full screen background image

திரு.மாணிக்கம் – சினிமா விமர்சனம்

திரு.மாணிக்கம் – சினிமா விமர்சனம்

இப்படத்தை தயாரிப்பாளர்கள் G.P.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யா, இந்தப் படத்தில் நாயகன் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

முக்கியமான கதாப்பாத்திரங்களில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள்.

இவர்களுடன் வடிவுக்கரசி, தம்பி ராமையாஇளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன்இரவின் நிழல் சந்துரு.. ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.

ராஷ்மி ராக்கெட்என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குநரான நந்தா பெரியசாமி, இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா’ சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.

சீதா ராமம்படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவர்ந்திழுக்கிறார்.

பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

தமிழககேரள எல்லையில் இருக்கும் குமுளியில், நாயகன் சமுத்திரக்கனி லாட்டரி சீட்டுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு சிறிய திருடனாக இருந்து ஒரு நல்ல மனிதரால் திசை திருப்பப்பட்டு வாழ்க்கையில் இன்றைக்கு ஒரு கௌரவமான நிலைமைக்கு வந்திருக்கும் சமுத்திரக்கனி, இனி வரும் காலங்களில் அதிகப்பட்சம் நேர்மையான மனிதனாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

குமுளியில் இருந்து இடுக்கி செல்லும் வழியில் உள்ள ‘நெடுங்கண்டம்’ என்ற ஊரைச் சேர்ந்தவர் பாரதிராஜா. அவரது மகளைக் கட்டிக் கொடுத்த இடத்தில் வரதட்சணையாக கூடுதல் பணம் வேண்டும் என்று கேட்டு மகளை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் பாரதிராஜாவின் சம்மந்திவீட்டார்.

தன் மகளை மறுபடியும் மாப்பிள்ளை வீட்டாருடன் சேர்த்து வைக்க பாரதிராஜாவுக்கு பணம் தேவையாக இருக்கிறது. ஆனால் அந்த மலைக் கிராமத்தில் ஒரு சின்னஞ் சிறிய வீட்டில் குடியிருக்கும் பாரதிராஜாவால் பணம் புரட்ட முடியவில்லை.

இந்த நேரத்தில் குமுளி பஸ் ஸ்டாண்டிற்கு வந்தவர் தற்செயலாக சமுத்திரக்கனியின் லாட்டரி கடையை பார்த்துவிட்டு அங்கு லாட்டரி சீட்டை கேட்டு வாங்குகிறார்.

ஆனால் அவர் வைத்திருந்த 500 ரூபாய் பணம் தொலைந்துவிட்டதால் “பணம் தொலைந்துவிட்டது. கையில் பணம் இல்லை.. நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் பாரதிராஜா. அப்போதும் அவருக்கு பயணச் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைக்கிறார் சமுத்திரக்கனி.

அடுத்த நாள் லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெறுகிறது. அதில் பாரதிராஜா தேர்வு செய்து வைத்திருந்த சீட்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழுகிறது. இந்த நேரத்தில் சமுத்திரக்கனிக்கும் அவருடைய குடும்பத்தில் பணத் தேவைகள் நிறைய இருக்கின்றன.

அவருடைய இரண்டாவது மகள் பேச்சு சரியாக வராமல் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை பெற பணம் தேவை. இன்னொரு பக்கம் குடும்பத் தேவைகளுக்காக லோக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார் சமுத்திரகனியின் மனைவி. அந்தப் பணத்தை வட்டியோடு கொடுக்க வேண்டி இருக்கிறது. மனைவியின் தம்பி துபாய்க்கு வேலை செல்வதற்காக துடித்துக் கொண்டிருக்கிறார். அவனுக்கு விசா எடுக்க பணம் கட்டி அனுப்பி வைக்க வேண்டி இருக்கிறது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் ந்த ஒன்றரை கோடி ரூபாய் பணம் தன்னுடைய குடும்பத்திற்கும் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று சமுத்திரக்கனியின் மனைவி அனன்யா நினைக்கிறார். ஆனால், சமுத்திரக்கனியோ நேற்று பாரதிராஜா வந்து அந்த சீட்டை தேர்வு செய்து வைத்திருப்பதால், அந்தப் பரிசுப் பணம் நிச்சயம் அவருக்குத்தான் போக வேண்டும் என்று சொல்லி பாரதிராஜாவிடம் கொடுக்கப் போவதாக சொல்கிறார்.

இதை ஏற்காத அனன்யாவின் தம்பி, காவல்துறையின் சைபர் கிரைம் உதவியோடு சமுத்திரக்கனி போகும் இடத்தை தெரிந்து கொண்டு அவரைப் பின் தொடர்ந்து செல்கிறார். அதே சமயம்  தன்னுடைய 6 லட்ச ரூபாய் கடனை இதன் மூலம் அடைத்து விடலாம் என்று நினைத்த லோக்கல் சப் இன்ஸ்பெக்டர், ஜீப்பை எடுத்துக்கொண்டு சமுத்திரக்கனியை விரட்டி செல்கிறார்.

