full screen background image

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் கமல்ஹாசன்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் வெற்றி மாறனின் படத்தில் நடிக்கப் போவதாக நடிகை ஸ்ரீப்ரியா டூரிங் டாக்கீஸ் யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

நடிகர் விக்ரம் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோருடன் இணைந்து ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு கமலின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ‘பாபநாசம்-2’ படத்தில் அவர் நடிக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில் இயக்குநர் வெற்றிமாறனும் கமல்ஹாசனை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அந்தச் சந்திப்பு பற்றி வெற்றி மாறன் பேசும்போது “அது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று மட்டுமே கூறியிருந்தார். ஆனால், இப்போது வெற்றி மாறனின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப் போவது உறுதியாகியுள்ளது.

டூரிங் டாக்கீஸ் யூடியுப் தளத்திற்கு நடிகையும், மக்கள் நீதி மையம் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான நடிகை ஸ்ரீப்ரியா நீண்ட பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியின்போது. “உங்களுடைய தயாரிப்பில் ‘பாபநாசம்-2’ படம் எப்போது ரெடியாகும்..?” என்று கேட்கப்பட்டபோது, “இப்போது ‘பாபநாசம்-2’ படம் பண்ணும் அளவுக்கு கமல் சாருக்கு நேரமில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் என பிசியாக இருக்கிறார். மேலும் ‘விக்ரம்’ மற்றும்  வெற்றிமாறன்  இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதெல்லாம் முடிந்தால்தான் ‘பாபநாசம்-2’ பற்றி யோசிக்கவே முடியும்…” என்று பதில் அளித்தார் நடிகை ஸ்ரீப்ரியா.

கமல் – வெற்றி மாறன் கூட்டணி இணையும் படத்தினை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சூர்யாவின் நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை முடித்துவிட்டு,  அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Our Score