full screen background image

அகடு – சினிமா விமர்சனம்

அகடு – சினிமா விமர்சனம்

இந்த ‘அகடு’ படத்தை சௌந்தர்யன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விடியல் ராஜு தயாரித்திருக்கிறார்.

ந்தப் படத்தில் ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு, சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபிலன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத் தொகுப்பை தியாகு செய்திருக்கிறார். புதுமுக இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.

பாலியல் குற்றங்களுக்கு எதிரான கதையை இந்த ‘அகடு’ திரைப்படம் பேசுகிறது. இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறத்தல்கள், உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை.

தன் மனைவி மற்றும் 14 வயது மகளுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறார் டாக்டர் விஜய் ஆனந்த். அதே போல் வேறு நான்கு இளைஞர்களும் அதே நாளில் சுற்றுலாவுக்கு கொடைக்கானலுக்கு வர இரு தரப்பினரும் ஒரே விடுதியில் தங்கி நண்பர்களாகிறார்கள்.

ஒரு நாள் காலை டாக்டரின் மகள் காணாமல் போக, அந்த நான்கு இளைஞர்களில் ஒருவரும் அதே நேரத்தில் காணாமல் போகிறார். அவர்தான் மகளை கடத்தி இருப்பார் என்று டாக்டர் நினைக்கிறார்.

காவல் துறையில் புகார் கொடுக்க இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் விசாரணையில் இறங்குகிறார். முரட்டுத்தனமான குணம் கொண்ட காட்டிலாகா அதிகாரி ஒருவர் மீதும் மற்றும் காட்டுக்குள் பதுங்கி இருந்து சதி வேலைகள் செய்யும் சிலர் மீதும் அவரது முதல் சந்தேகப் பார்வை விழுகிறது.

இந்நிலையில் காணாமல் போன நண்பர் இறந்துவிடுகிறார். நண்பரை கொலை செய்தது யார்..? காணாமல் போன குழந்தை என்ன ஆனது என்பதைத்தான் சஸ்பென்ஸ், திரில்லராக முடிந்த அளவுக்குச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

படத்திலேயே நமக்கு பரிச்சயமான முகம் ஜான் விஜய்தான். எப்போதும்போலவே  ஓவர் ஆக்டிங்கை தங்கு தடையில்லாமல் வழங்கியிருக்கிறார். மற்றவர்களுக்கும் சேர்த்தே நடிப்பைக் காண்பித்துவிட்டார் போலும்..!

அந்த முரட்டுப் பார்வையும், முழி பிதுங்கிய வித்தையும், கொஞ்சம் அடிக்கடி மாறும் மாடுலேஷனுடன் நடித்திருக்கிறார். இவர் கடைசிவரையிலும் நல்லவரா.. கெட்டவரா என்கிற பட்டிமன்றத்திலேயே நம்மை விட்டு வைத்திருப்பதுதான் நமக்கான கெட்ட நேரம்.

கேரக்டர் ஸ்கெட்ச் வித்தியாசம் தேவைதான். ஆனால் அதற்காக எப்போதும் ஒரு கேரட்டை கையில் வைத்துக் மென்று கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் என்று காட்டியதெல்லாம் ரொம்பவே ஓவர்தான்.

பல சீரியல்களில் நடித்திருக்கும் விஜய் ஆனந்த் இதில் மருத்துவராக நடித்திருக்கிறார். இவரது மனைவியான அஞ்சலி நாயர் ஆரம்பத்தில் அடக்கி வாசித்திருந்தாலும் கிளைமாக்சில் மட்டுமே தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மகளாக வரும் ரவீனா தாஹாவும் தன்னுடைய நடிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார்.

முரட்டுத்தனமான காட்டிலாகா அதிகாரியாக வரும் நடிகர் அந்த முரட்டுப் பார்வையிலேயே நம்மை மிரட்டுகிறார். காணாமல் போகும் நண்பரான சித்தார்த்  மேனன்தான் படத்தின் ஹீரோவாக இருக்கக் கூடும் என்று நான் நினைத்து முடிப்பதற்குள்ளாக காணாமல் போய் கடைசியில் இறந்தும்போய் விடுகிறார். நம்மால் உச்சுக் கொட்டத்தான் முடிந்தது.

நண்பர்களின் நடிப்பு கொஞ்சம், கொஞ்சம் செயற்கைத்தனமாக இருந்தாலும் முடிந்தவரை சமாளித்துள்ளனர். இயக்குநர் இன்னும் சிறப்பாக இயங்கி நடிப்பை வரவழைத்திருக்கலாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஒளிப்பதிவாளர் சாம்ராட்டின் ஒளிப்பதிவு கொடைக்கானல் அழகை பட்ஜெட்டுக்குள் காட்சிப்படுத்தியுள்ளது. தியாகுவின் படத் தொகுப்பு இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஜான் சிவநேசனின் பாடல்களைவிட, பின்னணி இசை பரவாயில்லை என்று சொல்லலாம்.

குழந்தை காணாமல் போனவுடன் பார்வையாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட வேண்டும் என்று நினைத்துதான் திரைக்கதையில் லோக்கல் ரவுடிகள், சக நண்பர்கள், அந்த காட்டிலாகா அதிகாரி என்று மூவர் மீதும் சந்தேகம் வரும்படி காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

சிறிய படமாக இருந்தாலும் படத்தின் ஓட்டம் மெதுவாக இருப்பது படத்தின் மிகப் பெரிய குறை. ஆனால் இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்பீடு காட்டுகிறது.

போதைப் பழக்கம் எவ்வளவு அழிவை தரும் என்பதை முடிந்த அளவு சோர்வு இல்லாமல் சொல்லியுள்ள இயக்குநருக்கு வாழ்த்துகள்.

ஆனால், எதிர்பாராத கிளைமாக்ஸ். இந்தக் கிளைமாக்ஸில் குற்றவாளி சட்டென்று இறந்துவிட.. இனிமேல் இன்ஸ்பெக்டர் மட்டும் என்ன செய்ய முடியும்.. ஏன் இந்தத் திடீர் முடிவு.. என்பது புரியவில்லை.

எப்போதும் படத்தின் முடிவில் சொல்ல வந்ததைப் புரிய வைத்துவிட வேண்டும். அது இங்கே மிஸ்ஸிங்..!

போதை மருந்தின் பின் விளைவுகளைப் பற்றிச் சொன்ன ஒரே காரணத்திற்காக மட்டும் இயக்குநருக்கு ஒரு பாராட்டு..!

RATINGS : 2.5 / 5

Our Score