full screen background image

அரண்மனை-4 – சினிமா விமர்சனம்

அரண்மனை-4 – சினிமா விமர்சனம்

இயக்குநர் சுந்தர்.சி.-யின் அரண்மனைபட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ளதுதான் இந்த ‘அரண்மனை-4′ திரைப்படம்.

இப்படத்தில் சுந்தர்.சி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, கே.ஜி.எஃப்.ராம், VTV கணேஷ், சேசு, ஜேபி, டெல்லி கணேஷ், சந்தோஷ் குமார், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக் கூட்டமே இணைந்து நடித்துள்ளது.

தயாரிப்பு – Avni Cinemax (P) Ltd & Benz Media PVT LTD, எழுத்து, இயக்கம் – சுந்தர்.சி., வசனம் – வெங்கடேஷ், இசை – ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவு – இசக்கி கிருஷ்ணசாமி, படத் தொகுப்பு :ஃபென்னி ஆலிவர், கலை இயக்கம் – பொன்ராஜ், சண்டைப் பயிற்சி – ராஜசேகர்.K., ஸ்டில்ஸ் – V.ராஜன், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (AIM).

இந்த அரண்மனைபடத்தின் நான்காம் பாகம், மிகப் பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக் கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. முதல் மூன்று  பாகங்கள் போலவே குடும்பங்கள் கவலை மறந்து சிரித்துக் கொண்டாடும்  வகையிலான ஹாரர், காமெடியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.

சென்னையில் வக்கீலாக இருக்கும் சுந்தர்.சி.யின் தங்கையான தமன்னா வீட்டார் ஒப்புதல் இல்லாமல் சந்தோஷ் பிரதாப்பை காதல் திருமணம் செய்து கொண்டு கிராமம் ஒன்றில் மிகப் பெரிய அரண்மனை போன்ற வீட்டில் வாழ்ந்து வருகிறார். தனது அண்ணனுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார் தமன்னா. இப்போது தமன்னாவுக்கு 2 குழந்தைகள்.

இந்த நேரத்தில் அந்த ஊருக்குள் நுழைந்த அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு பேய், இந்த ஊருக்குள் வந்தவுடன் உயிர்த்தெழுகிறது. இந்த பேய் பிறந்த தேதியும், உடலில் ஒரே மாதிரியான மச்சமும் ஒன்று போலவே இருக்கும் சிலரை தேடிப் பிடித்துக் கொலை செய்கிறது.

இந்தக் கொலை வரிசையில் முதலில் சிக்குவது சந்தோஷ் பிரதாப். இவருக்கு  அடுத்து இவரது பெண் குழந்தையைக் கொலை செய்ய அந்தப் பேய் முயற்சிக்கும்போது தடுக்க வந்த தமன்னாவும் இறந்து போகிறார். அந்தப் பெண்  குழந்தை விபத்தில் சிக்கி கோமாவில் ஆழ்ந்துவிடுகிறது.

இப்போது சந்தோஷ் பிரதாப்பின் அப்பாவான டெல்லி கணேஷூம். இவரது பேத்தியான ராசி கண்ணாவும் அந்த வீட்டில் இருக்கின்றனர். மருத்துவரான ராசி கண்ணா தமன்னாவின் மகளை வீட்டில் வைத்துப் பராமரித்து வருகிறார்.

தங்கை இறந்த செய்தி கேட்டு தனது அத்தையான கோவை சரளாவுடன் அந்த வீட்டுக்கு வருகிறார் சுந்தர்.சி. வந்த இடத்தில் அந்த அரண்மனையை விற்றுவிட்டுப் போய்விடலாம் என்று நினைக்கிறார் சுந்தர்.சி.

ஆனால் அதன் பிறகு அங்கு நடக்கும் தொடர்ச்சியான சில மர்மச் செயல்களால், கொலைகளால் அதிர்ச்சியாகும் சுந்தர்.சி., இதன் பின்னணியை கண்டறிய நினைக்கிறார். அதை கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.  அந்த சமயத்தில், ‘பாக்’ என்ற பேயைப் பற்றி தெரிய வருகிறது. அந்த ‘பாக்’ என்ற பேயின் பேயாட்டம்தான் இத்தனை கொலைகளுக்கம் காரணம் என்பதை அறிகிறார் சுந்தர்.சி.

