full screen background image

குரங்கு பெடல் – சினிமா விமர்சனம்

குரங்கு பெடல் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை மாண்டேஜ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

எஸ்.ஆர்.ஜெ. புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சஞ்சய் ஜெயக்குமார் மற்றும் கத கேளு எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பு செய்துள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயனின் புரொடெக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வழங்கியிருக்கிறது.

இந்தப் படத்தில் காளி வெங்கட், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், சாவித்திரி, தக்சனா, செல்லா, குபேரன், மற்றும் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், சாய்கணேஷ், ரதீஷ் ஆகிய சிறுவர்களும் நடித்துள்ளனர்.

சுமீ பாஸ்கரன் தனது சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் இயக்குநரின் கற்பனையை அப்படியே திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

உயிரோட்டமான பாடல்கள் மற்றும் சிறப்பான பின்னணி இசையின் மூலம் மக்களை கவர்ந்த ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். ஜிப்ரானின் பின்னணி இசை, மற்றும் பாடல்கள் இப்படத்திற்கு முதுகெலும்பாக அமைந்திருக்கிறது. இயக்குநர் பிரம்மா, என்.டி.ராஜ்குமார் ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கிறார்கள்.

காலா’, ‘பரியேறும் பெருமாள்’, ‘சார்பட்டா பரம்பரை’,  குதிரை வால்’, ‘ஜல்சா’(ஹிந்தி) ஆகிய படங்களுக்கு ஒலிக்கலவை செய்த அந்தோணி பி.ஜெ.ரூபனின் ஒலிக் கலவை இந்தப் படத்தை உலகத் தரத்துக்கு கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.

தீரன் அதிகாரம் ஒன்று’, ‘டெடி’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘வட்டம்’ ஆகிய படங்களுக்கு படத் தொகுப்பு செய்த சிவா நந்தீஸ்வரனின் மிக நேர்த்தியான படத் தொகுப்பு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

 ‘வெந்து தணிந்தது காடு’, ‘ஜெய் பீம்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘சாணிக்காயிதம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ படங்களுக்கு வண்ணக்கலவை செய்த பாலாஜி கோபால் இத்திரைப்படத்துக்கும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்.

எழுத்தாளரும், இயக்குநருமான ராசி அழகப்பனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு பிரபாகர் சண்முகம் மற்றும் கமலக்கண்ணன் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

மதுபான கடை’,  ‘வட்டம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநரான கமலக்கண்ணன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

1980-களின் காலக்கட்டத்தில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் காவேரிக் கரையோர பகுதிகளை களமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கத்தேரி’ என்கிற கிராமத்தில் சைக்கிள் ஓட்டத் தெரியாத ஒரு தகப்பனுக்கும், சைக்கிள் ஓட்டிப் பழகுவதில் ஆர்வமாக இருக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான கதையை இத்திரைப்படம் விவரிக்கிறது.

ஈரோடு பக்கமிருக்கும் கத்தேரி கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் காளி வெங்கட்டின் மகன் மாரியப்பன். 5-ம் வகுப்புப் படிக்கிறான். பள்ளி இறுதித் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டவுடன் தனது  சகாக்களுடன் சைக்கிள் ஓட்டிப் பழக நினைக்கிறான்.

காளி வெங்கட்டுக்கு சைக்கிள் ஓட்டுவதென்பதே பிடிக்காத விஷயம். அவருக்கு ஊரில் ‘நடராஜா பஸ் சர்வீஸ்’ என்று பட்டப் பெயரே வைத்திருக்கிறார்கள். ஆனாலும், சின்னப் பையன்களின் உலகம் தனியானதாச்சே..!

தன் நண்பர்கள் குழாமுடன் ஆளுக்கு 10 காசு, 20 காசு போட்டு ஒரு மணி நேரத்திற்கு 50 காசு என்று பேசி சைக்கிளை வாடகைக்கு எடுத்து தங்களது உயரத்திற்கு சீட்டில் அமர்ந்து சைக்கிளை ஓட்ட முடியாததால் குரங்கு பெடலாவது ஓட்டக் கத்துக் கொள்கிறான் மாரியப்பன்.

