full screen background image

அறிவான் – சினிமா விமர்சனம்

அறிவான் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் ஆனந்த் நாக், ஜனனி குணசீலன், பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர், குருமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – எம்.டி.பிலிம்ஸ், தயாரிப்பாளர் – துரை மகாதேவன், எழுத்து, இயக்கம் – எஸ்.அருண் பிரசாத், வெளியீடு – வினயன் வென்ச்சர்ஸ், ஒளிப்பதிவு – யஷ்வந்த் பாலாஜி, இசை – இரா.கார்த்திக், கலை இயக்கம் – சூர்யா, படத் தொகுப்பு – ஆர்.சத்யமூர்த்தி, சண்டை பயிற்சி இயக்கம் – மனோ, பாடல்கள் – இரா.கார்த்திக், உடை வடிவமைப்பு – விஷால் வர்ஷன், ஒலிப்பதிவு – வி.பி.சுகவேந்தன், பத்திரிக்கை தொடர்பு –ஏ.ராஜா.

இப்போதைய தமிழ் சினிமாக்களில் வாராவாரம் வரக் கூடிய படங்களில் ஒன்று காதல்.. இன்னொன்று சஸ்பெஸ் திரில்லர் கொலை சம்பவங்கள்.. போலீஸ் தேடுதல் வேட்டை.. இப்படிப்பட்ட படங்கள்தான் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் இந்த வாரத்திய போலீஸ் ஸ்டோரிதான் இந்த ‘அறிவான்’ திரைப்படம்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் நாக், சின்சியரான ஆபிஸர். நேர்மையானவர். இது ஒன்றே அவர் போலீஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்க தகுதி இல்லாதவர் என்பதற்கான அறிகுறிகள். ஆனாலும், அவர் பணிகள் தொடர அடிக்கடி சஸ்பெண்ட் செய்யப்படுவார். அல்லது இடமாற்றம் செய்யப்படுவார். அப்படித்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அந்த சஸ்பெண்ட் மீளப் பெறப்பட்டு நெய்வேலி போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டராக பதவியேற்கிறார்.

வந்த உடனேயே அவருக்கு வேலையும் ஆரம்பிக்கிறது. அந்தப் பகுதியில் ஒரு படுகொலை நடந்திருக்கிறது. அந்தக் கொலையை விசாரிக்க ஆரம்பிப்பதற்குள் அடுத்து இன்னொரு ஆணும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

இந்த இரண்டு கொலைகளையும் விசாரிக்கும்பொழுது இதன் பின்னணியில் ஒரு பாலியல் பெண் தொழிலாளியும் இருப்பதாக தெரிய வர அவரைப் பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரிக்கிறார்கள். நடந்த கதை முழுவதையும் அந்தப் பெண் சொல்வதற்கு உள்ளாக அவர் ஸ்டேஷனிலேயே படுகொலை செய்யப்படுகிறார்.

போலீஸ் உயர் அதிகாரிகள் கோபப்படுகிறார்கள். எப்படி ஸ்டேஷனக்குள்ளே கொலை நடக்கலாம் என்று விசாரணை மேல் விசாரணை நடக்கிறது. ஆனந்த்நாக்கிற்கு பிரஷரும் அதிகமாக விசாரிக்க வேண்டும் என்று துடிக்கின்ற பொழுது அடுத்து மூன்றாவதாக ஒரு ஆணும் அதே பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

இது தொடர்ச்சியான கொலைகள் என்பதால் நிச்சயம் யாரோ ஒரு சைக்கோதான் செய்திருக்க வேண்டும். திட்டமிட்டு தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் தெரிகிறது.

ஆனந்த் நாக் தற்போது காதலித்து வரும் பெண் ரிப்போர்ட்டரான ஜனனியின் உதவியுடன் இந்த வழக்கில் துப்புத் துலக்க முயல்கிறார். இந்த நேரத்தில் பிரச்சனை அவருடைய காதலியையும் எட்டுகிறது. ஜன்னியையும் கொலை செய்ய முயற்சி நடக்கிறது.

இதையடுத்து வழக்கில் ஒரு சின்ன துப்புகூட மிஸ் ஆகாமல் வைத்து குற்றவாளிகளை தேடி ஓடுகிறார் ஆனந்த நாக். கடைசியாக குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா.. இல்லையா.. யார் அந்த குற்றவாளி… எதற்காக இந்த படுகொலைகள்… என்பதற்கான விடைதான் இந்த ‘அறிவான்’ திரைப்படம்.

இது ஆனந்த் நாக் போலீஸ் டிரஸ்ஸில் நடிக்கும் எத்தனாவது படம் என்று தெரியவில்லை. பெரும்பாலும் அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்திலேயே தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு வருகின்ற வேடங்கள், அவர் காட்டுகின்ற நடிப்பு, அதிகபட்சம் பரவாயில்லை என்ற வகைதான். இதற்கு முந்தைய படங்களில் காட்டிய நடிப்பையே இந்தப் படத்திலும் காட்டியிருக்கிறார்.