கடைசியில் என்ன நடந்தது?.. பாரதிராஜாவை சமுத்திரக்கனி சந்தித்தாரா?.. அந்த பரிசு சீட்டை அவரிடம் ஒப்படைத்தாரா? அல்லது வழியிலேயே இவர்கள் சமுத்திரக்கனி மடக்கிவிட்டார்களா?.. என்ன நடந்தது?.. என்பதுதான் இந்த திரு.மாணிக்கம் படத்தின் சுவையான திரைக்கதை.

படம் முழுவதும் வியாபித்து தன்னுடைய சிறந்த நடிப்பினால் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார் நடிகர் சமுத்திரக்கனி. ஆதங்கம் ஆற்றாமை தவிப்பு,  தடுமாற்றம் என பலவித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கிறார்.

திரு.மாணிக்கம் என்கின்ற அந்த நேர்மையான, அப்பழுக்கற்ற, மனிதத் தன்மையுள்ள அந்தக் கதாபாத்திரத்தை தனது மிக இயல்பான நடிப்பினால் மெருகேற்றி கடைசி வரையிலும் இப்படி ஒரு மனிதன் நம்முடைய வீட்டில் இருக்கக் கூடாதா…? நம்முடைய பக்கத்தில் இருக்க கூடாதா?.. என்ற எண்ணத்தை நமக்குள் தோற்றுவித்து விட்டார் சமுத்திரக்கனி.

மகள் மீது பெரும் பாசம் கொண்டு அவள் கேட்பதையெல்லாம் வாங்கி கொடுத்துவிட்டு அவருடைய பேச்சு திறன் எப்படியாவது வெளிப்பட்டு விட வேண்டும். அவளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து விட வேண்டும் என்று அவர் துடிக்கின்ற துடிப்பும், தனது குடும்பத்தினர் தன்னை போனில் அழைக்கும்போதெல்லாம் பரிசு சீட்டை பாரதிராஜாவிடம் கொடுக்க வேண்டும் என்று அவர் என்னுடைய எண்ணத்தை திரும்பத் திரும்ப சொல்கின்ற விதமும் அட்டகாசம்.

போனில் கடைசி முயற்சியாக பிளாக் மெயில் செய்யும்விதமாக தன்னை அழைத்து பேசும் இரண்டாவது மகளிடம் தான் எப்படி வளர்ந்து இந்த நிலைமைக்கு வந்தேன் என்ற அந்தக் கதையை அவர் சொல்லுகின்ற பொழுது நிச்சயமாக நமக்கும் கண்களில் கண்ணீர் கசிகிறது.

உண்மையில் அவருடைய மனநிலை மாற்றத்திற்கான காரணத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதை தனது தேர்ந்தடிப்பில் நமக்குப் புரிய வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி.

இன்னொரு பக்கம் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கும் அனன்யா, படம் முழுவதும் வரும் அளவுக்கு ஒரு வெயிட்டான மனைவி கதாப்பத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவி, அதே நேரம்  குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும்விதமாக குடும்பத்திற்காக அவர் உழைக்கின்ற உழைப்பு குடும்பத்திற்காக சமையல் தொழில் செய்து பணம் சம்பாதிக்கும் திறன் அதோடு எப்படியாவது இந்த பரிசுத் தொகையை வைத்து தனது பொருளாதார பிரச்சனைகளில் இருந்து தப்பித்து விடலாம் என்பதற்காக அவர் கணவரை போட்டு டார்ச்சர் செய்வது, பிளாக் மெயில் செய்வது.. என்று ஒரு இயல்பான ஒரு மனைவி என்ன செய்வாரோ அதைத்தான் தனது நடிப்பில் செய்து காட்டியிருக்கிறார் அனன்யா.

கணவரிடம் போனில் “பிள்ளைகளோட சாகப் போகிறேன்..” என்று சொல்லி அவரை மிரட்டுவது போல் நடித்து, “திரும்பி வந்துருங்கபேசி முடிச்சுக்கலாம்..” என்று அவர் கெஞ்சுகின்ற கஞ்சாலும் உண்மையா ஒரு மனைவி என்ன மாதிரியான மன நிலையில் இருப்பாரோ, அதையே அன்ன்யா இந்தப் படத்தில் மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் அனன்யா.

மகளுக்காக தன்னுடைய உடல் இயலாமையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய குடும்பத்தை நினைத்து கண்ணீர் விடும் அந்த வயதான கேரக்டரை பாரதிராஜாவை தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது.

மிகவும் அழகான நடிப்பு. இயல்பான நடிப்பு. அவருடைய குனிந்த நடையும், கண்களில் குவிந்திருக்கும் கனிந்த பார்வையும், அந்த லாட்டரி சீட்டு கையில் கிடைத்த பின்பு அவர் காட்டும் மகிழ்ச்சியும் சிறப்பு. நிச்சயம் பாரதிராஜாவுக்கு இந்தப் படமும் ஒரு மிகச் சிறந்த நடிப்பை காட்டி இருக்கின்ற படமாக அமைந்துள்ளது.

