பப்பி – சினிமா விமர்சனம்

பப்பி – சினிமா விமர்சனம்

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் வருண் முதல்முறையாக கதையின் நாயகனாக வேடமேற்றிருக்கிறார். ‘கோமாளி’ புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் யோகிபாபு, மாரிமுத்து, நித்யா, வெங்கடேஷ், ரிந்து ரவி, ஆர்.எஸ்.சிவாஜி, ‘மொட்டை’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் பிங்கி என்ற நாயும் பப்பி என்கிற படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

‘மொரட்டு சிங்கிள்’ நட்டு தேவ்  இயக்கியிருக்கும் இப்படத்திற்கு  தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் படத் தொகுப்பு செய்துள்ளார்.

Adult வகை திரைப்படங்களில் செக்ஸை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் வேறு. செக்ஸினால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கும்விதத்தை சொல்லும் திரைப்படங்கள் வேறு. இந்தப் ‘பப்பி’ திரைப்படம் இதில் இரண்டாவது வகை.

கதையின் நாயகன் வருண் பி.இ. நான்காமாண்டு படிக்கும் கல்லூரி மாணவர். செக்ஸ் தொடர்பான பேச்சுக்களையும், வீடியோக்களையும், புத்தகங்களையும் தேடித் தேடிப் படிக்கும் ஆர்வமுள்ளவர் வருண். வகுப்பறையில் பிட்டு படம் பார்த்ததால், ஆசிரியையிடம் பிடிபட்டு கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு வீட்டில் இருக்கிறார்.

கொஞ்சம் விடலைத்தனமான மனநிலையில் இருக்கும் வருணுக்கு தன் அப்பாவான மாரிமுத்துவைக் கண்டால் ஆகாது. அப்பாவின் கண்டிப்பினால் அவர் மீது வெறுப்புணர்வோடு இருக்கிறார்.

ஒரு நாள் வருணின் வீட்டு மாடிக்குக் குடி வருகிறார் நாயகி சம்யுக்த ஹெக்டே. நாயகியைப் பார்த்தவுடன் இன்பாச்சுவேஷனாகிறார் வருண். இதைத் தனது நண்பர்களிடத்தில் சொல்ல அவர்களும் இவரை உசுப்பேற்றிவிடுகிறார்கள்.

நாயகிக்கும், இவருக்குமான பிரெண்ட்ஷிப் மெல்ல, மெல்ல வளர்ந்து காதலாகிறது. ஒரு நாள் நண்பனின் நிச்சயத்தார்த்த விழாவுக்குச் சென்றபோது, காதலர்கள் இருவருக்குள் முதல் உறவும் ஏற்பட்டு விடுகிறது.

இதற்கடுத்த மாதம் தனக்கு மாதாந்திர பீரியட்ஸ் வரவில்லை என்பதால் தான் கர்ப்பமாக இருக்கிறோமோ என்று சந்தேகப்படுகிறார் நாயகி. நாயகி கர்ப்பம் என்று நினைத்து வருணும் அலறுகிறார். வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்சினையாகிவிடுமே என்று தவிக்கிறார்.

இவர்களின் இந்தத் தவிப்பு கல்யாணத்தை நோக்கி நகர்கிறதா அல்லது கருக்கலைப்பை நோக்கி நகர்கிறதா என்பதுதான் படத்தின் திரைக்கதை.

வருண் இதற்கு முந்தைய சில படங்களில் சின்னச் சின்னக் கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தவர், இந்தப் படத்தில்தான் நாயகனாக பிரமோஷன் வாங்கியிருக்கிறார்.

நன்றாகவே நடித்திருக்கிறார். குறையில்லை. இள வயது ஆசையில் உந்தப்பட்டு செக்ஸ் தொடர்பான பேச்சுக்களை ரசித்துப் பேசும்போது, அப்பாவைக் கண்டு பயந்து நடுங்கும்போதும் டிபிக்கல் ஒரு மிடில் கிளாஸ் பையனை ஞாபகப்படுத்தியிருக்கிறார்.

நாயகி கர்ப்பமோ என்கிற டென்ஷனில் வீட்டுக்குள் கத்திக் கூப்பாடு போட்டு நடித்திருக்கும் காட்சியில் தனது உச்சப்பட்ச நடிப்புத் திறமையைக் காண்பித்திருக்கிறார்.

