full screen background image

“கன்னத்துல அறைஞ்சு பாட வையுங்க என்றார் அப்பா..” – உருகும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

“கன்னத்துல அறைஞ்சு பாட வையுங்க என்றார் அப்பா..” – உருகும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

36 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் டப் செய்யப்பட்டு வரும் அக்டோபர் 2-ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது ‘சங்கராபரணம்’ திரைப்படம்.

இந்தப் படத்தில் பாடிய அனுபவம் பற்றி கூறுகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

“கடந்த 36 ஆண்டுகளாக ‘சங்கராபரணம்’ படம் பற்றி எத்தனை மணி நேரம் பேசியிருப்பேன், எந்தெந்த இடங்களில்.. பேசியிருப்பேன், எந்தெந்த தொலைக்காட்சிகளில் பேசியிருப்பேன், எந்தெந்த மொழிகளில் பேசியிருப்பேன் என்று கணக்கிட முடியாது.

என் தொழில் வாழ்க்கையில் ‘சங்கராபரணம்’ மிகப் பெரிய அத்தியாயம். எனக்கு முதன்முதலாக தேசிய விருது வாங்கிக் கொடுத்த படம் இதுதான் என்கிறவகையில் எனது திரையுலக வாழ்க்கையில் மிக, மிக முக்கியமான படம் இது.

நான் ஒரு நாளைக்கு நாலைந்து ரெங்கார்டிங் என்று பரபரப்பாக இருந்த காலம் அது. ‘சங்கராபரணம்’ படத்தை தெலுங்கில் எடுத்துக் கொண்டிருக்கும்போது கே.வி. மகாதேவன் அண்ணா, என் வீட்டிற்கு வந்து என்  அப்பாவிடம் இந்தப் படத்தின் கதையைச் சொன்னார்.

கதையைக் கேட்டுவிட்டு இம்ப்ரஸ்ஸாகிவிட்ட எனது தந்தை, ‘முதல்ல உங்க படத்துக்கான பாடல்களை பாடிவிட்டு, பிறகு இவனை வேறு பாடல் பதிவுக்கு போகச் சொல்லுங்கள்..’ என்றார். ‘இந்தப் படத்துல இவன் ஒழுங்கா பாடலைன்னு சொன்னா, இவன் கன்னத்தில் அறைந்து பாட வையுங்கள். இப்படி ஒரு வாய்ப்பு இவனுக்கு கிடைக்குமா..?’ என்றார் என் அப்பா.

படத்தின் கதையை இயக்குநர் கே. விஸ்வநாத் என்னிடம் சொன்னபோது எனக்குள் பயம் ஏற்பட்டது. ‘எனக்கு சாஸ்திரிய சங்கீதம் தெரியாது. அந்தப் பயிற்சி எடுக்காதவன் நான். எனவே என்னால் பாட முடியாது.. விட்ருங்க’ என்று மறுத்தேன். ஆனால் கே.வி.மகாதேவன் விடவில்லை.

அவரைவிட அவரது உதவியாளர் புகழேந்தி சார் விடாமல் வற்புறுத்தி, “கொஞ்சம் டைம் எடுத்துட்டு, அதைக் கத்துக்கிட்டு வந்தாவது பாடுங்கள்..” என்று ஊக்கம் கொடுத்தார். அவரே அந்தப் பாடலை ஒரு டிராக்கில் பாடி அதை கேசட்டில் பதிவு செய்து கொடுத்தார். அதை லூப் மாதிரி வைத்து எங்கு போனாலும் காரில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் கேட்டு, கேட்டு எனக்குள் மனப்பாடம் ஆன பிறகுதான் பாடல் பதிவுக்கே போனேன்.

