full screen background image

பெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்

பெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்

பல வெள்ளி விழா திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ‘ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம்’, முதல் முறையாக திரைப்பட தயாரிப்பில் இறங்கி தயாரித்திருக்கும் திரைப்படம் இது.

இத்திரைப்படத்தில் தமன்னா, யோகிபாபு, முனீஸ்காந்த், சத்யன், காளி வெங்கட், மற்றும் ‘சின்னத்திரை’ புகழ் டி.எஸ்.கே., பிரேம், ஸ்ரீஜா ரவி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், பேபி மோனிகா, ‘பேய்’ கிருஷ்ணா, ‘மைம்’ கோபி, கவின் ஜெய் பாபு, மைனா நந்தினி, ‘மகாநதி’ சங்கர், லிவிங்ஸ்டன், ‘புதுப்பேட்டை’ சுரேஷ், ஆத்மா பேட்ரிக், அப்துல் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – டேனி ரேமண்ட்ல், படத் தொகுப்பு – லியோ ஜான் பால், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், இசை – ஜிப்ரான், சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், பாடல்கள் – அனுராதா, உடைகள் வடிவமைப்பு – பினிதா சம்தாசினி, நிஸ்கா லுல்லா, நடன இயக்கம் – ராதிகா, டி.ஐ. கலரிஸ்ட் – சுரேஷ் ரவி, ஒலி வடிவமைப்பு – சச்சின் சுதாகரன், எம்.ஹரிஹரன், ஒலி கலவை – கண்ணன் கண்பத், வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வை – ஸ்டாலின் சரவணன், கதை, திரைக்கதை – மகி வி.ராகவ், வசனம் – ஜி.ஆர்.சுரேந்தர்நாத், நிர்வாகத் தயாரிப்பு – ஏ.குமார்.

‘அதே கண்கள்’ வெற்றி திரைப்படத்தின் மூலம், தனது வித்தியாசமான கதை சொல்லும் தன்மையால் மக்களை பெரிதும் கவர்ந்த இயக்குநர் ரோகின் வெங்கடேசன், இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.  இது இவரது இரண்டாவது படைப்பாகும்.

2017-ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ‘ஆனந்தோ பிரம்மா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்.

சென்னையை அடுத்த மணிமங்கலத்தில் அமைந்திருக்கிறது அந்தப் பெரிய பங்களா. அதன் உரிமையாளர் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ். இவருடைய மனைவி ஸ்ரீஜா ரவி. இவர்களுடைய ஒரே மகன் பிரேம்.

தற்போது மலேசியாவில் இருக்கும் பிரேம் சில ஆண்டுகளாக அம்மா, அப்பாவுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறார். வீட்டில் தனிமையில் இருக்கிறோமே என்பதால் ஒரு பெண் பிள்ளையை தத்தெடுத்து வளர்க்கிறார் வெங்கடேஷ். அவர்தான் தமன்னா. அந்த வீட்டில் சமையல்காரராக இருப்பவரும் அதே வீட்டில்தான் தங்கியிருக்கிறார். அவருடைய பெண் குழந்தை மோனிகா.

மலேசியாவில் இருந்து திடீரென்று வரும் பிரேம் தனக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், கடனை அடைப்பதற்காக அந்த வீட்டை விற்று பணத்தைக் கொடுக்குமாறு தந்தைக்கு நெருக்கடி கொடுக்கிறார். அம்மாவும், அப்பாவும் அதற்கு உடன்பட மறுக்கிறார்கள்.

இதனால் கோபமான பிரேம் திட்டமிட்டு தனது குடும்பத்தினருக்கு விஷம் வைத்துக் கொல்ல நினைக்கிறார். இந்தப் படுபாதகக் கொலைத் திட்டத்தில் அவருடைய தாயார் மட்டுமே தப்பித்துக் கொள்ள, மற்றவர்கள் சிக்கிக் கொண்டு பரிதாபமாய் உயிரிழக்கிறார்கள்.

