பழம்பெரும் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரின் ‘நெஞ்சம் நிறைந்த நினைவுகள்’..!

பழம்பெரும் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரின் ‘நெஞ்சம் நிறைந்த நினைவுகள்’..!

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் தனது திரைப்பட அனுபவங்களையெல்லாம் ‘நெஞ்சம் நிறைந்த அனுபவங்கள்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார்.

Picture

ஏவி.எம். நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநராக அறியப்பட்டவர் ஏ.சி.திருலோகசந்தர். இவரது சீடர்தான் பிரபல இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த ‘வீரத்திருமகன்’, ‘நானும் ஒரு பெண்’, ‘ராமு’, ‘அதே கண்கள்’, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா’ ஆகிய படங்களையும், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘தெய்வமகன்’, ‘இரு மலர்கள்’, ‘என் தம்பி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘பாரதவிலாஸ்’, ‘பாபு’, ‘எங்க மாமா’, ‘டாக்டர் சிவா’, ‘அன்பே ஆரூயிரே’ ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் 25 படங்களை இயக்கிய பெருமை இவருக்கு உண்டு.

மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த ‘வணக்கத்துக்குரிய காதலியே’, நடிகர் முத்துராமன் நடித்த ‘தீர்க்க சுமங்கலி’, நடிகர் சிவக்குமார் நடித்த ‘பத்ரகாளி’ போன்ற புகழ் பெற்ற படங்களையும் இயக்கியவர் இவர்தான்.

நடிகர் சிவக்குமாரை ஏவி.எம். தயாரிப்பில் ‘காக்கும் கரங்கள்’ படத்தில் அறிமுகப்படுத்தியவரும் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர்தான். ஏவி.எம். சரவணன் அவர்களின் மிக நெருங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர்.

book release 1

இவர் தனது திரையுலக அனுபவங்களை ‘நெஞ்சம் நிறைந்த அனுபவங்கள்’ என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதனை வசந்தா பதிப்பகம் வெளியிட்டது. இந்தப் புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் மைலாப்பூரில் மேனா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நல்லி குப்புசாமி செட்டியார் புத்தகத்தை வெளியிட நடிகர் சிவக்குமார் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஏவி.எம்.சரவணன் அவர்களும் கலந்து கொண்டார்.