இந்தப் படத்தை சிம்மமூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெய ராமச்சந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நாயகனாக வி.ஜே.பப்பு நடிக்க, நாயகியாக அனுபமா நடித்துள்ளார். கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாலாஜி கே. சேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு சித்தார்த் படத் தொகுப்பு செய்துள்ளார். எம்.ஃபாஸில் இசையமைத்துள்ள நிலையில், நிர்வாக தயாரிப்பை ஆர்.திருமலை கவனித்துள்ளார். இப்படத்தை அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார்.
பொதுவாக தமிழ்த் திரையுலகில் காதல் படங்களாகவே வந்து கொண்டிருக்கிறது என்று கொஞ்சம் சலிப்பு தட்டினாலும் ஒரு சில திரைப்படங்களில் சொல்லப்படும் காதல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும்.
ஆனால் எதிர்பாராத ஏதோ ஒரு திரைப்படத்தின் மூலம்தான் அது நமக்கு கிடைக்கும். அப்படி ஒரு எதிர்பாராத ஒரு மகிழ்ச்சியை ஒரு அனுபவத்தை கொடுத்தது இந்த ‘மை டியர் டாலி’ என்ற திரைப்படம்.
படத்தின் ஹீரோ பப்பு, ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய டீம் லீடர் நாயகி அனுபமா. தினமும் ஏதாவது ஒரு தவறினை செய்து அனுபவமாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது பப்புவின் வழக்கம். காரணம், அனுபமா மீது அவர் வைத்திருக்கும் ஒன் சைடு லவ்
பப்புவின் அலுவலகத்தில் அவருடன் பணியாற்றுபவர்களுக்கு பப்பு தினமும் வாங்கும் இந்த கல்லடி சொல்லடி அனைத்தும் அனுபமா மீது அவர் கொண்டுள்ள காதல் போதையால் செய்யும் சேட்டை என்பது தெரியும்.
பப்பு ஒரு நாள் தன் மனதில் இருக்கும் தீரா காதலை அனுபமாவிடம் சொல்லிவிட துணியும்போது, அப்போதுதான் அனுபமா அதே நிறுவனத்தில் வேலை செய்யும் டொமேனிக்கை காதலிப்பது பப்புவுக்குத் தெரிய வருகிறது.
மனதுக்குள் தாஜ்மஹால் கட்டியிருந்த நிலையில் அது மொத்தமும் சரிந்து விழுந்ததை தாங்க முடியாமல் பப்பு அந்த நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறொரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்கிறார்.
இப்போது தன்னுடைய அம்மா, அப்பாவின் வற்புறுத்தலால் பெண் பார்ப்பதற்காக ஒரு வீட்டுக்கு செல்கிறார் பப்பு. அங்கே மணமகளாக வரவேற்பது அனுபமாதான்.
அனுபமாவும் தன்னுடைய பெற்றோர்களின் தொல்லை தாங்காமல்தான் இந்த பெண் பார்க்கும் வைபவத்திற்கு சம்மதித்தார் என்பது பப்புவுக்கு அப்போதுதான் தெரிகிறது.
தான் காதலித்த டொமினிக் தன்னை ஏமாற்றிவிட்டதால் காதல் திருமணம் மீது கடுமையான வெறுப்பில் இருக்கும் அனுபமா, தன்னுடைய தாய் தந்தையை சமாளிக்க வேண்டுமே என்பதற்காக ஒரு திட்டத்தை பப்புவிடம் சொல்கிறாள்.
“இப்போது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், ஒரு வருடம் கழித்து டைவர்ஸ் செய்துவிட்டு போய்விடலாம். டைவர்ஸ் ஆனால் பின்பு எப்படியும் என் அம்மாவோ அப்பாவோ என்னை மறுபடியும் திருமணத்திற்கு வற்புறுத்த மாட்டார்கள். நானும் தப்பித்துக் கொள்வேன் நீயும் உனக்கு பிடித்தவளை பார்த்து திருமணம் செய்து கொள்” என்று தனது சதி திட்டத்தை சொல்கிறார் அனுபமா.
இதற்கு ஓகே சொல்லும் பப்பு அனுபமா உடன் திருமணத்தையும் செய்து கொண்டு இன்னமும் கன்னி கழியாது இளைஞனாக அந்த வீட்டிலேயே வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் தாபம் தலைக்கேற ஒரு நாள் மனைவியை கட்டிப்பிடித்து விட அனுபவமா கடும் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
அனுபமா மீது வெறித்தனமான காதலில் இருக்கும் பப்பு, அனுபமா போலவே ஒரு பொம்மையை செய்து தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு அந்த பொம்மையை தன்னுடைய மனைவியாக நினைத்து அதனிடமே பேசி பழகி ஒரு மனநோயாளி போலவே வாழ்ந்து வருகிறார்.