பலவித ஆசைகளுடன் இருந்த பிரேமின் குடும்பத்தினரின் உடல் அந்த வீட்டின் பின்புறத்திலேயே எரிக்கப்பட்டதால் அவர்கள் அந்த வீட்டிலேயே ஆவியாக அலைகிறார்கள். ஆனால், அவர்களது ஆத்மா சாந்தியாகாமல் அம்மா ஸ்ரீஜா ரவியைப் பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனது குடும்பத்தினரைத் திட்டமிட்டு படுகொலைகளைச் செய்த பிரேம் அப்படியே மலேசியாவுக்குத் திரும்பிச் செல்கிறார். அதன் பின்பு சென்னையில் இருக்கும் தனது போலீஸ் இன்ஸ்பெக்டர் நண்பனுக்கு போன் செய்து தனது அம்மாவும், அப்பாவும் கேரளாவுக்கு போனதாகவும், போன இடத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும், அவர்களைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்றும் பொய் சொல்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டரான அந்த நண்பர் இதை உண்மையென்று நம்பி பிரேமுக்கு உதவிகள் செய்ய முன் வருகிறார். பிரேம் மலேசியாவில் இருந்து சென்னை வந்து பின்பு இன்ஸ்பெக்டருடன் கேரளாவுக்குச் செல்கிறார். அங்கே நல்ல பிள்ளையாக தனது பெற்றோரைப் பற்றி விசாரித்துத் தேடுகிறார்.

கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் ஒரு ஊரின் மருத்துவமனையின் மார்ச்சுவரியில் முகம் தெரியாத நிலையில் இருக்கும் இருவரை தனது பெற்றோர்கள் என்று பொய்யாகச் சொல்லி, அடையாளம் காட்டி அவர்களது உடல்களைப் பெற்று அடக்கம் செய்கிறார்.

இப்போது தனது வீட்டை விற்பனை செய்வதற்காக திரும்பவும் சென்னை வருகிறார் பிரேம். அவருடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான நண்பருடன் சேர்ந்து வீட்டை விற்க முயல்கிறார் பிரேம்.

ஆனால், வீட்டை வாங்க ஆள் இல்லையென்று சொல்லி தாங்களே மிகக் குறைந்த விலைக்கு அந்த வீட்டை வாங்கிவிட்டு பின்பு பெரும் தொகைக்கு விற்று லாபம் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள் இன்ஸ்பெக்டரும், அவரது நண்பர் ‘மைம்’ கோபியும். அதனால் அந்த வீட்டில் பேய் இருப்பதாகச் சொல்லி வருபவர்களை பயமுறுத்தி அனுப்பி வைக்கிறார் இன்ஸ்பெக்டர். இதையறியாத பிரேம் அந்த வீட்டில் “பேய் இல்லை” என்கிறார்.

இந்த நேரத்தில் ‘மைம்’ கோபியின் பாரில் வேலை செய்யும் முனீஸ்காந்த் அந்த வீட்டில் பேய் இல்லை என்று நிரூபித்தால் நிறைய பேர் வீடு வாங்க வருவார்கள். அந்த வீட்டில் தங்குவதற்கு தானே ஆட்களை ஏற்பாடு செய்வதாக பிரேமிடம் சொல்கிறார். பிரேமும் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.

ஆனால் வந்தவர்களை பேய்க் குடும்பத்தினர் பயமுறுத்தி விரட்டியடிக்கின்றனர். இதனால் முனீஸ்காந்த் தானே அந்த வீட்டில் தங்க முடிவெடுக்கிறார். இவருக்குத் துணையாக பையனின் மருத்துவச் செலவுக்குப் பணம் கேட்டு அலையும் காளி வெங்கட், சினிமாவில் நடிப்பதற்காக ஒரு ஆளிடம் 8 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த சினிமாக்காரனான சரவணக்குமார், காமாலைக் கண் மற்றும் காது கேளாத குறைபாடு கொண்ட சத்யன் மூவரும் இணைகிறார்கள்.

இவர்கள் நால்வரும் அந்த வீட்டில் மூன்று நாட்களாவது இருந்து பேய் இல்லை என்று நிரூபிப்பதாக பிரேமிடம் சொல்கிறார்கள். இதன் பின்பு வீடு விற்பனையானால் முனீஸ்காந்த் அண்ட் கோ-வுக்கு கமிஷனாக 20 சதவிகிதத்தைத் தருவதாகச் சொல்கிறார் பிரேம். இதனால் சந்தோஷமாக இவர்கள் இந்த வீ்ட்டில் குடியேற.. வீட்டுக்குள் இருக்கும் பேய்க் குடும்பத்தினர் இவர்களைத் துரத்தியடிக்க முயல்கிறார்கள்.

