full screen background image

அருவம் – சினிமா விமர்சனம்

அருவம் – சினிமா விமர்சனம்

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ‘ஸ்டண்ட்’ சில்வா மற்றும் ‘போஸ்டர்’ நந்தகுமார் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ‘ஆடுகளம்’ நரேன், குமரவேல், மயில்சாமி, சுஜாதா மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகளும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசை – எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு – என்.கே.ஏகாம்பரம், படத் தொகுப்பு – பிரவீன் K.L., கலை இயக்கம் – ஜி.துரைராஜ், சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, உடைகள் – தீபாலி நூர், நடன இயக்கம் – தினேஷ், பிருந்தா, பாடகர்கள் – யுவன் சங்கர் ராஜா, ரோஷிணி, பாடல்கள் – விஜய்சாகர், எழுத்து, இயக்கம் – சாய் சேகர்.

உணவில் கலப்படம் செய்வதைத் தடுக்கும் அரசு அதிகாரியான சித்தார்த்தை கொலை செய்கிறார்கள் கலப்பட எதிரிகள். அவரோ தன்னுடைய காதலியின் உடம்பில் புகுந்து அந்த கலப்பட எதிரிகளை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

சித்தார்த் உணவுப் பொருள் கட்டுப்பாட்டு துறையில் ஒரு உயரதிகாரி. சோதனை செய்யவும், தடை செய்யப்பட்ட பொருட்களையோ அல்லது கலப்பட பொருட்களையோ கைப்பற்றவும்.. அந்த நிறுவனம் நடத்திய இடங்களை சீல் வைக்கவும் அதிகாரம் உள்ளவர்.

நகரில் சுத்தம், சுகாதாரமற்ற முறையில் டீக்கடை நடத்தும் போஸ்டர் நந்தகுமாரில் துவங்கி அமைச்சருக்கு மிக நெருக்கமானவர்களின் கடைகளையெல்லாம் சீல் வைக்கிறார் சித்தார்த்.

நாயகி கேத்ரின் தெரசா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை. இவருக்கு ஒரு வித்தியாசமான குறைபாடு உள்ளது. அதாவது எந்தவொரு வாசனையையும் நுகரும் திறன் அவருக்கில்லை. இதனால் பலவித பிரச்சினைகளை தனது வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார் கேத்ரின். இதன் உச்சக்கட்டமாக தனது அம்மாவைக்கூட பறி கொடுத்திருக்கிறார். அதனால் தனது அப்பாவுடன் தனித்து வாழ்ந்து வருகிறார்.

இவரை ஒரு நாள் நடுரோட்டில் சந்திக்கும் சித்தார்த் சினிமா பாணியில் காதலிக்கத் துவங்குகிறார். முதலில் முடியாது என்று மறுக்கிறார் கேத்ரின். ஆனால் நீயே என்னைத் தேடி வருவாய். அதுவரைக்கும் நான் காத்திருப்பேன் என்கிறார் சித்தார்த்.

இந்த நேரத்தில் நந்தகுமாரும், அமைச்சரும் மிகக் கொடூரமான முறையில் ஒரு நாள் கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளைச் செய்தது யார் என்று தேடினால் அது ஒரு பெண் என்று தெரிய வருகிறது. இன்னும் நுணுக்கமாக விசாரிக்கும்போது அது கேத்ரின் தெரசா என்று கண்டு பிடிக்கிறார்கள்.

தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த கேத்ரின் எப்படி கொலை செய்திருக்க முடியும் என்று பார்த்தால் சில நாட்களுக்கு முன்பு சித்தார்த் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. சித்தார்த் அவ்வப்போது கேத்ரினின் உடலில் புகுந்து இந்தக் கொலைகளைச் செய்திருப்பது தெரிய வருகிறது.

இது தெரியாமல் அமைச்சரின் ஆட்களும், வில்லன் மதுசூதனராவும் கேத்ரினை கொல்ல முயல்கிறார்கள். சித்தார்த் ஆவி ரூபத்திலேயே கேத்ரினை காப்பாற்ற முயல்கிறார். இருவரில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

காதல், ஹாரர், சமூகம் கலந்த ஒரு கலவையான படமாக இதனை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சாய் சேகர். இதில் ஏதாவது ஒன்றிலேயே படத்தினை நகர்த்தியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். ஆனால் இடையிலேயே பேய் படமாக இதனை மாற்றியமைத்ததால் இதில் சொல்லப்பட்டிருக்கும் கலப்படப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு செய்தி மக்களுக்கு இரண்டாம்பட்சமாகவே போய்விட்டது.

