வருகிறது காரமான ஆந்திரா மெஸ்..!

வருகிறது காரமான ஆந்திரா மெஸ்..!

காரசாரமாக ஆந்திராவின் சமையல் போலவே தயாராகியிருக்கிறது ஆந்திரா மெஸ் படம். பிரஸ் மீட் மேடையில் அனைவருமே புதுமுகங்களாக இருக்க.. சிவப்பு கலரில் மீசை வடிவில் ஆந்திரா மெஸ் மிரட்டலாய் காட்சியளித்தது..

பல விளம்பரப் படங்களை எடுத்த ஷோபேட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஜெய் என்னும் இயக்குநர் இயக்கியிருக்கிறார். இவர் நிறைய விளம்பரப் படங்களை இயக்கியிருக்கிறாராம். 

படம் பாதி ஷூட்டிங் முடிந்த நிலையிலேயே பத்திரிகையாளர்களைச் சந்திக்க வந்துவிட்டார்கள். இதனால் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் “இப்பத்தான ஆரம்பிச்சிருக்கோம்.. படம் வரட்டும் பாருங்க.. படத்தைப் பார்த்திட்டு சொல்லுங்க..” என்றெல்லாம் சொல்லி ஜகா வாங்கினார்கள்..

ஆனால் டிரெயிலர் ஏதோவொரு வித்தியாசத்தைக் காட்டுவதை உணர முடிந்தது. “இதுல வர்ற லொகேஷன், டிரெஸ், சீன்ஸ், கேரக்டர்ஸ் எல்லாமே புதிதுதான்.. ஆனால் இவர்களது வாழ்க்கைக் கதை மட்டும், நாமளே தினம் தினம் நேர்ல பார்க்குற கதை..” என்றார் இயக்குநர் ஜெய்.

“கதை சொல்லும் முறையையும், இதுல கொஞ்சம் வித்தியாசமா செஞ்சிருக்கோம்..” என்றார் இயக்குநர். “ஸ்நூக்கர் விளையாட்டில் மேஜையில் உள்ள பந்தை குறி வைத்து தள்ளும்போது அது வேறொரு பந்தின் மீது மோதி சம்பந்தமே இல்லாத இன்னொரு பந்தை இடித்தவிட்டு. இது இன்னொரு பந்தின் மீது பட்டு.. அந்த மூன்றாவது பந்து ஓடிச் சென்று பள்ளத்தில் விழுமோ அது மாதிரியான திரைக்கதையாடல்தான் இந்தப் படத்தில் உள்ளது..” என்றார் இயக்குநர்.

கலை ஓவியர் ஸ்ரீதர் இந்தப் படத்தில் முதன்முதலாக நடித்திருக்கிறார். இவரை ‘புதிய தளபதி’ என்ற பட்டப் பெயருடன் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.. மனிதர் தான் நடிகனான கதையை காமெடியாகவே பேசி சிரிக்க வைத்தார்.. “இன்னும் கொஞ்ச நாள் ஷூட்டிங் இருக்கு. மொத்தமா முடிச்சிட்டு மிச்சத்தை சொல்றேன்..” என்றார்.. 

ஏற்கெனவே ‘உ’ படத்தில்தான் ஒரு கேரக்டர் ‘வெடிகுண்டு’ போடுவதை போல காண்பித்து டிரெயிலரை முடித்தார்கள்.. இப்போது இந்தப் படத்தின் டிரெயிலரின் முடிவிலும் அது போலவே ஒரு காட்சி.. என்னதான் ஆச்சு தமிழ்ச் சினிமாவுக்கு..? பின்நவீனத்துவம் என்பது இதுதானோ..?

Our Score