இவர்களில் யார் ஜெயித்தார்கள்..? யார் தோற்றார்கள்..? கடைசியில் வீடு விற்பனையானதா…? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை என்பது பார்வையாளர்களுக்கு அலுப்பைக் கொடுத்துவிடும் அபாயம் இருக்கிறது என்றாலும் சுவையான திரைக்கதை என்னும் அலுப்பு மருந்தால் மட்டுமே அந்த சலிப்பைப் போக்க முடியும். அதை இந்தப் படத்தில் மிகச் சரியாகக் கொடுத்திருக்கிறார்கள்.

இடைவேளைவரையிலும் அந்த வீட்டுக்குள் அவர்களை கொண்டு வரும் காட்சிகளால்தான் படம் ஓடுகிறது. அதன் பிறகு பரபரவென பறக்கிறது. இதற்குக் காரணம் நடிகர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சும், படமாக்கலும்தான்.

குடித்துவிட்டால் பேயாய் இருக்கும் ஆள், இரவானால் கண் தெரியாத ஆள், எப்போதும் சினிமா கனவில் வேறொரு உருவத்திலேயே இருக்க நினைக்கும் ஆள் இவர்களுடன் சோகம் ஏற்பட்டால் சிரித்தே சமாளிக்க வேண்டும் என்ற இதய பிரச்சினையுள்ள ஆள் என்று அனைவருக்கும் பார்த்துப் பார்த்து கேரக்டரை செதுக்கியிருக்கிறார்கள்.

பேயைப் பார்த்து முனீஸ்காந்த் பயப்பட முடியாமல் சிரிக்கும் காட்சிகளில் அப்படியொரு நகைச்சுவை தெறிக்கிறது. இதேபோல் பேய்களை பயமுறுத்த சரவணக்குமார் பல்வேறு நடிகர்களின் ரூபத்தில் பேசிக் காட்டும் காட்சியும் அபாரம். குடித்த நிலையில் தன்னை பயமுறுத்த வரும் பேய்களை டயர்டாக்கி அனுப்பி வைக்கும் காளி வெங்கட்.. கண்ணே தெரியாமல் ஜாலியாக புல்லாங்குழல் ஊதும் சத்யன் என்று இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பேய்களுக்கு இவர்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பார்த்தே சிரிப்பலை தியேட்டரில் தொடர்ச்சியாய் எழுகிறது.

தமன்னா அழகுப் பதுமையாய் காட்சியளிக்கிறார். நடிப்பில் குறை சொல்ல முடியாத அளவுக்கு திருப்திகரமாய் நடித்திருக்கிறார். “நாமெல்லாம் செத்துட்டோமாப்பா..?” “நாமெல்லாம் பேயாப்பா..?” என்று அவர் கேட்கும்போதுதான் அவர்கள் ‘பேய்கள்’ என்கிற விஷயமே பார்வையாளர்களுக்குத் தெரிகிறது. இந்த அளவுக்குத் திரைக்கதையை நைச்சியமாகக் கொண்டு போன திரைக்கதை ஆசிரியருக்கு நமது பாராட்டுக்கள்.

தமன்னாவைவிடவும் அதிகமாக வசனம் பேசியிருப்பது முனீஸ்காந்துதான். மற்றைய மூன்று பேரை ஒன்று சேர்க்க இவர் படும்பாடும்.. தெளிவான நிலையில் பேயைப் பார்த்து பயப்படும் காட்சிகளிலும் உம்மணா மூஞ்சிகளைக்கூட சிரிக்க வைத்துவிடுகிறார்.

சத்யன் மிக கூலாக தனக்குக் காமாலை கண் என்று சொல்லிவிட்டு பேய்க் குடும்பத்தை அலட்சியமாக சமாளிக்கும்விதத்தில் தனது சிறந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார். ‘சின்னத்திரை’ சரவணக்குமாருக்கு இதுவொரு முக்கியமான படம். இதற்குப் பின்பு இவர் ஒரு ரவுண்டு வரலாம். அந்த அளவுக்கு கெப்பாசிட்டியும் இவரிடத்தில் உண்டு என்பது இவரது நடிப்பைப் பார்த்தாலே தெரிகிறது.

