தமிழ் சினிமா எண்ணற்ற திறமைமிக்க கலைஞர்களின் புகலிடமாய் இருந்துள்ளது. கேரளத்திலிருந்து மற்றுமொரு திறமைமிக்க நடிகையை பெற்றுள்ளது தமிழ் சினிமா.
இயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ‘ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ஸ்ருதி பாலா. ‘மிர்ச்சி’ செந்தில் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘ரோபோ’ சங்கரும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த்து பற்றி பேசிய நடிகை ஸ்ருதி பாலா, “விளம்பர படங்கள் மற்றும் மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தன. எனது முதல் படம் நல்ல கதையம்சத்துடன் சிறந்த இயக்குநரின் அறிமுகமாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கேற்றாற்போல் இந்தப் பட வாய்ப்பு கிடைத்த்து..
நல்ல கதை.. சிறந்த இயக்குநர். இரண்டுமே ஒன்று சேர கிடைத்தவுடன் யாராவது விடுவார்களா..? இயக்குனர் வெங்கடேஷ் சாரை பார்த்தவுடன், ‘அங்காடி தெரு’ படத்தில் படுபயங்கரமாய் வரும் ஆளா என்று ஆச்சரியமாக இருந்த்து.
இந்த ‘ரொம்ப நல்லவன்டா நீ’ நகைச்சுவை கலந்த திரைப்படம். இதில் எனது கதாபாத்திரம் ஒரு தைரியமான படித்த பெண். ‘மிர்ச்சி’ செந்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். துளியும் அலட்டல் இல்லாத மனிதர். இருப்பினும், ஷூட்டிங் சமயத்தில் செந்தில், ‘ரோபோ’ சங்கர் இருவரும் என்னை வம்பு செய்து கொண்டே இருப்பார்கள்.
சிறு வயது முதலே பாரம்பரிய நடனங்களை கற்று வந்ததால் நடிப்பது சுலபமாய் அமைந்தது. இருந்தாலும் முதல் படம் என்பதால் எனக்குள் ஒரு தயக்கமும், நடுக்கமும், தடுமாற்றமும் இருந்தது. ஏ.வெங்கடேஷ் ஸார், மிகப் பொறுமையாக எனக்கு நடிப்பை கற்றுக் கொடுத்தார்.
இந்த ஒரு படம் என்றில்லை.. தொடர்ச்சியாக படங்களை செய்வேன் என்ற நம்பிக்கையை இதுவரையில் நான் நடித்த இந்தப் படத்தின் காட்சிகளே எனக்குச் சொல்கின்றன. தமிழ் ரசிகர்கள் நிச்சயம் என்னை ஏற்றுக் கொண்டு எனக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் நம்புகிறேன்..” என்றார் நடிகை ஸ்ருதி பாலா.












