்புண்டு அவர்களில் ஒரு பெண்ணை காதலிப்பான். பின்னர் மனிதர்களுக்கு எதிரான ஏலியன்களின் போராட்டத்தில் அவர்களுக்கே துணை நிற்பான். முக்கியமாக மனித குலத்திலுள்ள அரக்கனான காலனல் மைல்ஸை கொன்றொழிப்பான் நாயகன். அப்படியாகத்தான் ‘அவதார்’ முதல் பாகம் முடிந்துள்ளது.

இந்த இரண்டாம் பாகத்தின் கதை என்ன..?

ஜேக்சல்லி ஏலியன் மக்களோடு கலந்து வாழ்ந்து வருகிறான். நெஸ்ட்ரியோடு இணைந்து நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்து தன் மனைவி பிள்ளைகள் என வாழ்கிறான். வான உலகத்தில் இருந்து ஒரு டீம் ஜேக்சல்லி கூட்டத்தை அழிக்க முயற்சிக்கிறது. முக்கியமாக ஜேக்சல்லியால் தீர்த்துக் கட்டப்பட்ட காலனல் மைல்ஸ் மீண்டும் உயிர்ப்பிக்கிறான்.

ஜேக்சல்லி குடும்பத்தை வேரோடு அழிக்க அவன் பெரும்படையோடு ஜேக்சல்லி இருக்கும் ஏலியன் காட்டிற்குள் வருகிறான். ஜேக்சல்லி ஒரு கடல் இனக் குழுவிடம் தன் குடும்பத்தோடு தஞ்சம் அடைகிறான். கால்னல் மைல்ஸ், ஜேக்சல்லி குடும்பம் இருக்கும் கடலைக் கண்டடைகிறான். பெரும் சண்டை மூள்கிறது. முடிவில் யார் வென்றார்கள் என்பதை பிரம்மாண்டமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்

ஜேக்சல்லி நடிப்பில் வெளுத்து வாங்கக் கூடியவர்தான். ஆனால் இப்படத்தில் அவரது கேரக்டர் வலிமையாக எழுதப்படாததால் அவரது நடிப்பு சாதரணமாக கடந்து போய்விடுகிறது. நெஸ்ட்ரி தாய்மை உணர்வையே அதிகம் வெளிப்படுத்துகிறார். ஆனால் சில ஆக்சன் காட்சிகள் என்றாலும் அதில் உக்கிரம் காட்டுகிறார்.

ஸ்பைடர் கேரக்டரில் வரும் இளைஞன் எமோஷ்னல் காட்சிகளில் வெகு சுலபமாக ஸ்கோர் செய்கிறான். வில்லன் வழக்கம் போல் மிரட்டல்தான். ஜென்மப் பகையை சுமந்து வரும் அந்தக் கேரக்டர்தான் படத்தில் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டுள்ளது.

ஏனைய கேரக்டர்களில் கவனம் பெறுவது, கடற் இன தலைவனின் மனைவி, ஒரு கடல் மிருகத்தோடு நட்பு பாராட்டும் ஜேக் சல்லியின் மகன். இந்த இரு கேரக்டர்களும்தான்.

3.15 மணி நேரம் நீ…….ளும் இப்படத்தை சலிக்காமல் பார்க்க வைப்பது அதன் விஷுவல் ட்ரீட்தான். முழுக்க, முழுக்க கிராபிக்ஸ் என்றாலும் CG மூலமாக எப்படியான எக்ஸ்பீரியன்ஸை ஆடியன்ஸுக்கு கொடுக்க வேண்டும் என பயங்கரமாக யோசித்துள்ளார்கள்.

காடு, கடல், கடல் சார்ந்த உயிரினங்கள், வானில் வட்டமிடும் ஓர் உலகம் என இந்த ‘அவதார்-2’ விஷுவலாக மிரட்டுகிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை, சவுண்ட் எபெக்ட், கிராபிக்ஸ், எடிட்டிங், கலரிங் என ஒவ்வொரு டிப்பார்ட்மெண்டும் வெறித்தனமாக உழைத்துள்ளனர். இவர்களின் பேருழைப்பை மிகச் சரியாக திரையில் காட்டியுள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.

ஆனால் விஷுவலாக நம்மை கலங்கடிக்கும் ‘அவதார்-2’ கதையாக, உணர்வு ரீதியாக நம்மை துளிகூட அசைக்கவில்லை. படத்தில் மனதை கணக்கச் செய்யும் ஒரு காட்சிகூட இல்லை என்பது அவதார் ரசிகர்களுக்குக் கிடைத்துள்ள பெரும் ஏமாற்றம்.

முதல் பாகத்தில் விஷுவல் & கதை திரைக்கதை என சிக்ஸர் அடித்த ‘அவதார்’ இப்பாகத்தில் வெறும் விஷுவல் என்ற பவுண்ட்ரியோடு நின்றுவிட்டது. அதனால் என்ன?

இப்படியான பிரம்மாண்டமான விஷுவல் அனுபவத்தையும் தவற விடவே கூடாது. நல்ல தியேட்டரில் சென்று 3-D-ல் இந்தப் படத்தைப் பார்த்து அந்த பரவசமான அனுபவத்தைப் பெற்றுவிடுங்களேன்..!

RATING : 4 / 5

Our Score