நடிப்பில் மட்டுமின்றி, தன்னுடைய அழகாலும் எல்லோரையும் கவர்ந்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்த நடன போட்டி மூலம் அறிமுகமாகி, சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இரண்டு படங்களின் மூலம் பிரசித்தி பெற்றவர். இவரது தந்தை ராஜேஷ் தெலுங்கு திரையில் பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக கண்ணியத்துடன் படப்பிடிப்பு தளங்களில் நடந்து கொள்பவர் என பெயர் எடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னை Holy Angels பள்ளியில் படித்தார். எத்திராஜ் கலூரியில் பட்டம் பயின்ற இவர், கல்லூரி நாட்களில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்.
‘எந்த விஷயமானாலும் சரி , அதில் முதலிடத்தை பெற வேண்டும் என நினைப்பவள் நான். அந்த எண்ணமும் எனக்கு மிகவும் பிடித்தமான நந்திதாதாஸ் , காஜோல் ஆகியோரின் பாதிப்பும் என்னை உயர்ந்த இடத்துக்கு கூட்டி செல்லும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கையுண்டு..” என கூறும் ஐஸ்வர்யா, “படத்துக்கு படம் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதே தனக்கு பிடிக்கும்…” என்றார். “அந்த வகையில் தான் நடித்து, விரைவில் வெளி வர இருக்கும் ‘திருடன் போலீஸ்’ திரைப்படம் தன வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும்..” என்றார்.
“இயக்குனர் கார்த்திக் நம்மை நோகடிக்காமல் நம்மிடம் இருந்து வேலை வாங்குவதில் வல்லவர். அந்த வகையில் என்னையும் , தினேஷையும் சிரிக்க வைத்தே வேலை வாங்கி விட்டார். படத்தின் முன்னோட்ட டிரெயிலரே எங்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. படம் முழுக்க மிகவும் யதார்த்தமான நகைச்சுவை கலந்த ஒரு வித்தியாசமாக இருக்கும்…” என படத்துக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார் ஐஸ்வர்யா.
“தேசிய விருது மட்டுமின்றி தமிழ் திரை உலகில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்த எஸ்.பி.பி. சரண் அவர்களின் தயாரிப்பில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையான விஷயம்..” என பெயருக்கேற்ற குளிர்ச்சியான புன்னகையோடு கூறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.