பாரதிராஜாவின் மனைவியாக நடித்த வடிவுக்கரசி எப்போதும் போலவே அந்தக் கதையின் பாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார் அவருடைய மகளாக நடித்தவரும் அந்தக் கடைசி சில காட்சிகளில் நம்மையும் கொஞ்சம் பதற வைத்திருக்கிறார்.

லண்டன் ரிட்டர்ன் பார்ட்டியாக பஸ்ஸூக்குள் அலப்பறை செய்யும் தம்பி ராமையா, அந்த நேரத்து நம்முடைய மன இறுக்கத்தைப் போக்கி, சற்று ரிலாக்ஸ் மூடுக்கு நம்மைக் கொண்டு வருகிறார்.

சித்தப்பாவாக நடித்திருக்கும் இளவரசு மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்,  மைத்துனராக நடித்தவர்.. சின்னக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் கவனிக்க வைத்திருக்கும் கருணாகரன் என்று மற்றவர்களும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

படம் தமிழக கேரள எல்லையில் நடக்கிறது என்பதால் படம் ஜில்லென்றுதான் இருக்கிறது. குமுளியிலிருந்து இடுக்கி செல்லும் சாலையில் இருக்கின்ற கொள்ளை அழகை டிரோன் ஷரட்டுகளில் மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார். அதே சமய பாடல் காட்சிகளில் மிக அற்புதம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார்.

பொம்மக்காபாடல் நிச்சயமாக இந்த வருடத்தின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாக தேர்வு செய்யப்படும். மற்றொரு பாடல் சோகக் காட்சிகளில் கதையை நகர்த்தும்விதமாக அமைந்து திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறது.

இத்திரைப்படத்தில் நடித்த முப்பதுக்கும் மேற்பட்ட அனைத்து  நடிகர்களும் அந்தந்த வட்டார மொழியோடுதங்களது சொந்த குரலிலேயே பேசியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வெறும் வசன உச்சரிப்புகளோடு இல்லாமல் ஆன்மாவின் குரலாக பேசியிருப்பது பார்வையாளர்களை படத்தோடு ஒன்ற வைக்கிறது.

ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான படைப்பாக இந்த திரு.மாணிக்கம் திரைப்படம் உருவாகியுள்ளது.

மனிதர்களின் தேவை எப்போதும் கணக்கில் அடங்காதது. இதுவும் பத்தாது இதுவும் பத்தாது இதுவும் பத்தாது என்று எது கிடைத்தாலும் இன்னும் ஏங்கத்தான் செய்யும். இப்படி ஒரு ஏக்கம் மனிதர்களுக்குள் நிறையவே உண்டு. மனிதனுக்கும் விலங்குகளுக்குமான வித்தியாசம் இதுதான்.

ஆனால் அவரவரின் தேவைக்கு ஏற்ப வசதி வாய்ப்புகளும், பொருளாதார பலமும் அவர்களிடம் இருப்பதில்லை. இதனால் எப்படியாவது, எதையாவது செய்தாவது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். அது எல்லாமே தவறு என்பதை இந்தப் படம் சுட்டி காட்டுகிறது.

அதோடு ஒரு மனிதனின் நேர்மை என்பது அவனுடைய குணத்தில் இயல்பாகவே இருந்திருக்க வேண்டும். அந்த நேர்மை அவனிடம் இருக்கும்பட்சத்தில் அவனுக்கு எந்த ஒரு பிரச்சனை இல்லாமல், நிம்மதியான ஒரு மனம் அமையும். நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

அந்த மன நிம்மதிக்காகவாவது அவன் குறைந்தபட்சம்.. இல்லை… அதிகப்பட்சம் நல்லவனாக இருந்தாக வேண்டும் என்பதை இந்த சமுத்திரக்கனியின் கேரக்டர் மூலமாக சொல்லி இருக்கிறார் இயக்குர் ந்தா பெரியசாமி.

எப்பேர்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும், எத்தனை சலசலப்புகள் வந்தாலும், தன்னுடைய குடும்பத்தினரே எதிர்த்தாலும், உண்மையாக இருந்தால்.. அதனால் கிடைக்கப் போகின்ற பலன் தன் குடும்பத்திற்கும் கிடைக்கும் என்பதை சமுத்திரக்கனி சொல்வதுபோல கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குர்.

அந்த வகையில் இந்தப் படம் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் அத்தனை பேர் மனதிலும் ஒரு அச்சாணியாக விழுந்து, நிச்சயம் அவர்களின் மனதை மடைமாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த வருடத்தின் மிகச் சிறந்த திரைப்படங்களில் இந்தப் படமும் தன்னை இணைத்துக் கொள்கிறது என்பதுதான் இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய ஒரு பெருமை.

படத்தை இயக்கிய நந்தா பெரியசாமிக்கும், அவரது படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..!

RATING : 4 / 5

Our Score