தனது வீட்டு ‘பப்பி’ நாயை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று அலையும் காட்சியில் குறையில்லாமல் நடித்திருக்கிறார். இது மட்டுமே வருணுக்கு போதாது.. வேறு வேறு கதைகளில் வேறுவிதமான நடிப்புத் திறனைக் காண்பித்தால், இவருக்கான இடம் உருவாகும்.

நாயகி சம்யுக்த ஹெக்டேதான் படத்திற்கான பேக் டிராப். எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் அழகில்லை. ஆனால் நடிப்பு வருகிறது. அந்த வயதுக்கேற்ற உணர்வைக் காட்டினாலும் ஈர்ப்பில்லாத முகம் என்பதனால் ரசிக்க முடியவில்லை.

இரண்டாவது நாயகனாக கிடைத்த இடங்களில் எல்லாம் அப்ளாஸ் வாங்கிச் செல்கிறார் யோகிபாபு. மாமா வேலை பார்ப்பவரிடம் பேசும்போதும், அடுத்தடுத்து டைமிங்காக வசனத்தை வீசும்போதும் படத்தை எப்போதும் மெல்லிய நகைச்சுவையோடு நகர வைத்திருக்கிறார் யோகிபாபு.

கண்டிப்பான அப்பாவாக மாரிமுத்துவும் அன்பான அம்மாவாக நித்யாவும் தங்கள் பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். பையனைப் பெற்ற அப்பன்களின் நிலைமை என்ன என்பதை மாரிமுத்து, இந்தப் படத்தில் மிக அழகாகக் காட்டியிருக்கிறார்.

மருத்துவமனை காட்சியில் மருத்துவராக வரும் ஆர்.எஸ்.சிவாஜி இரண்டு காட்சிகள் என்றாலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.

தீபக்குமார் பாடியின் ஒளிப்பதிவின் ரகளை, படம் முழுவதும் வியாபித்திருக்கிறது. கால்பந்து மைதானத்தைக் காட்டும்போதும், அதில் நடைபெறும் கால்பந்து விளையாட்டுக் காட்சியிலும் அழகோ அழகு. பாடல் காட்சிகளிலும் மிகுந்த சிரத்தையெடுத்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாராட்டுக்கள். தரண்குமாரின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம். அவ்வளவுதான்.

கல்யாணத்திற்கு முன்பேயே உறவு வைத்துக் கொள்வது எவ்வளவு தவறானது என்பதை போதிக்க வேண்டிய படம்.. அதை மிக எளிதாக, அலட்சியத் தன்மையோடு கையாண்டிருப்பது மட்டுமே இந்தப் படத்தின் மிகப் பெரிய குறை. இயக்குநரை இந்த ஒரு விஷயத்திற்காகவே வன்மையாகக் கண்டிக்கிறோம்.

முதலில் கல்லூரியில் படிக்கிற மாணவனுக்கு இதெல்லாம் தேவையா.. தவறல்லவா.. திருமணத்திற்கு முந்தைய உறவுகள் பாலியல் வேட்கை பட்டியலில்தான் வரும். காதலில் வராது என்பதையெல்லாம் அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டும். அதை மட்டும் இயக்குநர் சொல்லாமல் விட்டுவிட்டார்.

‘பப்பி’ நாய் மருத்துவமனையில் சேர்க்கப்படும் காட்சி ஒட்டு மொத்தமாக படத்தின் தன்மையையே மாற்றியமைத்திருக்கிறது. தன்னுடைய நாயை மையமாக வைத்தே கருவில் வளரும் குழந்தை பற்றிய நல்லெண்ணமே வருணுக்கு வருகிறது என்பது அசட்டுத்தனமான நம்பிக்கை. கேவலமானது.

பக்கத்து வீட்டில், எதிர் வீட்டில்.. தன் உறவினர்கள் வீட்டில் தான் சந்திக்கும் குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் வராத குழந்தை பாசம், தன் வீட்டு நாயைப் பார்த்தவுடன் வருகிறது என்பது சுத்த பைத்தியக்காரத்தனம்.

எல்லாமே நகைச்சுவை என்றால் பின்பு வாழ்க்கையில் எதைத்தான் இன்றைய இளைய சமுதாயம் சீரியஸாக எடுத்துக் கொள்ளும்..!? அடுத்து வரும் இயக்குநர்கள் இதனை மனதில் கொள்ள வேண்டும்.

இந்த ‘பப்பி’ இன்றைய விளையாட்டுத்தனமான இளைஞர்களைப் பற்றிய விளையாட்டான கதை..!

Our Score