தற்செயலாக இதை பார்த்து விடும் அனுபமாவிற்கு பப்பு தன் மீது எவ்வளவு பாசமும், காதலும் வைத்திருக்கிறான் என்பது அப்போதுதான் தெரிகிறது. இதற்குப் பின் அனுபமா எடுக்கும் முடிவென்ன?.. பிரிந்திருந்த தம்பதியினர் இருவரும் இணைந்தார்களா?.. இல்லையா?.. என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் பப்புவின் ஏமாளியான, அப்பாவியான, பாவமான நடிப்புதான் இந்தப் படத்தை பெரிதும் காப்பாற்றி இருக்கிறது. காதலை சொல்வதற்கே தைரியம் இல்லாமல் தயங்கி, தயங்கி சொல்ல ஆரம்பிக்கும் பப்புவின் பேச்சும், நடிப்பும் அவர் காட்டிய உடல் மொழியும் அழகோ அழகு! பப்பு நடித்த படங்களிலேயே இந்தப் படத்தில்தான் அவருடைய நடிப்பு வெகு சிறப்பாக வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.
தான் காதலித்த பெண் தன்னை காதலிக்காவிட்டாலும் அவளுடைய சந்தோசமே தனக்கு முக்கியம் என்று நினைக்கும் ஒரு உண்மையான காதலனாக பப்பு இந்தப் படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
அனுபமாவை பெண் பார்க்க வரும் காட்சியிலிருந்து இந்தப் படம் ஒரு உயரிய தரத்திற்கு சென்றுள்ளது. அதற்கு காரணம் அதற்கு பின்னான கதையும், திரைக்கதையும், நடிப்பும்தான்.
ஒரு முட்டாள்தனமான காதலன் எப்படி இருப்பான் என்பதற்கு இந்தப் படத்தில் பப்பு வாழ்ந்து காட்டி இருக்கிறார். அந்த பொம்மை வந்தவுடன் அதனுடைய பேசிப் பேசி பழகி பழகி… ஒரு பைத்தியக்காரத்தனமாக தன்னுடைய வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் பப்புவின் அந்த பேச்சும், சிரிப்பும், நடிப்பும் உண்மையாக நம்ம மனதை தொட்டுவிட்டது. “ஐயோ பாவம்…” என்று தியேட்டரில் படம் பார்ப்பவர்களின் அந்த எண்ண ஓட்டம்தான் பப்புவிற்கு பாராட்டாக கிடைத்துள்ளது.
நாயகி அனுபமாவும் தன்னுடைய தேர்ந்த நடிப்பை இதில் காண்பித்திருக்கிறார். ஒரு மிகப் பெரிய அழகுள்ள ஹீரோயினாக இல்லாமல் ஒரு புதுமுகமாக, கேமராவுக்கு ஏற்ற முகமாக, பார்த்தவுடன் அனைவரையும் கவனிக்க வைத்திருக்கும் முகத்தோற்றத்துடன் தன்னுடைய நடிப்பையும் அழகாக காட்டி இருக்கிறார் அனுபமா.
பப்புவின் வாழ்க்கையைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் தான் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு சுயநலத்தோடு தன்னைக் காதலிக்கும் நல்லவனான பப்புவை இப்படி பைத்தியம் என்கின்ற நிலைமைக்கு கொண்டு வந்திருப்பதை உணருகின்ற அந்த காட்சியில் அனுபமாவும் நடிப்பில் நம்மை பாராட்ட வைத்திருக்கிறார்.
அந்த பொம்மையாக அவர் அமர்ந்திருக்கும் அந்தக் காட்சிகளில் எல்லாம் “ஐயோ.. சீக்கிரமா இந்த சஸ்பென்சை உடைப்பாங்க” என்று நம்மை மனதில் நினைக்க வைக்கும் அளவுக்கு பப்புவும், அனுபமாவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். இந்த இருவரின் நடிப்புதான் இந்த படத்தை ஒரு குறிப்பிடத்தக்க காதல் படமாக நமக்கு காட்டி இருக்கிறது.
