DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.
இத்திரைப்படத்தை D.சபரிஷ், S.A.சங்கமித்ரா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இதற்கு முன்பு இந்த நிறுவனம் G.V.பிரகாஷ், கவுதம் மேனன் நடித்த ‘செல்ஃபி’ திரைப்படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தில் குணாநிதி கதையின் நாயகனாக நடிக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத், சரத் அப்பானி, காளி வெங்கட், இவர்களுடன் ஒரு நாயும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது.
மேலும், சௌந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
எழுத்து & இயக்கம் – S.P.சக்திவேல், ஒளிப்பதிவு – S.பாண்டிகுமார், இசை – அஜீஷ், கலை இயக்கம் – P.A.ஆனந்த், படத் தொகுப்பு – சான் லோகேஷ், சண்டை இயக்கம் – தினேஷ் காசி, ஒலி வடிவம் –S.அழகியகூத்தன், சுரேன்.G, ஒலி கலவை – சுரேன்.G, நடனம் – அசார், தாஸ்தா, கூடுதல் கலை இயக்கம் – தினேஷ் மோகன், ஒப்பனை – ஷேக் பாஷா, விலங்கு பயிற்சி – செந்து மோகன், ஆடை –T.பாண்டியன், ஆடை வடிவமைப்பு – ஜோஸ்வா மாக்ஸ்வெல் J, பாடல்கள் – மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன், கிராபிக்ஸ் – அஜக்ஸ் மீடியா டெக், கலரிஸ்ட் – ரங்கா, வண்ணம் – பிக்சல் லைட் ஸ்டூடியோ, தயாரிப்பு நிர்வாகம் – S.முருகன், தயாரிப்பு மேற்பார்வை – அருண் விச்சு, தயாரிப்பு மேலாளர் – R.K.சேது, உதவி தயாரிப்பு மேலாளர் – சேட்டு போல்ட், பத்திரிக்கை தொடர்பு –R.குமரேசன், விளம்பர வடிவமைப்பு – தண்டோரா, விளம்பர ஸ்டில்ஸ் – R.மனோ, கமலேஷ் சத்தியன், நிர்வாக தயாரிப்பு – D.சங்கர் பாலாஜி, தயாரிப்பாளர் – D.சபரீஷ், S.A.சங்கமித்ரா, தயாரிப்பு நிறுவனம் – DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS.
இந்தப் படத்தை S.P.சக்திவேல் இயக்கியிருக்கிறார். இவர் ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியவர். மேலும் சென்ற ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘குட் நைட்’ திரைப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை Sakthi Film Factory நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது.
தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப் பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்சன் டிராமாவாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஒரு அரசியல்வாதி குழுவுக்கும், தமிழகத்தின் பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர்.
அலங்கு – என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்ததாகும். அத்துடன் ராஜராஜ சோழனின் படையில் போர் நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும், ஆய்வாளர்களும் கூறுகின்றனர். ஆனால் காலப்போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும், மருவி வேறு இன பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இக்கதையின் அடிப்படை தன்மைக்கும், நினைவூட்டலுக்கும் இந்த பெயர் மிகவும் பொருந்தி இருப்பதால் இத்திரைப்படத்துக்கு ‘அலங்கு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் முற்றிலும் ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி உள்ளது. தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள்வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்தக் கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்துதான் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் S.P.சக்திவேல்.
நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப் பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே திரைக்கதையின் பிரதானம்.
கோவை பகுதியில் இருக்கும் ஆனைக்கட்டி மலைப் பகுதியில் ஒரு சிற்றூரில் தன்னுடைய தாய், தங்கையுடன் வசிக்கிறார் ‘தர்மர்’ என்ற குணாநிதி.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த குணாநிதி, கோயம்புத்தூரில் ஒரு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்து வருகிறார். கல்லூரியில் தான் சார்ந்த சமூகத்தைச் சொல்லி பலரும் கிண்டல் செய்ததால் எழுந்த மோதலின் விளைவாக கல்லூரியிலிருந்து ஒரு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
குணாநிதியின் அம்மா மிகவும் கஷ்டப்பட்டு ஒரு சின்ன நிலத்தில் வாழைத் தோட்டம் போட்டு பராமரித்து அதில்தான் குடும்பத்தை நடத்தி வருகிறார். இதற்காகவே நிறைய கடன்களும் வாங்கி இருக்கிறார். அந்த கடனுக்கு ஈடாக தன்னுடைய வீட்டு பத்திரத்தையும் கொடுத்துவிட்டார். வாங்கிய கடனுக்கு வட்டிக்கூட கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் அம்மா. கடன் கொடுத்தவரும் வீடு தேடி வந்து “எப்படியாவது வட்டியை கட்டுங்கள். இல்லாவிட்டால் வீட்டை என் பெயருக்கு மாற்றிக் கொடுங்கள்” என்று மிரட்டி விட்டுப் போகிறார்.