சைக்கிள் கடை வைத்திருக்கும் மிலிட்டிரி என்ற பிரசன்னாவிடம் ஒரு குடிகாரன் தனது சைக்கிளை அடகு வைத்துவிட்டு குடிப்பதற்காகக் காசு வாங்கிக் கொண்டு போகிறான். அன்றைக்குப் பார்த்து அந்த சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு போகும் மாரியப்பனால், சரியான நேரத்திற்கு சைக்கிளைவிட முடியாமல் போகிறது.

இதனால் பயந்து போகும் மாரியப்பன் பக்கத்து ஊரில் இருக்கும் தனது அக்காவின் வீட்டுக்கு ஓடிப் போகிறான். இங்கே ஊருக்குள் அவனைக் காணாமல் சைக்கிள் கடைக்காரர், அவனது அம்மா, அப்பா அனைவரும் தேடுகிறார்கள்.

இதன் முடிவு என்ன..? சைக்கிளையும், மாரியப்பனையும் கண்டுபிடித்தார்களா..? இல்லையா..? என்பதுதான் இந்தச் சின்ன, அழகான படத்தின் திரைக்கதை.

படத்தில் நடித்த அனைவருமே மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏழ்மையான குடும்பஸ்தராக இருந்தாலும் லாட்டரி சீட்டு, தாயக்கட்டு ஆட்டத்தில் காசு பார்க்க நினைக்கும் அப்பாவி குணத்தோடு, காளி வெங்கட்டின் இயல்பான நடிப்பு அவருக்கே பெருமை சேர்க்கிறது.

இவருடைய மனைவியாக நடித்திருக்கும் சரஸ்வதி அந்தப் பகுதி பெண்களின் முக ஜாடையிலும், பேச்சுவழக்கிலும் மின்னுகிறார்.

மிலிட்டரிமேனாக நடித்திருக்கும் பிரசன்னா இருக்கமான முகத்துடன் படம் நெடுகிலும் வலம் வந்து, ஜென்சனுடன் சரி நிகராக மல்லுக்கட்டும் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். அதே போல் குடிகாரனாகவே வாழ்ந்திருக்கிறார் ஜென்சன்.  அவ்வப்போது அவர் பேசும் வசனங்கள்தான் தியேட்டரை தெறிக்க விடுகிறது.

சின்னப் பையன்களாக நடித்த அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளன. அதிலும் மாரியப்பனாக நடித்தப் பையனும், நீதிமானாக நடித்தவனும் தங்களுடைய கேரக்டரை பதிவு செய்திருக்கிறார்கள்.

1980-களின் காலக்கட்டம் என்பதால் நாகரீகச் சுவடே தெரியாத இடங்களில் மட்டுமே படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். சுமீ பாஸ்கரனின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. அழகான லொக்கேஷன்களை சூழல் கெடாத வண்ணம் படமாக்கியிருக்கிறார். சைக்கிள் ஓட்டிப் பழகும் இடங்களின் தேர்வு சிறப்பு.

ஜிப்ரானின் இசை, படத்திற்குக் கிடைத்த பலம் என்றே சொல்ல்லாம். இருக்கும் பாடல்களும் கதையையும் சேர்த்து நகர்த்தியிருக்கின்றன. தோல் பாவைக் கூத்தின் வழியே சொல்லப்படும் காளி வெங்கட்டின் கதையும் சுவாரஸ்யம்.

எல்லா சிறுவர்களுக்குள்ளும் இருக்கும் ‘சைக்கிள்’ ஓட்ட வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற அவர்கள் படும் பாட்டினையும், இதனால் அவர்களது குடும்பத்திற்குள் நடக்கும் சலசலப்புகள். நண்பர்களுக்குள் ஏற்படும் சண்டை, அதன் பிறகு அவர்களிடையே உருவாகும் பிணைப்பு, அப்பா – மகன் இடையிலான பந்தம் ஆகியவையையும் அழகான சிறுகதை போலவே சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர்.

“நல்ல படம் வரலியே.. குடும்பத்தோட பார்க்குற மாதிரி ஒண்ணுகூட வரலியே”ன்னு புலம்பாமல் குடும்பத்தோட இந்தப் படத்தைப் போய் பாருங்க மக்களே..!

RATING : 4 / 5

Our Score