“இந்த டைரக்டர்கிட்ட ‘#MeToo’ பிரச்சினையே கிடையாது…” – சொல்கிறார் நடிகை சித்ரா

“இந்த டைரக்டர்கிட்ட ‘#MeToo’ பிரச்சினையே கிடையாது…” – சொல்கிறார் நடிகை சித்ரா

‘Me Too’ பிரச்சினை நான்காண்டுகளுக்கு முன்பாக உலகம் தழுவிய பிரச்சினையாக எழுந்தபோது தமிழ்ச் சினிமாவுலகத்திலும் அதிகமாகப் பேசப்பட்டது.

இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி சினிமாக்களில் இந்த ‘Me Too’ பிரச்சினையால் பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள் என்று பல தரப்பட்டவர்களும் மாட்டிக் கொண்டு முழித்தார்கள்.

தமிழ்ச் சினிமாவில் இயக்குநர் சுசி கணேசன் மற்றும் கவிஞர் வைரமுத்து மீது மட்டும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான புகார் எழுந்தது. மற்றபடி தெலுங்கு நடிகையான Srireddy தினத்துக்கு சில நடிகர்கள், சில இயக்குநர்கள் மீது புகாரை அள்ளி வீசினார். பின்பு அவரே அமைதியாகிவிட்டார்.

உண்மையில் சொல்லப் போனால் அனைத்து மொழி திரையுலகங்களிலும் இந்த ‘Me Too’ பிரச்சினையை சந்தித்திருக்காத நடிகைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தங்களுடைய துவக்கக் கால திரையுலக வாழ்க்கையில் யாரோ ஒருவர் மூலமாக, அவர்கள் அதை சந்தித்திருக்க வாய்ப்புண்டு.

“இது உண்மைதான்” என்கிறார் நடிகை சித்ரா. ‘நல்லெண்ணெய்’ சித்ரா என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் இவர் இதுவரையிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ‘Me Too’ பிரச்சினை பற்றிப் பேசியிருக்கிறார்.

அதில், “நானும் நடிக்க வந்த புதிதில் அது போன்ற பிரச்சினைகளை சந்தித்தேன். முதலில் ஒரு சில படங்களில் நடிக்கும்வரைக்கும் அது பற்றிய புரிதல் எனக்கில்லை. ஆனால் அதற்குப் பின்பு அது புரிந்து போனது.

நாமாகவே அதிலிருந்து விலகிப் போய்விட்டால் நல்லது. ஒரு முறை அதில் சிக்கிவிட்டால் அந்த ஒரே படத்தோடு நாமும் போய்விட வேண்டியதுதான். அதற்குப் பிறகு நமது பெயரும் கெட்டு, இந்த பீல்டிலும் இருக்க முடியாமல் போய்விடும்.

எனக்கு முழுமையான பாதுகாப்பாக தமிழில் இருந்த படக் குழு என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார் ஸாரின் யூனிட்டுதான்.

‘சேரன் பாண்டியன்’ படத்தில் என்னை நடிக்கக் கேட்பதற்காக என் வீட்டுக்கு வந்து பேசினார். “சின்ன பட்ஜெட் படம். அதுனால்தான் உங்களைத் தேடி வந்திருக்கோம்..” என்று மிக மரியாதையாக அழைத்தார்.

நானும் நடித்தேன். முதல் ஷெட்யூல் நல்லபடியாக முடிந்தது. இரண்டாவது ஷெட்யூலுக்கு நான் சென்றபோது கே.எஸ்.ரவிக்குமார் ஸார் கலாட்டா செய்து என்னை வரவேற்றார்.

அந்த யூனிட்டே ஒரு குடும்பம் மாதிரியிருந்தார்கள். மதிய வேளைகளில் அனைவரும் ஒன்றாக அமர்ந்தே சாப்பிடுவார்கள். மனம் விட்டுப் பேசுவார்கள். ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொள்வார்கள்.

கே.எஸ்.ரவிக்குமார் ஸார் கடின உழைப்பாளி. ஸ்பீடு ஒர்க்கர். அப்படி பேய் மாதிரி உழைப்பார். அவரே பணமும் பட்டுவாடா செய்வார். அன்றைய சாயந்தரமே அனைவருக்கும் பைசா, காசு பாக்கியில்லாமல் கொடுத்திட்டுத்தான் கிளம்புவார்.

அப்போதே நமக்கு ரொம்ப சவுகரியமா இருக்குறது இந்த யூனிட்டுதான்னு நான் நினைச்சேன். இதுனாலேயே K.S.ரவிக்குமார் ஸார் படங்கள்ல தொடர்ந்து நான் நடிச்சிட்டிருந்தேன்…” என்று சொல்லியிருக்கிறார் நடிகை சித்ரா.

Our Score