ந்தப் பேயிடமிருந்து தனது மருமகளைக் காப்பாற்ற நினைக்கிறார் சுந்தர்.சி. அது அவரால் முடிந்ததா..? அந்த தீய சக்தியை அழித்தாரா..? அந்த ‘பாக்’ என்ற பேயின் பின்னணி என்ன?.. அது எதற்காக குறிப்பிட்ட மனிதர்களை கொலை செய்ய முயற்சிக்கிறது?.. போன்ற கேள்விகளுக்கான பதில்கள்தான் இந்த ‘அரண்மனை 4’ திரைப்படம்.

இந்த வயதிலும் தானே நாயகனாக நடித்திருக்கும் சுந்தர்.சி.யின் தில்லு வேறு யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம். இந்தப் படத்தில் அவருக்குக் காதல் காட்சிகள் இல்லை என்பது நமக்கு ஒரு ஆறுதல். ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் ஆக்சன் காட்சிகளில் தெறிக்க வைத்திருக்கிறார். நகைச்சுவை காட்சிகளிலும் அனைத்து காமெடி நடிகர்களுக்கும் ஈடு கொடுத்து காமெடியை வரவழைத்திருக்கிறார். தமன்னா தனது பெயரையே தனது மகனுக்கும் வைத்திருப்பதைக் கேட்டு பாசத்தில் கண்ணீர்விடும் காட்சியில் நடிப்பையும் கொட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்..!

இந்த வயதிலும், இத்தனை பெரிய உடம்பை வைத்துக் கொண்டு சண்டை காட்சிகளில் வளைந்து, நெளிந்து, குனிந்து, நிமிர்ந்து, தாவிக் குதித்து உடல் நோவ  வித்தையைக் காட்டியிருக்கும் சுந்தர்.சி.யின் டெடிகேஷனைப் பாராட்டியே ஆக வேண்டும்.

கவர்ச்சிப் பாவையாகவே நடிக்க வைக்கப்படும் தமன்னா இந்தப் படத்தில் சாந்தமாக, பாந்தமாக, குடும்பத் தலைவியாக.. 2 குழந்தைகளுக்கு அம்மாவாக பிரமாதமாக நடித்திருக்கிறார். குழந்தைகள் மீதான பாசம், பதற்றம், கோபம், அழுகை என்று அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் அழகாக்க் காண்பித்திருக்கிறார்.

அதோடு பேயாக, மாறி தனது குழந்தைகளைக் காப்பாற்ற கூடவே இருக்கும் காட்சிகளில் தனது ஆக்ரோஷத்தையும் காட்டியிருக்கிறார். பெண்ணாக இருப்பதைவிடவும், பேயாக இருக்கும் தமன்னாதான் ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் நடித்திருக்கிறார்.

இன்னொரு நாயகியான ராஷி கண்ணா படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கும், ரசிகர்களுக்காகவும் நடிக்க வைக்கப்பட்டுள்ளார். மிக அதிகமான குளோஸப் காட்சிகளில் ராசியின் நடிப்பும் அந்தந்தக் காட்சிகளை பெரிதும் ரசிக்க வைக்கிறது.

படத்தின் முடிவில் டைட்டில் கார்டு போடும்போது இடம் பெறும் புரோமோ பாடலில் தமன்னாவும், ராஷி கண்னாவும் ஆடும் ஆட்டம்தான் அவர்களுடைய ரசிகர்களுக்கானது.

இது காமெடி கலந்த பேய் படம் என்பதைக் காட்டும்வகையில் கோவை சரளா, யோகிபாபு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், சேஷூ சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சிகள் சிரிக்க வைத்திருக்கின்றன. ஆனாலும் டெல்லி கணேஷ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் உவ்வே’ ரகம்தான்..!