இந்த நேரத்தில் ஊருக்கு வந்த ஹீரோ உள்ளூரில் வேலைக்கு போகிறார். போன இடத்தில் ஒரு நாய் அவருக்கு கிடைக்கிறது அந்த நாயை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால் நாயை வீட்டுக்கு கூட்டி வந்து, அந்த நாய்க்கு காளியம்மாள் என்று பெயர் வைத்து சோறு போட்டு வளர்த்து வருகிறார்.
இந்த நேரத்தில் குடும்பத்தின் பணத் தேவைக்காக கேரளாவிற்கு வேலைக்கு செல்கிறார் குணாநிதி. கேரளாவில் ஒரு பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருக்கும் செம்பன் வினோத்தின் தோட்டத்தில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்கிறார் குணாநிதி.
அங்கேயும் பணம் கமிஷன் அடிக்கிறார்கள் என்று அங்கே மேனேஜராக இருக்கும் சரத் அப்பானியிடமும் கொஞ்சம் சண்டை போட்டு நிர்வாகத்துடன் முரண்பட்டு நிற்கிறார்.
இந்த நேரத்தில் செம்பன் வினோத்தின் ஒரே மகளுக்கு பிறந்த நாள் விழா நடக்கிறது. அன்றைய தினம் ஒரு நாய் அவருடைய மகளை கடித்துவிட அந்தக் கோபத்தில் ஊரில் இருக்க அத்தனை நாய்களையும் கொலை செய்யும்படி செம்பன் வினோத் தன்னுடைய அடியாட்களுக்கு உத்தரவு போடுகிறார்.
இதையடுத்து நகரில் பல இடங்களில் நாய்கள் வெட்டப்பட்டு செத்து கிடைக்கின்றன. அதேநேரம் குணாநிதியின் நாயான காளி, காணாமல் போய்விட்டதால் தன்னுடைய காளியம்மாளை தேடி ஓடி வருகிறார் குணாநிதி.
அதே நேரம் காளியம்மாளையும் கொலை செய்வதற்காக சரத் அப்பாணியின் ஆட்கள் பிடித்து வைத்திருக்கிறார்கள். காளியை மீட்பதற்காக அவர்களுடன் சண்டைக்குப் போகிறார் குணாநிதி. இந்த சண்டையில் எதிர்பாராதவிதமாக சரத் அப்பாணியின் கை துண்டாகிறது.
இதனால் வெறியாகும் சரத் அப்பாணி, குணாநிதி மற்றும் அவருடைய கூட்டாளிகளை கொலை செய்ய தன்னுடைய அடியார்களை அனுப்புகிறார். அந்த அடியாட்களிடமிருந்து குணாநிதியும், அவரது கூட்டாளிகளும் தப்பித்து ஓடுகிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் குணாநிதிக்கு இதுதான் மெயின் ஹீரோவாக முதல் திரைப்படம். ஏற்கனவே செல்பி திரைப்படத்தில் ஒரு துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர். புதுமுகம் என்பதால் நம்ம அவருடைய நடிப்பில் குற்றம் குறை எதுவும் சொல்லத் தேவையில்லை. ஆனால், அதிகப்பட்சம் தேவையான அளவுக்கு தன்னுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார். அதுவும் சோகக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் அவருடைய நடிப்பினை பார்க்க முடிந்திருக்கிறது.
அவருடைய கூட்டாளிகளாக நடித்த இருவருமே மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் ரேகாவின் நடிப்பு பாராட்டக் கூடியதுதான். அதோடு அந்த பகுதியின் மக்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள். அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
செம்பன் வினோத் மலையாளத்தில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவருக்கு இதில் மிகப் பெரிய அளவுக்கு நடிப்பு இல்லை என்றாலும் அவர் ஒரு வில்லனா அல்லது குணச்சித்திர நடிகரா என்று கேள்வி வரக் கூடிய அளவுக்கு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
அவருடைய மனைவியாக கொற்றவை ஒரு அமைதியான.. அதே சமயம் அழகான… அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய தோற்றத்தில் நடித்திருக்கிறார். “கடைசியா எப்போ பாவ மன்னிப்பு கேட்க சர்ச்சுக்கு போனீங்க..?” என்று கொற்றவை கேட்கும் ஒரு கேள்வி படம் பார்க்கும் நம்முடைய கேள்விதான். ஆனால், இவரை வைத்து திரைக்கதையில் இன்னும் ஒரு மிகப் பெரிய ட்ராமாவை செய்திருக்கலாம். இயக்குநர் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை.
சரத் அப்பாணி தன்னுடைய உச்சபட்ச நடிப்பை காண்பித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு வில்லத்தனத்தை வெறித்தனமாக இதில் காட்டி இருக்கிறார். காளி வெங்கட்டின் பண்பட்ட நடிப்பும் படத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். போலீஸ் ஸ்டேஷனில் தனது அக்காவுக்காக வந்து பணிந்து பேசும் காளி வெங்கட்டின் அந்த நடிப்புக்கு ஒரு சல்யூட்டே வைக்கலாம்.