நடிகர் சித்தார்த் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஹானஸ்ட்டான ஒரு அரசு அதிகாரியாகக் காட்சியளிக்கிறார். டீக்கடையின் சுகாதாரத்தைக் கண்டறிய வெள்ளையடிப்பவனை போல வந்து டீக்கடைக்கு சீல் வைக்கும் அந்த வேகம் பிடித்திருக்கிறது.

இதேபோல் காதல் வேகத்தில் பார்த்தவுடனேயே கேத்ரினுடன் காதலில் விழுவதும்.. அவரது வீட்டில் காதல் அப்ளிகேஷன் போட்டு.. அது ரிஜெக்ட் ஆனாலும் தான் காத்திருப்பதாகவும் சொல்லிவிட்டு வரும்போதும் ரசிக்க வைத்திருக்கிறார்.

மற்றபடி அடிதடி, வெட்டுக் குத்து, ரகளையில் சண்டை இயக்குநரின் புண்ணியத்தில் தனது இளமை வேகத்தைக் காட்டியிருக்கிறார் சித்தார்த்.

நாயகி கேத்ரின் இந்தப் படத்தில்தான் கொஞ்சம் மேக்கப்பில்லாமல் நடித்திருக்கிறார். ஆனால் பல குளோஸப் காட்சிகளில் இவருக்கான டப்பிங் சொதப்பலாக இருக்கிறது. பல இடங்களில் வசனத்தையும் கடித்துத் துப்புவதுபோல நடித்திருக்கிறார். இயக்குநர் இதையெல்லாம் கவனித்திருக்கக் கூடாதா..?

கிளி ஜோஸியக்காரனிடம் சண்டையிட்டு கிளியை பறக்கவிட்டுவிட்டுப் போகும் வேகமும், தன்னால் நுகர முடியாத நிலைமையை மற்றவர்கள் கிண்டல் செய்வதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்திலும் கேத்ரினின் நடிப்பு அழகு.

வழக்கமான பாசமுள்ள அப்பாவாக ஆடுகளம் நரேன்.. நுகரும் சக்தி மகளுக்குக் கிடைத்துவிட்டதை அறிந்தவுடன் நரேன் படும் சந்தோஷம் ஒரு க்யூட் காட்சி..!

கபீர் சிங்கும், மதுசூதனன் ராவும் வழக்கம்போல் வில்லன் கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்துவதுபோலவே நடித்திருக்கிறார்கள். காமெடியன் சதீஷின் சில வசனங்கள் கொஞ்சமேனும் சிரிக்க வைக்கிறது.. இவரும் இல்லையெனில் படம் படு சீரியஸான படமாக இருந்திருக்கும்.

தமனின் இசையில் பாடல்கள் ஒரு முறை மட்டுமே கேட்கும் ரகம். அதையெல்லாம் யார் கேட்டது என்ற நிலையில்தான் படமே ஓடிக் கொண்டிருந்தது.

படத்தில் இடையில் சில நிமிடங்களில் கலப்பட உணவுப் பொருட்களும், அதனால் விளையும் தீமைகளும் பற்றிய டாக்குமெண்ட்டரி லெவலில் ஒரு குறும்படம் காண்பிக்கப்படுகிறது. இதுதான் படத்திலேயே மிகச் சிறப்பான பகுதி.

இதனை வைத்து ‘தனி ஒருவன்’ ஸ்டைலில் சீரியஸான நிஜமான மனிதர்கள் போராடும் கதையாக மாற்றியிருந்தால் பார்வையாளர்களுக்கும் மிக நெருக்கமாக இருந்திருக்கும். ஆனால் தேவையற்று பேய்ப் படமாக மாற்றியதால் இந்தக் கவனம் ரசிகர்களிடையே சிதைந்து போனது என்னவோ உண்மைதான்.

“சிகரெட் பிடிப்பது கேடு’ என்று சிகரெட் பாக்கெட்டில் எழுதி வைத்திருப்பதைப் போல, உணவில் கலப்படம் செய்வதை இப்போதே நாம் தடுக்காவிட்டால், நாளைக்கு பிஸ்கெட் சாப்பிட்டால் கேடு, அரிசி சாப்பிட்டால் கேடு என்ற நிலைமைக்கு சென்று விடுவோம்…” என்று சித்தார்த் ஒரு இடத்தில் வசனம் பேசியிருப்பார்.

இந்த ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லிய காரணத்துக்காகவே இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம்..!

Our Score