நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கும் பொருட்டு, நடிகர்கள் விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் நேற்று கரூர் சென்றனர். அங்கு நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.
அந்தக் கூட்டத்தில் நடிகர் விஷால் பேசும்போது, “நாங்கள் உங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம். இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஒருவேளை வெற்றி வாய்ப்பினை இழந்தாலும் உங்களுடன் எப்போதும் துணை நிற்போம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாங்கள் கேள்வி கேட்கக் கூடாது என்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் நடிகர்கள் இணைந்து புதிய கட்டிடம் கட்டினால் சங்கம் சார்ந்த நாடக நடிகர்கள் உள்பட 3 ஆயிரம் பேரும் பயன் பெறுவார்கள்.
ஆனால் தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் எங்களை இழிவுபடுத்தி பேசியதால்தான் தேர்தலில் நிற்பது என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம். நீங்கள் எங்கள் அணிக்கு ஓட்டு போட வேண்டும். நடிகர்களிடையே பிரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அது தவறு. பிரிவு ஏற்படவில்லை. கருத்து வேறுபாடுதான் ஏற்பட்டுள்ளது…” என்றார்.
இதே கூட்டத்தில் நடிகர் கருணாஸ் பேசும்போது, “சென்னையில் நடிகர் சங்க கட்டிடத்தை நடிகர்களே சேர்ந்து கட்ட வேண்டும் என கூறினோம். அதில் என்ன தவறு இருக்கிறது..? ஆனால் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். சங்க உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் பதில் அளிக்க முடியதா? நாடக நடிகர்களையும், சினிமா நடிகர்களையும் ஒன்று சேர முடியாத நிலையை உருவாக்குகிறார்கள்..” என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.