இயக்குநர் சுந்தர் சி.யின் இயக்கத்தில் வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அரண்மனை’ திரைப்படம் 1978-ல் வெளிவந்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் கதையில் எடுக்கப்பட்டிருக்கிறதென்றும் எனவே தன் அனுமதியில்லாமல் அந்தப் படத்தின் கதையை படமாக்கியிருப்பதால் ‘அரண்மனை’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி ‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் எம்.முத்துராமன் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருப்பது தெரிந்ததே..
இதில் திடீர் திருப்பமாக ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படமே மலையாள படமொன்றில் ரீமேக் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
‘யஷகானம்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படமாம். இந்த ‘யஷகானம்’ படத்திற்கு கதை எழுதி இயக்கியவர் பிரபல நடிகை ஷீலா.
அவர் இந்த ‘அரண்மனை’ படத்தின் கதை சர்ச்சை குறித்து நேற்று பேட்டியளித்திருக்கிறார். அதில், “30 வருடங்களுக்கு முன்பு நான் கதை எழுதி டைரக்டு செய்து நடித்து வெற்றி பெற்ற மலையாளப் படம் ‘யக்ஷகானம்’. அந்த படம் திரைக்கு வந்த காலகட்டத்தில் மூத்த பத்திரிகையாளரும், என் மூத்த சகோதரரைப் போன்றவருமான மதிஒளி சண்முகம் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.
அவருக்கு உதவும் வகையில் ‘யக்ஷகானம்’ படத்தை தமிழ் உள்பட மற்ற மொழிகளில் ‘ரீமேக்’ செய்வதற்கான உரிமையை நான் அவருக்கு வழங்கினேன். அந்தக் கதைதான் துரை டைரக்சனில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற பெயரில் வெளிவந்தது.
‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் கதை உண்மையில் என்னுடையது, ஆனால் இப்போது சிலர் அதற்கு உரிமை கொண்டாடுகிறார்கள். அது, நான் எழுதிய கதை. வேறு யாருக்கும் அதில் உரிமை கிடையாது. ‘அரண்மனை’ படத்தில், ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் சாயல் இருப்பதாக கூறுகிறார்கள். நான் அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. பொதுவாகவே திகில் படங்களில் ஒரு வீடு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். அதில் காதல் இருக்கும், ‘பிளாஸ்பேக்’கும் இருக்கும். பேய் படங்களில் ஒரு படத்தின் சாயல் இன்னொரு படத்தில் இருப்பது சகஜம்தான். அந்த வகையில் ‘அரண்மனை’ படத்தில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் சாயல் இருப்பதில் தவறில்லை. என் கதை என்பதற்காக ‘அரண்மனை’ படத்தை நான் நிறுத்தப் போவதில்லை. அதற்காக எந்த உரிமையும் கொண்டாடப் போவதில்லை. ஓடுகிற படத்தை நிறுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது..” என்று சொல்லியிருக்கிறார்.
ரீமேக் படத்தின் கதைக்கே உரிமை கொண்டாடுவது விசித்திரம்தான்..!