மனிதர்களைவிடவும் மிக எளிதாக, இயல்பாக விலங்குகளை நடிக்க வைத்துவிட முடியும் என்பது நமது இயக்குநர்களின் கணிப்பு. கருத்து. இந்தக் கருத்து இந்தப் படத்திலும் உண்மையாகியிருக்கிறது. காளி என்ற அந்த வெள்ளை நிற நாயும் சில காட்சிகளில், சில ஷாட்களில் நடிப்பென்று இல்லாமல், தெரியாமல் தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறது. வெல்டன்.
படத்தின் ஹீரோ என்று சொல்லக் கூடிய அளவுக்கு படத்தில் ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார், தன்னுடைய முழு திறமையை காட்டி உழைத்திருக்கிறார். அட்டகாசமான ஒரு ஒளிப்பதிவு. கேரளா, தமிழ்நாடு பார்டரில் அந்த அவர்கள் பயணம் செய்யும் நீர்வீழ்ச்சி, ஆறு, காடுகள் மலைப் பிரதேசங்கள் என்று.. அவ்வளவு அழகாக லொகேஷன்களில் நம்முடைய கண்களை கவரும்வகையில் ஷாட்களை வைத்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
படத்தின் மூன்று பாடல்களுமே கேட்கக் கூடிய அளவுக்கு மிகவும் எளிமையான வார்த்தைகளில் காதுகளில் நுழையம்படியாக இசை ஒலித்திருக்கிறது. பின்னணி இசையை கொஞ்சம் அதிகமாகவே அடித்து ஆடியிருக்கிறார்கள். அதுவும் வில்லன் கோஷ்டி துரத்துகின்ற காட்சிகள் எல்லாம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் கண்களை திரையைவிட்டு அகல விடாமல் பார்க்கும் அளவுக்கு பின்னாடி இசை போட்டுத் தாளித்திருக்கிறார் இசையமைப்பாளர்.
துரத்துதல் காட்சிகள், சண்டை காட்சிகள், மற்றும் பாடல் காட்சிகளில் படத் தொகுப்பாளரின் பங்கு மிகவும் சிறப்பு. அவருடைய சிறப்பான படத் தொகுப்பினால்தான் படத்தின் இரண்டாம் பாதியில் பல காட்சிகளை நம்மால் கோர்வையாக பார்க்க முடிந்திருக்கிறது. அவருக்கு நமது பாராட்டுக்கள்.
கேரளாவில் எப்போதோ நடந்த ஒரு உண்மை கதையை மையமாக வைத்துதான் இந்த படத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார்.
ஒரு நாய்க்கும், அதன் எஜமானனுக்கும் இடையிலான பாசத்தை படம் சொல்லப் போகிறது என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் முதல் பாகத்தில் அந்த சென்டிமெண்ட் கதையை கொஞ்சமாக வைத்திருந்துவிட்டு, இரண்டாம் பாகத்தில் தேடுதல் வேட்டையாக.. தன்னுடைய எதிரிகளை தேடி கொலை செய்யும் முயற்சியில் வில்லன் ஈடுபடுகிறார் என்பதாக ஒரு கதைக்குள் போய்விட்டதால் கதையின் மைய நீரோட்டமே அடிபட்டுப் போனது.
படத்தில் முழுக்க, முழுக்க ஒரு நாய்க்கும் அதன் எஜமானனுக்கும் இருக்கின்ற பாசத்தை காட்டி இருக்கலாம். படத்தின் பிற்பகுதியில் “அந்த நாயை ஏன் கொலை செய்கிறீர்கள்..?”, “நாய்களினால் என்ன பிரச்சனை..?”, “நாயும் ஒரு ஜீவன்தான். அதற்கும் உயிர் உண்டு. அதற்கும் ஒரு வாழ்க்கை முறை உண்டு. அதற்கும் விருப்பு வெறுப்புகள் உண்டு. அதை மனிதர்களாகிய ஆறறிவு படைத்த மனிதர்கள் நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்…” என்பது மாதிரியான வசனங்களை இயக்குநர் இரண்டாம் பாதியில் நிச்சயம் வைத்திருக்க வேண்டும்.
அப்படி வைத்திருந்தால் இந்தப் படம் நிச்சயமாக சொல்ல வந்த விஷயத்தை மிக சரியாக சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாம்.
ஆனாலும் ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால், சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களை வைத்து ஒரு சிறந்த கதை உருவாக்கத்தில் சிறப்பான இயக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் நிச்சயமாக ஒரு முறை பார்ப்பதற்குத் தகுதியான திரைப்படம்தான்.
RATING : 3 / 5









