அடுத்த வாரம் பிப்ரவரி 20-ம் தேதி ரிலீஸாகவிருக்கும் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு திரையுலகில் நிறையவே இருக்கிறது.
வித்தியாசமான தலைப்புடன் இருப்பதால் நிச்சயம் கதை புதிதாக இருக்கும் என்று முதலில் நம்பினார்கள். இப்போது இந்தப் படத்தை வாங்கி விநியோகிப்பது உதயநிதி ஸ்டாலின் என்றவுடன் இன்னமும் அழுத்தமாக தங்களது பார்வையை இப்படத்தின் மீது செலுத்தியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்தப் படத்தில் நகுல், ‘அட்டகத்தி’ தினேஷ், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்திருக்கின்றனர். வி.எல்.எஸ். ராக் சினிமா நிறுவனத்தின் சார்பில் வி.சந்திரன் தயாரித்திருக்கிறார். ராம்பிரகாஷ் ராயப்பா என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
மேடையில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இந்தப் படத்தின் டாக்கி போர்ஷன் முழுவதும் ஷூட் எடுத்து முடித்த பின்புதான் பாடல்களை உருவாக்கினோம். படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல், ‘அலை வரிசை மாற்ற தொலை இயக்கி அழுத்தவும்.., தலையெழுத்தை மாற்ற உன் மூளையை அழுத்தவும்…’ என்று எழுதினேன்.
எதையெல்லாம் மாற்ற எதையெல்லாம் அழுத்த வேண்டும் என்ற ரீதியில் எழுதப்பட்டிருந்த அந்தப் பாடலை இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா சரியாக புரிந்து கொண்டு படமாக்கியிருந்தார். அதேபோல் தயாரிப்பாளர் சந்திரனும் இந்தப் படத்தை எப்படி திரையங்குகளுக்கு கொண்டு செல்வது என்பதற்கு இந்தப் பாடலையே உதாரணமாகக் கொண்டு உதயநிதி ஸ்டாலினின் நம்பரை அழுத்தியிருக்கிறார்…” என்றார் பொருத்தமாக..!
படத்தின் ஹீரோக்களில் ஒருவரான தினேஷ் வேறொரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்த்தால் வரவில்லை. அவருக்குப் பதிலாக நகுலே பேசினார். நடிகை பிந்து மாதவி பேசும்போது, “இந்த ஒரு வருஷமாத்தான் எந்த கன்ட்ரவர்ஸியும் இல்லாம நிம்மதியா இருக்கேன். இனிமேலும் இப்படியே இருந்துக்குறேன். என்னைப் பற்றிய அந்த மாதிரி பேச்செல்லாம் இனிமேல் வேண்டாம்..” என்றார்.
பின்னால் பேச வந்த உதயநிதி ஸ்டாலின், “மதன் கார்க்கி சொன்னதுபோல் தயாரிப்பாளர் என் நம்பரை அழுத்தவில்லை. நான்தான் தயாரிப்பாளர் நம்பரை அழுத்தினேன்…” என்றே தன் பேச்சைத் துவக்கினார்.
மேலும் தொடர்ந்து பேசும்போது, “இந்தப் படத்தின் பாடலை ரேடியோவில் கேட்டபோதே பிடித்திருந்தது. என்ன பாடல், எந்த படம் என்று விசாரித்துவிட்டு, யுடியூபில் இதன் டிரெயிலரை பார்த்தேன். பார்த்ததும் பிடித்திருந்தது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சந்திரனை ஏற்கனவே எனக்குத் தெரியும். சிங்கப்பூரில் அவரைப் பார்த்து பேசியிருக்கிறேன். இவர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்று தெரிந்ததும், அவருக்கு போன் செய்து, ‘உங்க படம் டிரெயிலர் பார்த்தேன். நல்லாயிருக்கு’ன்னு சொன்னேன். ‘படம் ரெடியா இருக்கு.. பார்க்குறீங்களா?’ன்னு கேட்டார். சரின்னு படத்தைப் போட்டுக் காட்டச் சொல்லி பார்த்தேன். படம் பார்த்துவிட்டு மறுநாள் காலை நானே போன் செய்து, ‘இது போன்ற முயற்சிகளை வரவேற்க வேண்டும்.. நானே வாங்கிக்கிறேன்’னு சொல்லிட்டேன்.
இன்றைய செல்போன் தொழில் நுட்பத்தை வைத்து புதுமையாக ஒரு கதையில் படமாக்கியிருக்கிறார்கள். படத்திற்குத் தேவையான செலவையும் செய்திருக்கிறார்கள். இயக்குநரின் கடின உழைப்பை படத்தில் பார்த்தேன். ஒரு கமர்ஷியல் சினிமாவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் இந்தப் படத்துல இருக்கு. இந்தப் படத்துல லவ் டிராக் ரொம்ப நல்லா இருக்கு. அதேபோல நகுல் நல்லா டான்ஸ் ஆடுவாரு.. இந்தப் படத்துல முதல்முறையா பயங்கரமா நடிச்சிருக்காரு.
எங்களது ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் நாங்களே தயாரித்து வெளியிட்ட படங்கள் வேண்டுமானால் வெற்றி பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், நாங்கள் வாங்கி ரிலீஸ் செய்த படங்களுக்கு 100 சதவிகிதம் சக்சஸ் கிடைச்சிருக்கு. இந்தப் படமும் நிச்சயம் அதேபோல ஹிட்டாகும்னு நம்புறேன்.. மீடியாக்கள் இது போன்ற நல்ல முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்..!” என்றார் உதயநிதி ஸ்டாலின்.