காளி வெங்கட் குணச்சித்திர வள்ளலாக தனது நடிப்பை மென்மையாகத் துவங்கி புல் பாட்டிலைக் கவிழ்த்துவிட்டு ஆட்டமாய் ஆடும் குடிகாரராக முடித்திருக்கிறார். இவரும் பேய்க்கு முதலில் தண்ணி காட்டிவிட்டு பின்பு அவர்களிடமே மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சிகளில் நடிப்பிலேயே சிரிக்க வைத்திருக்கிறார்.

யோகி பாபுவும், ‘மைனா’ நந்தினியும் சில காட்சிகளே என்றாலும் மனதில் நிற்கிறார்கள். “இந்த வீட்ல யார் பேயுங்க.. யார் மனுசங்கன்னே… தெரியலையேடா..?” என்று யோகி பாபு அதிர்ச்சியில் சொல்லும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது.

முனீஸ்காந்த், ‘மைனா’ நந்தினி இருவரின் முன் கதைச் சுருக்கமும் ஓஹோ.. அதைப் படமாக்கியிருக்கும்விதமும் அழகு. எதிர்பாராமல் பேயாக நந்தினியைச் சந்திக்கும் முனீஸ்காந்தின் அந்த இடத்து பேச்சும், நடிப்பும் ஆரவாரமான காமெடியைத் தந்திருக்கிறது.

கே.எஸ்.ஜி.வெங்கடேஷூம், ஸ்ரீஜா ரவியும் அப்பா, அம்மாவாக தங்களது கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். ஸ்ரீஜா ரவிக்கு கொஞ்சம் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில காட்சிகளே ஆனாலும் லிவிங்ஸ்டனின் ஏமாற்று வேலை ரசிக்க வைத்திருக்கிறது.

ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும் இதில் சலிப்பு வராத அளவுக்கு கேமிரா கோணங்களை மிக அழகாக வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். இருட்டு, பகல் என்று அனைத்திலும் ஒளிப்பதிவின் வித்தையினாலும் பயமும், திகிலும் கூடுகிறது.

கதவு தானாக திறப்பது, ஜன்னல் பட்டென்று சாத்திக் கொள்வது போன்ற வழக்கமான பேய்ப் படக் காட்சிகளைக்கூட இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமான வகையில் படமாக்கியிருக்கிறார்கள். இதுவும்கூட படத்திற்குக் கிடைத்திருக்கும் ஒரு பிளஸ் பாயிண்ட்டுதான்.

படத்திற்குக் கிடைத்திருக்கும் இன்னொரு மிக பெரிய பலம் இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசைதான். தேவைப்படும் நேரத்தில் மெளனித்தும், ஆட்டமாய் ஆட வேண்டிய  இடத்தில் பயமுறுத்தும் இசையையும் கொடுத்து திகிலுக்கும் ஒரு பலத்தைக் கொடுத்து பேய்களுக்கும் ஒரு பிரமிப்பைக் கொடுத்திருக்கிறார்.

பேய்ப் பட வரிசையில் இந்தாண்டுக்கான வெற்றிப் பட லிஸ்ட்டில் நிச்சயமாய் இத்திரைப்படமும் இடம் பிடிக்கிறது. முதல் பாதியைவிடவும், இரண்டாம் பாதியில் இருக்கும் நகைச்சுவையே படத்தை வெற்றிப் படமாக்கியிருக்கிறது.

இத்தனை ப்ளஸ்கள் இருந்தும் படம் பார்த்தவர்களின் மத்தியில் தோன்றும் ஒரேயொரு கேள்வி.. இந்தப் படத்துக்கு எதற்கு ‘பெட்ரோமாக்ஸ்’ என்று பெயர் வைத்தார்கள்..? என்பதுதான். பொதுவாக சிரிக்கத் தெரியாதவர்களை ‘பெட்ரோமாக்ஸ்’ என்று அழைப்பார்கள். ஒருவேளை அதற்கான குறியீடாக இருக்குமோ..?

Our Score