full screen background image

நடிகர் விஷாலால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்துள்ள பெரிய நன்மை..!

நடிகர் விஷாலால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்துள்ள பெரிய நன்மை..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளிவந்த இப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

அதே சமயம் இந்தப் படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு சென்சார் சர்டிபிகேட்டுக்காக மும்பையில் CBFC அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது அங்கு உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விஷயத்தை விஷால் பகிரங்கமாக வெளியிட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தை நடிகர் விஷால் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் அவர்களுக்கு  தெரியப்படுத்தி இதன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இது தொடர்பான வழக்கை மும்பை CBCID விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழ் படங்களை இந்தியில் வெளியிட சென்சார் சர்டிபிகேட் வாங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

இதுவரை மும்பையில் மட்டுமே இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அந்த சான்றிதழை சென்னையில் உள்ள சென்சார் போர்டு அலுவலகத்திலேயே பெற்று கொள்ளலாம் என்று மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஏற்கெனவே தமிழ் மொழியுடன் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி பிரதிகளுக்கும் தமிழகத்திலேயே சென்சார் சர்டிபிகேட் பெற்று கொள்ளும் வசதி இருந்து வரும் நிலையில், தற்போது இந்தி மொழி பிரதிக்கும் இந்த முறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இனிமேல் எந்த தமிழ்த் தயாரிப்பாளரும் தமிழ் திரைப்படங்களின் இந்தி டப்பிங் பிரதியின் சென்சார் சான்றிதழுக்காக மும்பை சென்று CBFC-யை அணுக வேண்டிய அவசியமில்லை.

நடிகர் விஷாலால் கிடைத்திருக்கும் இந்த மாற்றத்தால் தமிழ் சினிமாவுக்கு,  தயாரிப்பாளர்களுக்கு பெரும் நன்மை கிடைத்துள்ளது.

இதனால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் விஷாலுக்கு நன்றியையும், வாழ்த்தையும் கூறி பாராட்டி வருகின்றனர்.

Our Score