பப்புவின் நண்பனாக நடித்திருக்கும் ராஜவேலுவும் அவரது மனைவி சுதாவும் சொல்லுகின்ற அவர்களுடைய சொந்த சோக கதையை கேட்ட உடனேயே, நிச்சயம் இந்தப் பொம்மை ஹீரோ வீட்டிலும் இருக்கப் போகிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. ஆனாலும், அதை ரசிக்கும்படியாகவும் இயக்கியிருக்கிறார் இயக்குநர். அதனால் இவர்களது சோகக் கதைகூட நம் மனதை அழுத்தி இருக்கிறது.
மேலும் நாயகனின் அம்மாவாக நடித்த ஆஷா, அப்பாவாக நடித்த ராஜாமணி இருவருமே தோளுக்கு மேல் வளர்ந்த மகனிடம் பணிவாகப் பேசி அவனுக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுக்க நினைக்கும் ஒரு நல்லதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
அதிலும், அவருடைய அம்மா ஆஷா, மகன் வீட்டுக்கு ஆசையாக வந்து அங்கே உள்ளே நடக்கின்ற குழப்பங்களை பார்த்து அவரும் குழம்பிப் போய் தன்னுடைய மகனின் எதிர்காலத்தை எண்ணி விசும்புகின்ற அவருடைய நடிப்பும் அழகு.
நாயகியின் நண்பிகளாக நடித்த தாரா, கீர்த்தனா அவருடைய பழைய காதலன் டொமோனிக் என்று ஒரு சில காட்சிகளின் நடித்தவர்கள்கூட இயக்குநரின் சிறப்பான இயக்கத்தால் சிறப்பாக நடித்து… படத்தின் கதை, திரைக்கதைக்கு மிகவும் உதவி செய்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி ஜி.சேகர், படம் பட்ஜெட் படம் என்பதை உணர்ந்து அதிகமான காட்சிகள் வீட்டுக்குள்ளேயே நடப்பதையும் அந்த பொம்மையை வைத்தே நடப்பதாலும் ஒவ்வொரு முறையும் காட்சி கோணத்தை மாற்றி மாற்றி வைத்து சலிப்பு வராமல் நம்மை காப்பாற்றி இருக்கிறார்.
இசையமைப்பாளர் எம்.பாசில் முடிந்த அளவுக்கு பாடல்கள் மூலம் நம்மைக் கவர நினைத்திருக்கிறார். ஆனால் பின்னணி இசையில் சோகத்தை தூண்டிவிடும் அளவுக்கு இசையமைத்திருக்கிறார். இதற்காகவே இவருக்கும் நமது பாராட்டுக்கள்.
படத் தொகுப்பாளரும் காதல் தோல்வி என்கின்ற உணர்வையும் தாண்டி காதலி மீது காதலன் வைத்திருக்கும் உண்மையான காதலை உணர்த்தும்விதமாக கொஞ்சமும் சோர்வடையாதவண்ணம் வசன போர்ஷன் முழுவதையும் அழகாக படத் தொகுப்பு செய்திருக்கிறார்.
காதல் என்றாலே முட்டாள்தனம் என்பார்கள். ஆனால் திருமணம் செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காகவும், கடைசிவரையிலும் ஒன்றாக வாழ வேண்டும் என்கின்ற எண்ணத்திலும்.. தன்னுடைய எண்ணவோட்டத்திற்கு இணக்கமாக இருப்பவரை காதலனோ, காதலியோ தேடுவதால் இந்தக் காதலை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.
காதலனை புரிந்து கொள்ளாத காதலியும், காதலியை புரிந்து கொள்ளாத காதலனும்… நிறையவே இந்தச் சமூகத்தில் இருக்கிறார்கள். நிறைய பேர் வாழ்ந்து சலித்துப்போய் பிரிந்து இருக்கிறார்கள். அவர்களெல்லாம் என்றேனும் ஒரு நாள் நிச்சயமாக தங்களுடைய தவறை நினைத்து வருத்தப்படுவார்கள்.
அப்படியொரு வருத்தத்தைத்தான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் காதலர்கள் அனைவரும் உணரும் அளவுக்கு மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
சின்ன பட்ஜெட் படம் என்றாலும் அது படத்தின் கதை திரைக்கதையை பாதிக்காத வண்ணம், அனைவரையும் கவரும் வண்ணம் சலிப்பு தட்டாத திரைக்கதையால்… இந்தக் காதல் படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறார் இயக்குநர் அரவிந்தராஜ்.
அவருக்கும் அவரது குழுவினருக்கும் நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த ‘மை டியர் டாலி’ காதலர்களையும், காதலித்தவர்களையும், காதலித்துக் கொண்டிருப்பவர்களையும்… நிச்சயமாக சந்தோஷப்படுத்தும்.
RATING : 3.5 / 5