வில்லனாக நடித்திருக்கும் கருடா ராமின் தோற்றமும், மேக்கப்பும் அவரது கதாப்பாத்திரத்தை உயர்த்தியிருக்கிறது. மேலும் ஒரு சில காட்சிகளே ஆனாலும் ஜென்டில்மேனாக வலம் வந்து செத்துப் போகும் சந்தோஷ் பிரதாப், ஜெயப்பிரகாஷ், கான்ஸ்டபிள் சிங்கம் புலி, சஞ்சய், டி,எஸ்.பி. கே.எஸ்.ரவிக்குமார் என்று ஏனைய நடிகர்களும் சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எப்போதும் தன்னுடைய படங்களின் ஹைலைட்டான பாடல் காட்சியில் தலையைக் காட்டும் தயாரிப்பாளர் குஷ்பூ, இந்தப் படத்திலும் கிளைமாக்ஸ் பாடல் காட்சியில் இடையழகி சிம்ரனுடன் சேர்ந்து மாரியாத்தாவுக்காக ஆட்டம் போட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கிச்சா தன்னுடைய கேமிரா மூலமாக பிரம்மாண்டத்தை படமாக்கியிருக்கிறார். காடுகள், அரண்மனை வீடு, அம்மன் பாடல் காட்சி, பிரம்மாண்டமான அம்மன் சிலைக்குள் நடக்கும் சண்டைகளையெல்லாம் படமாக்கியவிதம் அருமை. கடின உழைப்பைக் கொட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படத்தின் பிரம்மாண்டத்துக்கு உயிர் கொடுத்திருப்பது கலை  இயக்குநரின் கை வண்ணம்தான். கிளைமாக்ஸில் வரும் பிரம்மாண்டமான அம்மன் மற்றும் அசுரன் சிலைகளை வடிவமைத்து உருவாக்கியிருப்பதே பெரிய சாதனைதான். அந்தச் சிலைகளுக்குள் நடக்கும் சண்டை காட்சிகள்தான் படத்தின் ஹைலைட்டே. இதை சாத்தியமாக்கிய கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் படத்திற்குக் கிடைத்திருக்கும் பலமாக அமைந்திருக்கிறது. கிளைமாக்ஸில் வரும் அம்மன் பாடல் ஆக்ரோஷமாகவும், பக்தி மயமாகவும் அமைந்திருக்கிறது. தமன்னாவின் அழகான, அமைதியான வாழ்க்கையை சொல்லும் பாடலும் கேட்க இனிமையாக உள்ளது. பின்னணி இசை காதை உறுத்தாமல் திகில், சஸ்பென்ஸை நோக்கிப் பயணித்திருக்கிறது.

முழுக்க, முழுக்க பொழுதுபோக்கு என்ற மேஜிக்கை மட்டுமே முன் வைத்து இந்த அரண்மனை-4’ படத்தை உருவாக்கியிருக்கிறார் சுந்தர்.சி. முந்தைய மூன்று ‘அரண்மனை’ படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக இல்லாமல், இதிலும் ஒரு புது மாதிரியான கதை. திரைக்கதையாக்கம், பட மேக்கிங் என்று வித்தியாசப்படுத்தி ‘அரண்மனை’ சீரியஸ் பட ரசிகர்களுக்குக் கொண்டாட்டத்தை திரும்பவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.

இயக்குநர் சுந்தர்.சி எப்போதும்போல் என் படங்களில் லாஜிக் பார்க்க வேண்டாம் என்பதை சொல்லாமல் சொல்வதுபோல திரைக்கதையை அமைத்து நம்மை யோசிக்கவேவிடாத அளவுக்கு திரைக்கதையில் வேகத்தைக் கூட்டி படத்தை  முடித்திருக்கிறார்.

படத்தின் துவக்கம் முதல் இறுதிவரையிலும் இடையிடையே நகைச்சுவை காட்சிகளை வைத்து ரசிகர்களை சிரிக்கவும் வைத்து படத்தைப் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் சுந்தர்.சி.

இந்தக் கோடைக்கால விடுமுறையில் குடும்பமாக சேர்ந்து பார்க்கக் கூடிய படமாக இந்த அரண்மனை-4’ படம் அமைந்திருக்கிறது. படக் குழுவினர் அனைவருக்கும் நமது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..!

RATING : 4 / 5

 

Our Score