full screen background image

அஜீத்-விஜய் இருவரும் இளைஞர்களை கெடுக்குறாங்க – தயாரிப்பாளர் கே.ராஜனின் ஆவேசம்..!

அஜீத்-விஜய் இருவரும் இளைஞர்களை கெடுக்குறாங்க – தயாரிப்பாளர் கே.ராஜனின் ஆவேசம்..!

தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான கே.ராஜன் நாவன்மை மிக்கவர். இவரிடம் சினிமா துறையைப் பற்றிப் பேசச் சொன்னால்.. வெண்கலக் கடைக்குள் யானை புகுந்த கதைதான் நடக்கும்..! 

இன்று மாலை நடந்த ‘வீரன் முத்துராக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என்று அனைவரையும் கொத்துப் புரோட்டா போட்டுவிட்டார்..!

“வடசென்னையில் இருந்து வடபழனிக்கு வர்றதுக்கு ஒன்றரை நாள் ஆச்சு..” என்று சாதாரணமாகவே நகைச்சுவையாக ஆரம்பித்தவர் போகப் போக டிராக் மாறி வந்திருந்தவர்களுக்கு கைதட்ட நிறையவே வாய்ப்புகளை வாரி வழங்கினார்.

“இப்பல்லாம் ஒரு படத்துல நடிச்சு முடிச்சவுடனேயே அடுத்தப் படத்துக்கு 3 கோடி கேக்குறான் ஹீரோ..! எவன் வீட்டுக் காசு..? தூக்கிக் கொடுக்குறது நாமதான். நம்ம தயாரிப்பாளர்கள்தான். இதோ இருக்கானே தேனப்பன். இவனும்தான்.. இவன் காசு தர மாட்டான்.. ஆனா ரேட்டை ஏத்திவிட்டுட்டு வந்திருவான்.. எவனோ ஒருத்தன் மாட்டிக்கிட்டு அல்லாடுவான்.. இப்படியும் நாலு பேரு இருக்கானுக.. அப்புறம் எப்படி சினிமா உருப்படும்..?”

“ஏதோ பங்ஷனுக்கு இன்விடேஷன் அடிக்கிறானுக.. படுக்குற பாய் மாதிரி பெரிசா இருக்கு.. ஒரு பக்கம் ஹீரோவும், இன்னொரு பக்கம் ஹீரோயினும் படுத்துக்கலாம். அவங்களை தவிர வேற யாரையும் படுக்கவும் விடமாட்டானுக.. எதுக்கு.. வெட்டிச் செலவுதானே..?”

“இந்த சந்தானம்னு ஒரு பய இருக்கான்.. வாயைத் தொறந்த வக்கிரமா பேசித் தொலைக்குறான்.. ஏண்டா உன் வீட்லதான் அம்மா, அக்கா, தங்கச்சி, பொண்டாட்டிக இருக்காங்கள்ல.. கொஞ்சமாச்சும் யோசிக்க வேணாம்.. நம்ம வீட்ல பாத்ரூமை வீட்டுக்குள்ளதான் வைச்சிருக்கோம். அதுக்கு கதவும் இருக்கு. யார் குளிச்சாலும் கதவைச் சாத்திட்டுத்தான் குளிப்போம்.. அப்படியொரு நாகரிகம் இருக்குல்ல.. தியேட்டருக்கு குடும்பத்தோட படம் பார்க்க வந்தா இப்படி சனியன் வக்கிரமாவே பேசித் தொலைச்சா எப்படிய்யா கேக்குறது..? என் அம்மா பாப்பாங்களா..? அக்கா, தங்கச்சி பார்ப்பாங்களா..? பேத்திகளை பார்க்கச் சொல்ல முடியுமா..? உன் வீட்ல இப்படித்தான் பேசுவீன்னா.. அதை உன் வீட்ல மட்டும் வைச்சுக்க.. அதை எதுக்கு தெருவுல கொண்டு வர்ற..? நமக்குன்னு ஒரு பண்பாடு, கலாச்சாரம் இருக்கு.. அதை அழிக்கக் கூடாது..! அழிக்கணும்னு நினைக்கிறவன்தான் அழிஞ்சு போவான்..!”

