தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி படங்களிலுமே எழுதப்படாத ஒரு விதி இருக்கிறதென்றால் அது ஒரு நடிகைக்கு கல்யாணமாகிவிட்டால் அவர் ஹீரோயின் கேரக்டருக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்பதுதான்.
இதனாலேயே பல நடிகைகள் இப்போதும் தங்களுக்குத் திருமணமாகிவிட்டதையே வெளியில் சொல்லாமல் நடித்து வருகிறார்கள். சிலர் மட்டுமே விதிவிலக்காக கதையின் நாயகியாக நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் “அப்படி கல்யாணமான நடிகைகளுக்கு அக்கா, தங்கச்சி கேரக்டர் கொடுக்குற காலமெல்லாம் மலையேறிவிட்டது…” என்கிறார் பாலிவுட்டின் முன்னாள் நடிகையான ஈஷா தியோல்.
நேற்றைக்கு சென்னையில் ஈஷோ தியோல் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசும்போது இது குறித்துப் பேசினார்.
அவர் பேசும்போது, “சென்னை எப்போதுமே என் சொந்த ஊர்.. நான் சிறு வயதில் விடுமுறைக்காக இங்கேயே என் தாத்தா வீட்டில் வந்து தங்கி செல்வேன். இப்போது எனது குழந்தைகளையும் விடுமுறை என்றால் சென்னைக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். சென்னை வந்தாலே நல்ல ‘ரசம்’ சாப்பிடுவதற்கு கிடைக்கிறது
ஏற்கனவே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘ஆய்த எழுத்து’ படத்தில் நடித்துள்ளேன். அதுபோன்று நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், மீண்டும் தமிழில் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை..
குழந்தைகளை கவனித்துக் கொள்ளவே நேரம் சரியாக இருப்பதால், அடிக்கடி தமிழ் படங்கள் பார்க்க முடிவதில்லை. நல்ல படங்கள் என நண்பர்கள் மூலமாக தெரிய வரும்போது, அந்தப் படங்களைத் தவறாமல் பார்த்து விடுவேன்.
குறிப்பாக சூர்யாவின் படங்களை தவறாமல் பார்த்து விடுவேன்.. நான் சூர்யாவின் பரம ரசிகையும்கூட. அதேபோல தென்னிந்திய நடிகைகளில் தமன்னாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
திருமணம் ஆகிவிட்டாலே, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில்தான் நடிக்க வேண்டும் என்பது இல்லை. அந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்போது, திருமணமான பெண்கள் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். ஓடிடி தளங்கள் வேறு உருவாகிவிட்டன. நல்ல கதை மற்றும் எனக்கேற்ற கதாபாத்திரம் கிடைத்தால் நான் நிச்சயமாக நடிப்பேன்..” என்றார் ஈஷா தியோல்.