படத்தின் ஹீரோ என்பதால் கொஞ்சம் ஹீரோயிசமான காட்சிகளை வைத்து நடத்தி இருக்கிறார்கள். ஆனாலும் போலீஸ் விசாரணையின்பொழுது சக காவலரிடம் கேலி, கிண்டல் செய்து கொண்டு அவரிடமே சகஜமாக பேசிக் கொண்டே வருவதெல்லாம் இந்தப் படுகொலைகளில் இருந்து நம்மை டைவர்ட் செய்துவிட்டன.

இயக்குநர் இதையெல்லாம் ஏன் யோசிக்கவில்லை என்று தெரியவில்லை. ஆனாலும், இந்தப் படத்தில் ஹீரோயிசம் ஒரு அளவோடு நிறுத்தப்பட்டு இருப்பது நமக்கு கொஞ்சம் ஆறுதலை தந்தது.

ஹீரோயின் ஜனனி படத்தில் காதல் டூயட்டுகளெல்லாம் இல்லை என்பதால் வெறும் டாக்கி போர்ஷனிலேயே நடித்திருக்கிறார். அதுவும் அவ்வப்பொழுது வருவதும் திடீரென்று காணாமல் போவதுமாக அவரது கேரக்டர் இருக்க… அவரையும் நம்மால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. கத்தி அவரது கழுத்துக்கு வந்த பின்புதான் மறுபடியும் அவரை நமக்கு திரையில் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.

கடைசியாக குற்றவாளிகளாக கட்டப்படுகின்ற அந்த இருவரின் நடிப்பும் பிரமாதம். அந்த இருவரும் ஏன் இந்த குற்றத்தை செய்தார்கள் என்பதற்கான ஒரு சமூக விழிப்புணர்வுடன் கூடிய அவர்களுடைய கதையை நம் மனதில் பதிவது போல எடுத்திருக்கிறார்கள். அதற்காகவே இயக்குநரை நாம் பாராட்டலாம்.

மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பிர்லா போஸ், கௌரி ஷங்கர், குருமூர்த்தி, வாய்ஸ் ராஜன் போன்றவர்களும் தங்களுடைய நடிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

எஸ்வந்த் பாலாஜியின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளதுதான் என்றாலும் இன்னமும் சிறப்பாக செய்திருக்கலாம். ஆனால் அவ்வப்பொழுது கேமரா கோணங்களை மாற்றி அமைத்தும் கொஞ்சம் ரசிப்பது போல படம் ஆக்கி இருக்கிறார்.

கார்த்திக்கின் இசையில் பின்னணி இசை சற்று பரவாயில்லை என்ற ரகம். சஸ்பென்ஸ், திரில்லர் கதைகளில் பின்னணி இசை மூலமாகவே ரசிகர்களை அந்த டோனிலேயே வைத்திருக்க முடியும். ஆனால், இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங்.

சஸ்பென்ஸ் திரைக்கதை என்பதால் அந்த மூடிலயே நம்மை கொண்டு சென்றிருக்க வேண்டிய இந்தப் படம், கொஞ்சம் கொஞ்சம் விட்டுவிட்டு கொண்டு வருவதற்கு இயக்குநரைத்தான் நாம் குற்றம் சொல்ல வேண்டும். படத்தொகுப்பாளர் தன்னால் முடிந்ததை இங்கே செய்திருக்கிறார்.

படத்தின் இயக்குநரான எஸ்.அருண்பிரசாத் நிஜத்தில் நடந்த ஒரு உண்மை கதையை வைத்து இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். ஆனால் திரைக்கதையை நகர்த்திய விதத்திலும் அதனுடைய ஓட்டத்தில் நடிகர், நடிகைகளும் அவர்களது நடிப்பும் இரண்டும் இணைந்து இருந்தால்தான் சஸ்பென்ஸ், திரில்லர் ரசிகர்களை கவரும்.

ஆனால் இயக்குநர் செய்த சாதாரணமான திரைக்கதையினால் இப்படித்தானே நடக்கப் போகிறது என்று நாம் நினைத்ததெல்லாம் திரையில் நடந்து கொண்டே இருக்கிறது.

இந்தப் படத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் கொலையாளிகளின் கதைதான். அவர்கள் பின்னணியில் இருக்கும் சமூக நோக்கத்தோடு உருவான கதையை மட்டும் சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பாக நடக்கின்ற காட்சிகளும் கொஞ்சம் நம்மை தூண்டிவிட்டு படத்தை பார்க்க வைத்திருக்கிறது.

அந்த வகையில் இயக்குநர் அந்த ஒரு சில காட்சிகளில் செய்த தன்னுடைய இயக்கத் திறமையை படம் முழுவதும் காட்டி இருந்தால் இந்த படம் மிகச் சிறந்த இயக்கத்தை திரைப்படம் முழுக்க செய்திருக்கலாம். ஆக, அதைச் செய்யாத தவறு இயக்குநருடையதுதான்..!

RATING : 3 / 5

Our Score