“ஏதோ ஒரு நடிகையோட உதட்டை அத்தனை குளோஸப்புல காட்டினாய்யா.. அப்படியே நாய் மாதிரி உதட்டைக் கடிச்சிட்டு அதையும் காட்டிட்டாங்க ‘குருதிப்புனல்’ படத்துல.. இப்படித்தானா வக்கிரத்தைக் காட்டுறது..?”

“இப்பல்லாம் எல்லா படத்துலேயும் டாஸ்மாக் சீனை காட்டுறாய்ங்க.. இந்த அஜீத், விஜய் படத்துல பாருங்க.. அநியாயத்துக்கு குடிக்கிறதையே காட்டுறாய்ங்க.. இப்போ வைகோகூட ஒரு இடத்துல பேசியிருக்காரு. ஈரோட்டுல ஒரு பார்ல பத்தாம் கிளாஸ் படிக்கிற பொண்ணுக வந்து உக்காந்து பிராந்தி குடிச்சாங்களாம்.. என்ன அநியாயம்டா இது..? எல்லாத்துக்கும் யார் காரணம்..? முன்னாடி தலைவர் எம்ஜிஆர் இருந்தார். ஊர் ஊரா போயி ரசிகர்களை சந்திச்சு தலைவராகி ஆட்சியைப் பிடித்தார். இப்போ வீட்டுக்குள்ள உக்காந்துக்கி்ட்டே ரசிகர்களை வளர்க்குறானுக.. தல தலன்றானுக.. அஜீத் தலைமுடியை வளர்த்தா இவனுகளும் அதே மாதிரி வளர்க்குறானுக.. உன் படத்துல இப்படி டாஸ்மாக் சீனா.. குடிக்கிற மாதிரியே வைச்சா.. உன்னை பாலோ பண்ற ரசிகனும் இதைத்தான செய்வான்..? காலேஜ் முடிச்சவன் நேரா டாஸ்மாக் கடைக்கு போறான்னா நாடு எப்படிய்யா உருப்படும்..? அஜீத், விஜய் படங்கள்லதான் இது அதிகமா இருக்கு.. முன்னாடி ‘சுப்ரமணியபுரம்’, ‘வெண்ணிலா கபடி குழு’ மாதிரி நல்ல படங்கள் வந்துச்சு.. இப்போ அப்படியா வருது.. என்ன எழவு எடுக்குறானுக..? இவங்களால தமிழகத்து வளரும் சமுதாயமும் கெட்டுக் குட்டிச் சுவராப் போச்சு.. “

“இதோட போட்டி போடுது டிவி.. மாமனரா விஷம் வைச்சு சாகடிக்கணுமா..? டிவி சீரியல் பாரு. அதுல சொல்லித் தர்றாங்க.. மாமியார்கூட சண்டை போட்டு அவளைத் துரத்தணுமா..? டிவி சீரியலை பாரு.. என்னங்கடா அநியாயமா இருக்கு..?”

“போன வருஷம் வந்த 160 படங்கள்ல 12  படத்துல மட்டும்தான் போட்ட காசு வந்துச்சு.. மீதி அம்புட்டும் நஷ்டம். போன மாசம் வெளியான 2 படங்களும் விநியோகஸ்தர்களுக்கு பயங்கர நஷ்டமாம்.. இப்பத்தான் சொல்றாங்க.. பெரிய பட்ஜெட் படங்களோட லட்சணம் இப்படித்தான்.. படம் எடுத்தத் தயாரிப்பாளர் நிக்குறான் தெருக்கோடில.. “

– இப்படி சரவெடியாய் வெடித்ததில் கொஞ்சம் நியாயமான பேச்சுக்கள் இருக்கின்றன என்றாலும் அதை கொஞ்சம் நாகரிகமாக சொல்லக் கூடாதா..? இப்படி அனைவரையும் அவன், இவன் என்றே பேசிவிட்டு திரையுலகம்.. பண்பாடு, கலாச்சாரம் என்று கிளாஸ் எடுப்பதெல்லாம் எந்த வகையில் நியாயம் மிஸ்டர் ராஜன் ஸார்..?

Our Score