இதில் நடித்த நடிகர் சோமயாஜுலுவை இயக்குநர் கே.விஸ்வநாத்திடம் அறிமுகம் செய்து வைத்ததே நான்தான். அவர் அதற்கு முன் ‘ராரா கிருஷ்ணா’ என்கிற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தார். நான்தான் அதற்கு இசையமைத்திருந்தேன். அந்த நட்பின் அடிப்படையில் இயக்குநர் விஸ்வநாத்திடம் சோமயாஜூலுவை அறிமுகம் செய்தேன். பின்பு அவரே இந்தப் படத்தில் நடித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்..

மும்பையிலிருந்து வந்திருந்த லதா மங்கேஷ்கர் அம்மா, சிவாஜி அண்ணா, நான் எல்லாரும் ஒன்றாக இருந்து இந்தப் படத்தைப் பார்த்தது மறக்க முடியாதது. நான் முதன்முதலாக தேசிய விருது வாங்கியதும் இந்தப் படத்தில் சிறப்பாக பாடியதற்காகத்தான். நான் மட்டுமல்ல, வாணிஜெயராம், கே.வி.மகாதேவன், கே.விஸ்வநாத்துக்கும் தேசிய விருதும் கிடைத்தது. சிறந்த பிராந்திய மொழிப் படம் என்கிற தேசிய விருதும் கிடைத்தது. பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு இப்படத்தில் அதிகம் பேசப்பட்டது. படத்தில் நடித்த சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, அல்லு ராமலிங்கய்யா, சந்திரமோகன், ராஜலட்சுமி ஆகியோருக்கு பெரிய பாராட்டுகள். கிடைத்தன. எல்லாருடைய இதயங்களையும் தொட்ட கதை இது.

பாடல்கள் பதிவின்போது ஜானகியம்மா, வாணி ஜெயராம் அம்மா இருவரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த விதம் மறக்கவே முடியாது. சீனாக்குட்டி அண்ணன் மிருதங்கம் வாசித்தார். ராகவன் சார் வீணை வாசித்தார். சுதர்சன் புல்லாங்குழல் வாசித்தார். இப்படி பல சம்பிரதாய மேதைகள் பங்கு பெற்று எனக்கு ஆசி கொடுத்து உருவான பாடல்கள் அவை. இந்தப் படம் தெலுங்கிலே வெளியாகி தமிழ்நாட்டில் ஓராண்டு ஓடியது.

சாஸ்திரிய சங்கீதத்தில் ஒரு பாடல் பாட வேண்டுமென்றால் கூட ஆலாபனை செய்து நிரவல் பண்ணி ஸ்வரம் பாட ஒரு மணி நேரம் பிடிக்கும். ஆனால் சினிமா ரசிகர்கள், சாதாரண மக்களையும் பாட வைத்தவர் ‘திரையிசைத் திலகம்’ கே.வி.மகாதேவன். நான் எந்த மேடை ஏறினாலும் ‘சங்கராபரணம்’ படப் பாடல்களை பாடாமல் விட்டதில்லை. பாடாமல் என்னை ரசிகர்களும் விட்டதில்லை. என்னை நம்பி மீண்டும் இந்தப் படத்தில் பாட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

இந்தப் படம் மலையாளத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. பாடல்கள் மட்டும்தெலுங்கிலேயே இருந்தன. இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது 36 ஆண்டுகள் கழித்து நவீன தொழில் நுட்பத்துடன் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இது இப்போது தெவையா என சிலர் கேட்கக் கூடும். நவீன ஒலி, ஒளி நுட்பத்தில் படம் பளிச்சென இருக்கும்படி மெருகேற்றப்பட்டு வருகிறது. நிச்சயம் வரவேற்கப்படும். ஒரு காலத்தில் தெலுங்கிலேயே வெளியாகி வரலாறு படைத்த படத்தை தமிழிலேயே பார்த்திடும் பெருமை எல்லாருக்கும் கிடைக்கும். இந்தப் படம் தமிழில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பிரார்த்திக்கிறேன்…”

இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறினார்.

‘சங்கராபரணம்’ திரைப்படத்தின் இனிமையான பாடல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.. கேட்கலாம்.

நன்றி : ANAND REDDY CH K

Our Score