நடிகர் வடிவேலுவுக்கும், அஜீத்துக்கும் இடையில் என்னதான் பிரச்சினை..?

நடிகர் வடிவேலுவுக்கும், அஜீத்துக்கும் இடையில் என்னதான் பிரச்சினை..?

நடிகர் வடிவேலு எவ்வளவுக்கு எவ்வளவு சிறந்த நகைச்சுவை நடிகர் என்றபோதிலும் இன்னொரு பக்கம் சக நடிகர், நடிகையரோடு பல கசப்பான அனுபவங்களையும் கொண்டவராக இருக்கிறார்.

நடிகர் அஜீத்திற்கும், வடிவேலுவுக்கும் இடையில் ஏதோ பெரிய பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனாலேயே அஜீத்தின் படங்களில் வடிவேலு நடிக்க வைக்கப்படவில்லை என்றும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கள் இன்றும் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இதை உறுதிப்படுத்தும்விதத்தில் ஒரு பேட்டியில் இது பற்றி பெயர் குறிப்பிடாமல் குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் வடிவேலு.

அந்தப் பேட்டியில் நடிகர் வடிவேலு பேசும்போது, “2002-ம் வருஷம் ஒரு படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் இப்போதைய மிகப் பெரிய நடிகர்தான் ஹீரோ. நானும், அவரும் ஒரு காட்சியில் இணைந்து நடித்துக் கொண்டிருந்தோம். அதில் ஒரு காட்சியில் நான் அந்த நடிகரை “ஏண்டா டேய்” என்று அழைக்க வேண்டும்.

துணை இயக்குநர்களிடமிருந்து டயலாக் பேப்பரை வாங்கிப் படித்துவிட்டு அந்த ஒற்றை வார்த்தையை மட்டும் மாடுலேஷனில் விதம், விதமாகப் பேசினால் நல்ல காமெடி வருமே என்று நான் யோசித்தேன். இதனை பல முறை சொல்லிப் பார்த்தால் நன்றாக இருக்குமே என்றும் நினைத்தேன்.

இதுதான் நான் செய்த தவறு. இந்த ஒத்திகையை நானே தனியாக செய்து பார்த்திருக்கலாம். ஆனால் நம்ம தம்பிதானே என்று நினைத்து அந்த நடிகரின் எதிராகவே போய் நின்று ஏண்டா டேய்.. என்பதை பலவிதங்களில் சொல்லிக் காட்டினேன்.

இதைக் கேட்டு அதிர்ச்சியான அவர் அப்படியே எதுவும் பேசாமல் போய்விட்டார். அதன் பின்பு அந்தக் காட்சி படமானது. அதிலும் அவர் நடித்தார். ஆனால் அடுத்த நாளில் இருந்து அவர் என்னுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை. எனக்கு அப்போதுதான் தெரிந்தது நாம் நேற்றுப் பேசியதில் இந்தத் தம்பி வருத்தமாகிவிட்டார் என்று.

நானும் அவரிடத்தில் சென்று நடந்ததைச் சொல்லி அது சும்மா நடிப்புக்காக செய்தது என்று சொன்னேன். ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. என்னைக் கண்டு கொள்ளவும் இல்லை. அந்தப் படம் முடியும்வரையிலும் நான் அது பற்றி பல முறை அவரிடத்தில் எடுத்துச் சொன்னேன். அவர் கேட்கவில்லை. நானும் அப்படியே விட்டுவிட்டேன். அதன் பின்பு அவருடைய படங்களில் நடிக்க எனக்கு அழைப்பே வரவில்லை. நானும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் வடிவேலு.

2002-ம் வருடம் வெளியான அஜீத்தின் திரைப்படம் ‘ராஜா’. அந்தப் படம்தான் வடிவேலு, அஜீத்துடன் கடைசியாக சேர்ந்து நடித்தது. அதனால் வடிவேலு சொல்லியிருப்பது அஜீத்தைத்தான் என்று இந்தக் கதையைக் கேட்ட அனைவருமே அடித்துச் சொல்கிறார்கள்.

கலைஞர்களுக்குள் ஏற்படும் இது போன்ற பிரச்சினைகளையெல்லாம் பேசித் தீர்த்துக் கொண்டு சமரசமாகச் செல்வதுதான் அவர்களுக்கும் நல்லது. திரையுலகத்திற்கும் நல்லது..!

\

Our Score