இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படம் வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இன்னும் பல்வேறு வெளிநாடுகளிலும் இந்தியாவில் கேரளா போன்ற மாநிலங்களிலும் முழுமையாகத் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியானால் வியாபாரத்தில் பாதிப்பு உண்டாகும் என்று தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, ‘அண்ணாத்த’ படத்தினை 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப் போவதாகப் படக் குழு முடிவு செய்திருப்பதாகவும் திடீரென்று சில செய்திகள் வெளியாகின.
அந்தச் சமயத்தில் கொரோனா தாக்குதல் குறைந்து, தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவிகித மக்கள் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்தச் செய்திகளினால் ‘அண்ணாத்த’ படத்தின் வெளியீடு பற்றி ரசிகர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் தற்போது இந்த ‘அண்ணாத்த’ படம் தொடர்பான அத்தனை வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
இந்தப் படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடலை இன்று மாலை வெளியிடவுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதற்கான பிரத்யேக போஸ்டர் ஒன்றை நேற்றைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் போஸ்டரில் உள்ள தகவலின்படி ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.